894
 

(ப. இ.) பெத்தமாகிய பிறப்பும், முத்தியாகிய சிறப்பும் ஆருயிர்கட்கு எய்திய காரணம் என்னவென்று ஆராய்ந்தால் அவ் வுயிர்களைச் செந்நெறியிற் செலுத்தும் நன்மையின்பொருட்டு என்றாகும். இத் திருவருட் செயல்கள் சிவபெருமானின் திருவுள்ளக் குறிப்பான் நிகழ்வன. அதுவும் மிகவும் எளிமையாகக் கருதியவாறே நிகழ்வன. அக் குறிப்புத் தோன்றவே 'திருவிளையாட்'டென ஓதினர். அவ்வுயிரைத் தூய்மைக்கண் நிறுத்தும் தூயவழியும் அதுவேயாம். திருவருளால் ஆருயிர் இவ் வுண்மையினை யுணரும். உணர்ந்ததும் தம் அறிவு முழுவதும் அச் சிவன்பாலே பற்றி இன்புறும்.

(அ. சி.) உயிரிறை - உயிருக்கு இறைவன்.

(31)

2218. ஐம்மலத் தாரு மதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரு மருவினைப் பாசத்தார்
ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யாள்பவர்
ஐம்மலத் தாரர னார்க்கறி வோரே.

(ப. இ.) ஆணவம், கன்மம், மாயை, மாயையாக்கம், நடப்பாற்றல் என்னும் ஐம்மலங்களுமுடையவர் மிகுந்த பிணிப்பினராகிய சகலத்தவராவர். இவர்கள் இருள்சேர் இருவினைப் பிணிப்பினர். இவர்கள் துறக்கவுலக இன்பத்தை நுகர்பவராவர். இத்தகையோர் சிவபெருமானாகிய அரனாரை அறியும் அறிவுடையராகார். அரனார்க்கு என்பது இரண்டாம் வேற்றுமைப்பொருளில் வந்த நான்காம் வேற்றுமை உருபின் மயக்கம். அறிவோரே என்பது அறியார் என்னும் பொருள்பட வந்த எதிர்மறை ஏகாரம். என்னை,

"யாத னுருபிற், கூறிற் றாயினும்
பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும்."

(தொல். சொல், 106.)

என்பதனால் உருபுமயக்கம் கொள்ளப்பட்டது.

(32)

2219. கருவி லதீதங் கலப்பிக்கு மாயை
அரிய துரிய மதிலுண்ணும் ஆசையும்
உரிய சுழுனை முதலெட்டுஞ் சூக்கத்து
அரிய கனாத்தூலம் அந்நன வாமே.

(ப. இ.) கருவின்கண் அப்பால்நிலை தூவாமாயையுடன் கலப்பிப்பதாகும். பேருறக்க நிலையாவது மாயாகாரியப் பொருள்களை நுகர்வதற்கு எழும் வேட்கை. பேருறக்க உறக்கநிலைகள் எட்டுப் பாகுபாடாகும். நுண்ணுடம்பு கனாநிலையாகும். பருவுடம்பு நனவுநிலையாகும். ஆசையும் என்பதன்கண் உள்ள உம்மை இசைநிறைவாகும். எட்டுப் பாகுபாடு : பேருறக்கம், பேருறக்க வுறக்கம், பேருறக்கக் கனவு, பேருறக்க நனவு என நான்கும், அதுபோல் உறக்கத்துப் பேருறக்கம், உறக்கத்து உறக்கம், உறக்கத்துக் கனவு, உறக்கத்து நனவு என நான்கும் கூடி எட்டாகும். இவற்றைத் துரியம், துரிய சுழுத்தி, துரிய சொப்பனம், துரிய சாக்கிரம் எனவும் சுழுத்தியில் துரியம், சுழுத்தியில் சுழுத்தி, சுழுத்தியில் சொப்பனம்; சுழுத்தியில் நனவு எனவும் கூறுப.