99
 

5. உயிர் நிலையாமை

229. தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.1

(ப. இ.) பலவாம் பயன் மரங்களுள் மரத்தையும், கிளைகளையும், குளிரும் நறுமணமு மிக்க மலர் முதலியவற்றையும் உண்டாக்குவனவாகிய செந்தளிர்கள் நன்றாய்த் தழைத்துச் செழித்துக் காட்சிக்கு இனியவாய் இருந்தனவற்றையுங் காண்கின்றோம். பின் பழுப்புற்று உதிர்ந்து மரத்தை விட்டுக் கழிகின்ற முறைமையையும் காண்கின்றோம். கண்டும் அம் முறைமைபோல் நம்முடம்புக்கும் அழிவுவரும் என்று என்ணுவார் அரியர். உண்மையுணர்வார் தவறுதல் ஒரு சிறிதுமின்றி எப்பொழுதும் எம்பெருமான் அடியினையே ஏத்துதல் புரிவர். சிவனைத் தொழாதார் அனைவரையும் காலமுடிவில் காலன் வந்து உயிரினைக் கைக்கொண்டு செல்ல அழைப்பன்; அப்பொழுது அவர் என் செய்வதென்று அறியாது துன்புறுவர்.

(அ. சி.) இழைக்கின்ற - உண்டாக்கப்பட்ட. பிழைப்பு - தவறுதல். அழைக்கின்றபோது - இயமன் கூப்பிடுகிறபோது.

(1)

230. ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே.2

(ப. இ.) ஆருயிராகிய விளைநிலம் மெய் வாய் கண் மூக்கு செவியென்னும் ஐம்புலத்தார்க்கும் உரிமையாக விளைந்து கிடந்தது. அவ் ஐவரும் அவ்விளைநிலத்தினைத் தம்வழி இழுத்துக் காத்து நின்றனர். இவ் ஐவரும் சிவபெருமானின் திரு ஆணைவழி நடப்பவராவர். வழிக்கு வாராத மாவினங்களையும் மாக்களையும் வழிக்கு வரும்பொருட்டு அத்துறையில் வல்லார்பால் சில நாட்களுக்கு உரியவர்கள் விட்டுவைப்பார்களல்லவா? அதுபோல் ஆண்டவனும் தன்னை நினைப்பதாகிய நல்வழிக்கு ஆருயிர்கள் வருவதன் பொருட்டு 'ஊன்றிநின் றாரைவர்க்கு ஒற்றிவைத்தனன்.' அவ்வுயிர்கள் அருளால் அவனுக்கு அடிமையாகி விடின் அவன் அவ்வுயிர்களை 'ஏன்று கொண்டு ஒற்றியெல்லாம் சோன்று கொள்வன்.' அதுவரையும் அவ் ஐவரே காவலராவர். அவ் ஐவர்க்குந் தலைவன் சிவபெருமானே. அவனது ஆணைவழி ஆருயிர்களின் நாள் முடிவின்வழிக்


1. கொல்லத். அப்பர், 4 - 43 - 1.

2. நாமல்ல. சிவஞானபோதம், 10. 2 - 1.

" மெய்யுளே. அப்பர், 4. 54 - 9.

" ஏன்று கொண். " 4. 100 - 9.