887
 

(அ. சி.) வியாத்தி ஆகும் - உள்ளடங்கி இருக்கும் ஆட்டி - அலக்கழித்து. கேவலம் அச் சகலம் - கேவல நிலையிலும் சகல நிலையிலும்.

(11)

2198. அந்தரஞ் சுத்தாவத் தைகே வலத்தாறு
தந்தோர்தஞ் சுத்தகே வலத்தற்ற தற்பரத்
தின்பால் துரியத் திடையே யறிவுறத்
தன்பால் தனையறி தத்துவந்தா னாமே.

(ப. இ.) இந் நிலையில் எய்தும் தூயநிலைக்கு வழியாகவுள்ளது சேய தீய நிலையாகிய புலம்புநிலையாகும். சேய - தொன்மையாகிய. இந் நிலையினைக் கூட்டுவித்து உடனாய் நிற்கும் தற்பரன் சிவன். அவனருளால் மலம் அறும். அறவே சிவபெருமானிடத்துப் பேருறக்க நிலைப் பெற்றியினை ஆருயிர் எய்தும். அந் நிலைக்கண் ஆருயிர் 'தன்மையுடைய தன்னுணர்வால் தன்னையறியும்.' அறியவே தான் மெய்ப்பொருட்கு அடிமையாய் மெய்ச்சார்பினனாகத் திகழும். தத்துவம் - மெய்; நிலைபேறு;

(அ. சி.) ஆறு - மூலம், வழி. தன்பால் தனையறி - தனக்குள்ளே தன்னை அறியும்.

(12)

2199. ஐயைந் தொடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகுந்
துய்யவவ் வித்தை முதன்மூன்றுந் தொல்சத்தி
ஐய சிவஞ்சித்தி யாந்தோற்ற 1மவ்வாறே.

(ப. இ.) உடன்மெய் இருபத்து நான்குடன் ஆளுங்கூடி ஆருயிரில் ஒடுங்கும். அஃதாவது, அம் மெய்கட்கு முதல்வராகக் காணப்படும் சீகண்ட அரனால் ஒடுக்கப்படும் என்பதாம். ஆன்மா என்று சொல்லப்படும் உணர்வு மெய் ஆறும் அழிவிலானாகிய அனந்தரால் ஒடுக்கப்படும். உணர்த்துமெய் ஐந்தனுள் ஆசான், ஆண்டான், அருளோன் ஆகிய மூன்றும் தொல் சத்தி என்னும் ஒடுக்கநிலைச் சிவனால் ஒடுக்கப்படும். அன்னைமெய் முதன்மைச் சிவனால் ஒடுக்கப்படும். அத்தன்மெய் அச் சிவனாகவே நிற்கும். ஐயசிவன் - சுத்த சிவன்; முதன்மைச் சிவன். தொல்சத்தி : வனப்பாற்றல்; அன்னை. மீண்டும் தோன்றுங்கால் இம் முறையே தோன்றும். இருபத்தைந்து மெய்களும் திருவருளால் உண்மைகண்ட தூயநிலையில் விட்டு நீங்கும்.

(அ. சி.) வித்தை முதல் மூன்று - சுத்த வித்தை. ஈசுரம், சாதாக்கியம் ஆகிய மூன்று தத்துவங்கள். சிவம் சத்தியாம் - சத்தி, சிவம் ஆகிய இரண்டு தத்துவங்கள்.

(13)

2200. ஐயைந்து மான்மாவில் ஆறோ டடங்கிடும்
மெய்கண்ட மேன்மூன்று மேவுமெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண
எய்யும் படியடங் குந்நாலேழ் எய்தியே.


1. தத்துவமெண்மூன். சிவஞானசித்தியார், 2. 3 - 22.