| 219. 
              | 
          அன்பனை 
            யருளி னோக்கி யங்கண ரருளிச்  
                                           செய்வார் | 
            | 
         
         
          |   | 
          ‘முன்பெனைப் 
            பித்த னென்றே மொழிந்தனை யாத 
                                           லாலே 
            என்பெயர் பித்தனென்றே பாடுவா' யென்றார்;  
                                           நின்ற 
            வன்பொருந் தொண்ட ராண்ட வள்ளலைப்  
                                         பாடலுற்றார். 
             
             | 
          73 | 
         
       
       
           (இ-ள்.) 
      அன்பனை........செய்வார் - இவ்வாறு வேண்டிய  
      அன்பராகிய வன்றொண்டரை இறைவர் அருட்பார்வை செய்து  
      அருளிச்செய்வாராகி; ‘முன்பு..........என்றார்' - நீ முன் மணப்பந்தலிலே  
      என்னைப் ‘பித்தனோ மறையோன்' என்று சொன்னாய். ஆதலால்  
      என் பெயர் பித்தன் என்றே வைத்துப் பாடுவாயாக, என்றார்; 
       
      நின்ற......உற்றார் - அவர் அருளை வேண்டி நின்ற வன்றொண்டரும்  
      தம்மை ஆட்கொண்ட இறைவனை அவ்வாறே பாடலாயினர். 
       
           (வி-ரை.) 
      அருளின் நோக்கி - அவர் கேட்டதைத் தரும் 
       
      வகை அருட்பார்வை செய்து அப்பார்வையாலே தம்மைப்  
      பாடுதற்குரிய பொருளை உணர்த்தினார் என்க. ஆசாரியருடைய  
      அருட்பார்வையே ‘பார்த்த பார்வையால் இரும்புண்ட நீரென'  
      அறியாமை முழுதும்போக்கி, முழுஅறிவையும் தரும் என்பது சாத்திர  
      உண்மை. அருள்நோக்கம் செய்வார் அதற்கு உரிய  
      கண்ணுடையவரேயாதல் வேண்டுதலின் அங்கணர் என்றார். முன்னே  
      வேதியராய் வெருளின் நோக்கியது போலல்லாமல் இப்போது  
      அங்கணராய் அருளின் நோக்கினார் என்க. 
       
           அருளின் நோக்கி - அருளிச் செய்தார் 
      - முன்னையது  
      அருள் பார்வை; பின்னையது உபதேசம். இவை தீக்கை முறை.  
      சொற்றமிழ்பாடிச் சிவார்ச்சனை செய்க என்று பணித்தாராதலின்  
      அதற்குரிய சிவதீக்கையும் செய்தல் வேண்டுமென்ற ஆகமவிதிபற்றி  
      என்க. 
       
           அன்பனை அருளின் நோக்கி - ‘அருள் என்னும் 
      அன்பு  
      ஈன் குழவி' என்ற (குறள்) ஆணையின்படி அன்பு முதிர்ந்தபோதே  
      அருள்வெளிப்படும். ஆதலின் வன்றொண்டர்  
      அன்புடையராயினபோது அருள வெளிப்பட்டதென்பார் ‘அன்பனை  
      அருளின் நோக்கி' என்றார். 
       
           ‘பித்தனென்றே பாடுவாய்' 
      - பாடுதற்குச் சொல்லும்  
      பொருளும் வேண்டினார்க்குப் பொருளை அருட்பார்வையா  
      லுணர்த்தினாராதலின், எஞ்சிய, சொல்லை இதனால்  
      உணர்த்தினாராயிற்று. 
       
           முன்பு பித்தன் என்று மொழிந்தனை - பித்தனென்றேபாடு 
      -  
      யார் யார் எவ்வெவ்வாறு இறைவனைப் பாவிக்கின்றார்களோ  
      அவரவர்க்கு அவ்வவ்வாறே நின்று அருளுவன் சிவன் என்னும்  
      உண்மை யுணர்த்தற்கு. இறைவனை வேடனாய் எண்ணிய விசயனை  
      வேடுவனே யாக்கியருள் செய்தமை காண்க. ‘ஆரொருவர் உள்குவார்  
      உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்'  
      என்பது அப்பர் சுவாமிகள் திருவாக்கு. 
       
           நின்ற 
      - அவ்வழியிலே அமைந்துநின்ற.  
      வன்பெருந்தொண்டர் - பெரு வன்றொண்டர். வள்ளல் 
      -  
      வரையாது கொடுப்போன். ஆளல்ல என்று மறுத்துக் கொடுமொழி  
      கூறினும் விடாதுபற்றி ஆண்டமையே வள்ளற்குணமாம். 73 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |