| 211. 
              | 
          பொருவரும் 
            வழக்கால் வென்ற புண்ணிய முனிவ 
                                           ‘ரென்னை | 
            | 
         
         
          |   | 
          யொருவரு 
            மறியீ ராகிற் போது'மென் றுரைத்துச்  
                                             சூழ்ந்த 
            பெருமறை யவர்கு ழாமு நம்பியும் பின்பு செல்லத் 
            திருவருட் டுறையே புக்கார் கண்டிலர் திகைத்து  
                                            நின்றார். 
             | 
          65 | 
         
       
       
           (இ-ள்.) 
      பொருவரும்.......உரைத்து - ஒப்பற்ற வழக்குப்பேசி  
      வெற்றிகொண்ட புண்ணியமுனிவர் அந்தணர்களைப்பார்த்து; ‘என்னை  
      நீவிர் ஒருவரும் அறியீர்களானால் என்னுடன் வாருங்கள்;  
      என்மனையும் வாழ்க்கையும் காட்டுகின்றேன்' என்று சொல்லி;  
      சூழ்ந்த.....புக்கார் - சுற்றி நிறைந்து அவ்வூரில் இருந்த  
      அந்தணர்களும் வந்த அந்தணர்களும் நம்பிகளும் தம் பின்வர  
      முன்னேபோய்த் திருவருட்டுறை என்ற 
      திருக்கோயிலுக்குள்ளே  
      புகுந்தார்; கண்டிலர் திகைத்து நின்றார் - அதன் பின் அவர்கள்  
      எவரும் அவரைக் காணாராயினர்; ஆதலின் திகைத்துநின்றார்கள். 
       
           (வி-ரை.) 
      பொருவரும் - ஒப்பற்ற. பொருவுதல் 
      -  
      ஒப்பாயிருத்தல். ‘பெருமுறை யுலகில் இல்லாநெறி' (வரிசை 192)  
      யாதலின் ஒப்பற்றதாயிற்று. இவ்வுலகில் இதற்கு ஒப்பாகச்  
      சொல்லக்கூடியது வேறொன்றுமில்லை என்றபடி. பொரு 
      -  
      மாறுகொள்ளுதல் எனக்கொண்டு, மாறுசொல்லக்கூடாத -  
      மறுக்கமுடியாத - என்றுரைத்தலுமாம். ‘உனக்கு ஆளாய் இனி  
      அல்லேன் எனலாமே' என்று நம்பிகள் அருளுவதும் காண்க. 
       
           புண்ணிய முனிவர் - புண்ணியங்களுக்கெல்லாம் 
      பயனாக  
      உள்ளவர். புண்ணியங்களையே தமது உருவமாக உடையவர்  
      என்றலுமாம். ‘புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்' என்ற  
      அப்பர் சுவாமிகள் அருள்வாக்கும் காண்க.  
       
           ஒருவரும் - அங்குப் புத்தூரில் நம்பியும், 
      மணப்பந்தரில்  
      இருந்த வேதியர் எவரும் அறியாதிருந்ததன்றி இங்குச் சபையில்  
      வேதியர் எவரும். 
       
           குழாமும் நம்பியும் 
      - மறையவர் கூட்டத்திலிருந்து  
      நம்பிகளைப் பிரித்து ஓதினார்; அவரை அவர்களினின்றும்,  
      உலகினின்றும் பிரித்து ஆட்கொள்ளவே இறைவர் எழுந்தருளினார்  
      ஆதலாலும், இனி அவர்களை விட்டு நம்பிகளே இறைவனைத் தனித்  
      தொடர்ந்து ஆட்செய்து வாழப்போகின்றாராதலாலும் என்க. 
       
           திருவருட்டுறை - 
      திருவெண்ணெய்நல்லூர்க்கோயிலின் பெயர்.  
      திருப்பெண்ணா கடத்திலே திருத்தூங்கானைமாடம் என்பதும்,  
      திருச்சாத்த மங்கையிலே அயவந்தி என்பதும் அவ்வத்  
      திருக்கோயில்களுக்குப் பெயராதல் போலக் காண்க. துறையே  
      புக்கார் - அருளாகிய துறையிலே ஒளிப்பவர் இறைவனாதல் குறிப்பு.  
      பவக்கடலிலே வீழ்ந்தாரைத் துறையிலே ஏற்றும் தோணியாக  
      இறைவனைக் கூறுவர் பெரியோர். ‘இடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங்  
      கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்கும் தோணியை......  
      (திருவாவடுதுறை - தாண்டகம் - 4). தோணிக்காரர் இருப்பதும்,  
      தொழில் செய்வதும் துறையிலேதான். தோணி தான் துறையிலே  
      நின்று தன்னை அடைந்தோரைத் துறைச்சேர்த்திக்  
      கரையேற்றுவதுபோல இறைவனும் இவ்வருட்டுறையிலே  
      உலகத்தாரைக் கரை ஏற்றும் பொருட்டுச் சமயாசாரியராகிய ஆரூர  
      நம்பிகளையும், சந்தான ஆசாரியரான மெய்கண்டாரையும் கரை  
      ஏற்றினார். திருத்துறையூரிலே அருணந்திசிவாசாரியாரை ஏற்றினார்.  
      இத்துறைகளிற் பெரியதாகிய திருப்பெருந்துறையிலே  
      மாணிக்கவாசகரை ஏற்றினார். ‘பெருந்து றைப்பெருந் தோணி பற்றி  
      யுகைத்தலும்' என்ற திருவாசகமும் காண்க. அப்பர் சுவாமிகளைத்  
      திருவையாற்றிலே ‘நெடுநீரினின்றேற நினைந்தருளிய' (திருவிருத்தம்  
      - 3 - 4.) அவரே, பிரமபுரத்திலே பிள்ளையாரைப் பொய்கைக்  
      கரையிலே ‘அறியாப் பருவத்தே எடுத்த' தோணியப்பராம் என்பதும்  
      இங்கு வைத்துக் காண்க. 
       
           கண்டிலர் - அவர் தன் அருளால் வெளிப்பட்டபோது 
       
      காட்டக் காண்டலும், அவர் அருளால் ஒளித்துக் காட்டாதபோது  
      காணாமையும் உயிர்களின் இயல்பு. ‘காட்டுவித்தா லாரொருவர்  
      காணாதாரே, காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே' என்பது  
      அப்பர் சுவாமிகள் திருவாக்கு. இங்கு வேதியராய்க் கண்முன்  
      நின்றபோது அவர் இறைவர் என்று ஒருவரும் அறியாமையும், அவர்  
      காணாது மறைந்தபோது இறைவர் என்று உணர்தலும் காண்க. அப்பர்  
      சுவாமிகள் திருவாக்கின் உண்மை இதில் உய்த்து  
      உணர்ந்தனுபிக்கத்தக்கது. 
       
           கண்டிலர் திகைத்து நின்றார் 
      - குழாமும் நம்பியும் என்ற  
      எழுவாய் வருவித்துக் கொள்க. கண்டிலர் ஆதலின் திகைத்தார்.  
      கண்முன்னே நேரே காணவும், பற்றவும்,பேசவும், ஏசவும்,  
      வழக்கிடவும் பொருளாய் நின்றவன் உடனே காணப்படாமையினால்  
      திகைப்பு உண்டாயிற்று. நின்றார் - ஒன்றுந் தோன்றாமல் திகைத்து  
      நின்றார். வரிசை 209-ல் நம்பிகள் நின்றார்; 210-ல் மறைமுனிவர்  
      நின்றார்; இங்கு மறையவர் குழாமும் நம்பியும் நின்றார்; என்ற  
      தொடர்பும் இவற்றுள் வேறுபாடும் கண்டுகொள்க. 65
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |