218. ‘வேதிய னாகி யென்னை வழக்கினால் வெல்ல
                                  வந்த
 
  ஊதிய மறியா தேனுக் குணர்வுதந் துய்யக்
                                கொண்ட

கோதிலா வமுதே யின்றுன் குணப்பெருங் கடலை
                                நாயேன்
யாதினை யறிந்தென் சொல்லிப் பாடுகே'
                       னெனமொ ழிந்தார்.

72

     (இ-ள்.) வெளிப்படை. ‘மறையவனாக உருவெடுத்து வந்து
என்னை வழக்கிட்டு வெல்வதற்கென்று வந்த அருட்செயலினால்
எனக்கு உள்ள இலாபத்தை அறியாமலிருந்தேன். இருந்தும் எனக்கு
அவ்வறியாமையைப் போக்கி உனது உதவியை உணர்ந்து உய்யும்
வகையைக் காட்டி உய்வித்த குற்றமில்லா அமிர்தமே! உனது
குணங்களாகிய பெருங்கடலிலே எதை அறிந்து என்ன சொல்லிப்
பாடவல்லேன்?' என்று விண்ணப்பித்து நின்றார்.


     (வி-ரை.) ஊதியம் அறியா தேனுக்கு - உனது வழக்கினால்
கிடைக்க நின்ற பெரிய இலாபத்தை அறியாது ‘பித்தனோ
மறையோன்', (வரிசை 186) ‘என்ன முறை, (வரிசை 191) ‘பிழைநெறி
வழக்கு', (வரிசை 194) என்றெல்லாம் மறுத்து வலிமை செய்த எனக்கு.

     உணர்வு தந்து உய்யக்கொண்ட
- ‘முன்பு நீநமக்குத்
தொண்டன்' (வரிசை 213) என்பனவாதி உண்மைகளை உணர்த்தி
உய்வித்த.

     கோதிலா அமுதே - அமுதம்
- என்ற பேரால் வழங்கும்
தேவர்களது மருந்து மீளவும் குற்றத்தை (இறப்பும் பிறப்பும்)
உண்டாக்கும். ஆனால் இவ்வமுது கோதினை முற்றும் இல்லையாகச்
செய்யும் என்றபடி. ‘கோதிலாவமுதே யருள் பெருகு கோலமே......'
(திருவாவடுதுரை - தக்கேசி - 8) என்பது நம்பிகள் தேவாரம்.

     யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன்? - எதை அறிந்து
என்ன என்று சொல்லிப் - பாடுவேன். சொல்லும் பொருளும் கடந்து
உணர்ந்தோதற்கரியவனாதலின்' இவ்வாறு வேண்டினர். முதற்
பாட்டின் உரையிற் காண்க. அவனையறிதற்கும் துதித்தற்கும் அவனே
உணர்த்தல் வேண்டும் என்பது சாத்திரம்.

     இறைவனைப்போலவே அவனடியார்களும் அவ்வியல்பே
வாய்ந்தவர்களாம். இங்கு இறைவனைப் பாடுதற்குப் பொருளும்
சொல்லும் பெறுதற்கு அவனை வேண்டிப் பெற்றதுபோலவே,
பின்னர்த்திருவாரூரில் ‘அடியார்களைப் பணிந்து நிறைசொன்மாலை
பாடு' (வரிசை - 343) என்று இறைவன் பணிக்க, நம்பியாரூரர்
‘இன்னவாறு இன்னபண் பென்றேத்துகேன்? அதற்கு யானார்?
பன்னுபாமாலை பாடும் பரிசெனக்கு அருள் செய்' (வரிசை - 344)
என்று வேண்ட இறைவன் ‘தில்லைவா ழந்தணர்த மடியார்க்கும்
அடியேன்' (வரிசை - 345) என்று சொல்லும் பொருளும் எடுத்துக்
கொடுத்து அருளியதும் காண்க. அடியார்களும் இறைவனைப்
போன்றவர்களே என்பது திருஞானசம்பந்த சுவாமிகளது திருமயிலைப்
பூம்பாவைத் திருப்பதிகத்தின் கருத்தாம் என ஆசிரியர் ‘மண்ணினிற்
பிறந்தார்' என்ற பாட்டினால் விளக்கியுள்ளார். விரிவு ஆங்குக்
காண்க. இதனை இப்புராணத்துள் யாண்டும் காணலாம்.

     வேதியனாகி - வேதிப்பவனாகி - அறியாதேனை
அவ்வறியாமையிலிருந்து வேதித்து உணர்வு தருபவனாகி - என்பது
குறிப்பு.

     பெருங்கடல்
- பெருங்கடல் போன்றது - இங்கு அளவின்மை
குறித்து நின்றது. இவ்வாறு இறைவன் தம்மை வலிய ஆட்கொண்ட
அருட்குணம் பயன்றூக்காது செய்த உதவியாதலின் குணப்
பெருங்கடல் என்றார். திருக்குறளுட் காண்க. 72