| 181. 
           | 
          பிஞ்ஞகனு 
            நாவலர் பெருந்தகையை நோக்கி | 
            | 
         
         
          |   | 
          ‘என்னிடையு 
            நின்னிடையு நின்றவிசை வால்யான் 
            முன்னுடைய தோர்பெரு வழக்கினை முடித்தே 
            நின்னுடைய வேள்வியினை நீமுயறி' என்றான்.  | 
          35 | 
         
       
       
           (இ-ள்.) 
      பிஞ்ஞகனும்.......நோக்கி - சடைக் கோலத்தை  
      மறைத்துவந்த வேதியரும் நாவலூர் நம்பிகளைப் பார்த்து;  
      ‘என்னிடையும்......முயறி' என்றான்- ‘எனக்கும் உனக்கும்  
      முற்காலத்தே நின்ற இசைவின் மூலம் உளதாகிய ஒரு பெரு  
      வழக்கைத் தீர்த்து அதன் பின் நீ உனது வேள்வியைச் செய்ய  
      முயலுக' என்று சொன்னார். 
       
           (வி-ரை.) 
      பிஞ்ஞகன் - தலைக்கோல முடையவன். பிஞ்சம் 
       
      - மயிற்பீலி. தலையில் மயில் இறகு வைத்துக் கோலஞ் செய்வது  
      உலக வழக்கு. அதுபோலப் - பிறை - நகுதலை கொக்கிறகு  
      முதலியவைகளைக் கற்றைச் சடைமுடியிலே தரித்த  
      தலைக்கோலமுடையான் தலைமாலையே தலைக்கோலமாய் ஏனைய  
      எல்லார் தலைக் கோலங்களும் இறுதியுற்ற நாளிலும் தான் அழியாத  
      கோலமாய் நிகழ்வதால் இது சிவபெருமானுக்குப் பெயராயிற்றென்பர். 
       
           நாவலர் பெருந்தகை 
      - திருநாவலூரில் வந்த பெருந்தகையார்.  
      நாவலர் - நாவன்மை யுடையர் என்றலுமாம். மறையோரும்  
      மடங்கலனையானும் மொழிமின் என்று கேட்கவும், நம்பியை நோக்கி  
      இது சொன்னார் வழக்கு உள்ளது அவரிடத்தே என்றறிவித்தற்கு.  
      முன்னேயும் (33) நம்பியெதிர் பன்னுசபை முன்னின்று என்றமை  
      காண்க. முன் நின்ற இசைவால் யான் உடையது ஓர் பெரு வழக்கு  
      என்று மாற்றிக்கொள்க. நின்ற - நிலைபெற்றுள்ள. 
      இசைவு -  
      இசைவினாலே; ஒப்பந்தத்தினாலே. வழக்குப் பல மூலங்களிலிருந்து  
      கிளம்பும். அவற்றில் இது இசைவிலே நின்று உண்டாகிய வழக்கு  
      என்றார். ஒப்பந்த வழக்கு என்க. (Cause based on agreement  
      என்பர் நவீனர்). இசைவு - மனமிசைந்து செய்து 
      கொண்ட  
      உடன்படிக்கை. முன் நின்ற இசைவு - எனக்கும் 
      உனக்கும்  
      முன்னே நின்றுள்ள ஒப்பந்தம். வரிசை 198-ன் கீழ்க்காண்க. 
       
           முன் உடைய 
      - (1) எல்லாருக்கும் முன்னே; அநாதியே  
      ஆண்டவனாகிய (எசமான) இசைவு என்னிடமும், அடியானாகிய  
      இசைவு உன்னிடமும் அநாதியே உள்ளன. (2) முன்னாள் 
      -  
      திருக்கயிலாயச் சரித நிகழ்ச்சியிற் போந்த அருண்மொழி. திருமலைச்  
      சிறப்பு - 28, 29. 
       
           வழக்கு - 
      (1) இசைவாயிருந்தாலும் இப்போது நீ  
      ஒப்பாதிருக்கும் நிலையில் வழக்காயிற்று. (2) வழக்கம் 
      -  
      ஆன்மாக்கள் ஆநாதியே இறைவனுக்கு அடிமை என்று வழங்கும்  
      வழக்கம். 
       
           முடித்தே 
      - வழக்கை நிலைநாட்டிய பின்பே - தீர்த்த பின்பே. 
       
           வேள்வி - நெருப்பு வளர்த்துச் செய்யப்படும் 
      சடங்கு. இங்கு  
      மணம். வேள் - பகுதி - விருப்பம். உலகிலே 
      எல்லா  
      விருப்பங்களுக்கும் இடமாகிய மணம். முடித்தபின் நின் விருப்பம்  
      எதுவோ அதை - என்ற குறிப்புமாம். முயறி - முயலுதி - 
       
      வேள்வியைச் செய்ய முயற்சி செய்வாயாக. 35 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |