| 175. 
              | 
          கண்ணிடை 
            கரந்தகதிர் வெண்பட மெனச்சூழ் | 
            | 
         
         
          |   | 
          புண்ணிய 
            நுதற்புனித நீறுபொலி வெய்தத் 
            தண்மதி முதிர்ந்துகதிர் சாய்வதென மாடே 
            வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க. | 
          29 | 
         
       
       
       
           (இ-ள்.) 
      கண்...எய்த -இரு கண்ணுக்கும் இடையில் உள்ள ஒரு 
      நெற்றிக் கண்ணை மறைத்துச் சூழ்ந்த ஒளியுடைய வெண்துகில்போல்  
      நெற்றியிலே தூய திருநீறு விளங்கவும்; தண்மதி...சழங்க - குளிர்ந்த  
      பிறைச்சந்திரன் முதிர்ந்து கதிர் சாய்ந்த தன்மைபோல வெள்ளிய  
      நரை மயிர் முடிப்பு விழுந்து அசைந்து கிடக்கவும் (எய்தி); 
       
           (வி-ரை.) 
      இப்பாட்டும் மேல் வரும் இரண்டு பாட்டுக்களும்  
      குளகமாகி 32, 33-ம் பாட்டுக்களிலே எய்தி - வந்து - என்றான்  
      வினைமுடிவு பெறுகின்றன. முடிவு 33 பாட்டின்கீழ்க் காண்க. 
       
           கண் இடை கரந்த 
      - இடைக்கண் என மாற்றி. இடையில்  
      உள்ள நெற்றிக் கண்ணை மறைத்த என்க. இடை -  
      இடைக்காலத்தே - இப்போதைக்கு எனக் கொண்டு, தமக்கே  
      சிறப்பாக உள்ள நெற்றிக்கண்ணை இவ்வாறு வரும்பொருட்டு  
      இப்போது மறைத்து என்றுரைப்பதுமாம். இடைக் கதிர்க்கண் 
       
      கரந்த - என மாற்றி இடையிலே உள்ள தீக்கண்ணை மறைத்த 
      - என்றுரைப்பினுமாம். 
       
           கரந்த வெண்பட மெனச் 
      சூழ் - கரந்த சூழ்வெண் படம்  
      என மாற்றிக் கண்ணை மூடி மறைத்து அதைச் சூழ்ந்த வெண்துகில்  
      போல என்க. 1 படம் - துகில் - 
      துணி. சூழ் நுதல் - என்று கூட்டி  
      உரைத்தலுமாம். 
       
           புண்ணியம் - நுதல் - புனிதம் - நீறு பொலிவெய்த 
      -  
      புண்ணியப் புனித நீறுநுதலிலே பொலிவெய்த என மாற்றி யுரைக்க.  
      புண்ணியம் - “புண்ணியமாவது நீறு“; புனிதம் - “சுத்திதருவது நீறு“ 
       
      (தேவாரம்) 
       
           புண்ணியம் சூழ் நுதல் 
      - புண்ணியங்கள் யாவையும் திரண்டு  
      தமக்குரிய இடமாய் வந்து சூழ்ந்த நெற்றி என்றுரைத்தலுமாம். நுதல் 
       
      - நெற்றி. நுதலில் நீறு கண்ணை மறைத்த வெண்துகில் போன்றது  
      என்க. 
       
           மதி முதிர்தல் 
      - பிறை வளர்ந்து முழு மதியாதல். மாடே -  
      பக்கத்திலே. கதிர் சாய்வது - கதிர்களைக் 
      கற்றையாக விட்டுச் சாய்வது. 
       
           வெண்ணரை முடித்தது விழுந்திடை 
      சழங்க - வெள்ளிய  
      நரை மயிர் முடிந்து தொங்கவிட்டிருப்பது விழுந்து கழுத்திடையில்  
      அசைய. 
       
           நரை - 
      நரைமயிர். ஆகுபெயர். சழங்க - கிடந்தசைய. 
       
      கழுத்தளவில் விழுந்தசையும் நரை மயிர் முடி இறைவன் சடையில்  
      தரித்த பிறை முதிர்ந்து கதிர்களை நீட்டிக் கீழே சாய்வது போல  
      என்க. இவரது மூப்புக் கோலத்துக் கேற்பப் பிறையும் முதிர்ந்து  
      சாய்வதென்றது குறிப்பு. கதிர்கள் முதிர முதிரச் சாய்தலை யடைவது  
      இயல்பாம். கோலம் மாற்றிக் கொண்டதற்கேற்ப இப்பாட்டில்  
      முடிபுகளும் மாற்றியுரைத்தல் காணத்தக்கது. 
       
           சாய்வதென மீதே - என்பதும் பாடம். 29  
       
       
      1 இவ்வுவமானம் 
      கண்வைத்தியசாலையிற் காண்போர்க்கு இனிது  
      விளங்கும் 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |