14. மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்
 
  கான வீணையி னோசையுங் காரெதிர்
தான மாக்கண் முழக்கமுந் தாவில்சீர்
வான துந்துபி யார்ப்பு(ம்) மருங்கெலாம்.
4

     (இ-ள்.) மேன்மை........நாதமும் - மேன்மைதரும் நால்
வேதங்களினுடைய நாதமும்; விஞ்சையர்......ஓசையும - வித்தியாதரர்
முதலியோர் கானங்களினாலும் வீணைகளினாலும் செய்கின்ற ஓசைகளும்; கார்.....முழக்கமும் - மேகங்களும் யானைக்
கூட்டங்களும் ஒன்றற்கொன்று எதிராகச் செய்யும் முழக்கங்களும்;
தாஇல்சீர்......ஆர்ப்பும் - குற்றமில்லாத சிறப்புடைய ஆகாய
துந்துபிகளின் முழக்கங்களும்; மருங்கெலாம் - அதன்
பக்கங்களிளெல்லாம் (நிறைந்துள்ளன.).

     (வி-ரை.) மேன்மை நான்மறை நாதம - சத்தங்கள் இருவகைப்படும்.ஒலி எனப்படும் பொருளுடைய சத்தம் (1).
ஓசை எனப்படும் பொருளில்லாத சத்தம் (2). முன்னையது
சுத்தமாயையிலிருந்தும், பின்னையது அசுத்த மாயையின்
பரம்பரையிற் றோன்றிய ஆகாயத்திருந்தும் பிறக்கும். “ஓசை ஒலி
எலாம் ஆனாய் நீயே” என்பது அப்பர் சுவாமிகள் தேவாரம்.
இங்கே நாதம், வேதம் பயிலும் ஓசைகளைக் குறித்தது. தேவர்
முனிவர்கள் துதிசெய்யும் வேத வசனங்களால் எழும் நாதத்தைக்
குறிக்கும். வேதங்கள் நாத ஒலியால் தாமே முழங்கிக்கொண்டிருக்கும்
என்பதுமாம்.

“அரவொலி யாகமங்க ளறிவாரறி தோத்திரங்கள் விரவிய வேதவொலி விண்ணெலாம்வந்
                          தெதிர்ந்திசைப்ப”
(8)

“சங்கபட கங்கருவி தாரைமுத லான
எங்கணு மியற்றுப வரின்றியும் இயம்பும்
மங்கல முழக்கொலி மலிந்த மறுகெல்லாம்”
(33)

என்று திருநொடித்தான்மலைத் தேவாரத்தும் பின்னர்த் திருஞானசம்பந்த நாயனார் புராணத்தும் கூறுவதுகாண்க. வேதம்
மேன்மைதருவதால் “மேன்மை நான் மறை” என்றார். பின்வரும்
ஓசை வகைகளைவிட மேலான நாதம் என்றுரைத்தலும் ஆம்.

     விஞ்சையர் - விஞ்சை (வித்தை) - கானம் முதலிய பல
வித்தைகளிலும் வல்ல தேவக் கூட்டத்தார். கின்னரர் முதலிய
வகுப்பார்களையும் உடன்கூட்டிக் கானம் வீணையின் ஓசை என்றார்.

     கானவீணை - கானமும், பாடும்போது உடன் வாசிக்கும்
வீணை ஓசையும் என்க. வீணாகானம் என ஒன்றாக்கியு முரைப்பர்.

     தானமாக்கள் - யானைகள். மேக கர்ச்சனை யுண்டாம்போது
யானைகள் எதிராய்ப் பிளிறும். ஆதலின் கார்எதிர் என்றார்.
கண்ணப்பர் புராணம் 6-வது பாட்டும் பார்க்க.

     துந்துபி - ஐவகைத் தேவவாத்தியங்கள். “கடவுள் மால்வரையி னுச்சி, அதிர்தரும் ஓசை ஐந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட”
(கண்ணப்பர் புராணம்- 101) காண்க.

     இப்பாட்டிலே மறைநாதம் ஒலியையும்; கானம், வீணை, ஓசை, முழக்கம்,ஆர்ப்பு இவைகள் ஓசையையும் குறித்தன. உலகியலிலே
பொருளற்ற சத்தங்களே மிகுந்தும் பொருளுள்ள சத்தங்கள்
குறைந்தும் காணபப்டுவ தியல்பாதலின் ஒலிக்கு ஒன்றும் ஓசைக்கு
ஐந்தும் கூறினார்போலும். உள்ளன என்ற வினைமுற்று
வருவித்துரைத்துக் கொள்க.

     ஆர்ப்ப - என்பது பாடபேதம்.     4