| 256. 
           | 
          நின்றுகோ 
            புரத்தை நிலமுறப் பணிந்து 
                 நெடுந்திரு வீதியை வணங்கி | 
            | 
         
         
          |   | 
          மன்றலார் 
            செல்வ மறுகினூ டேகி 
                 மன்னிய திருப்பதி யதனிற் 
            றென்றிசை 
            வாயில் கடந்துமுன் போந்து 
                 சேட்படு திருவெல்லை யிறைஞ்சிக் 
            கொன்றை வார்சடையா னருளையே நினைவார் 
                 கொள்ளிடத் திருநதி கடந்தார். 
             | 
          110 | 
         
       
       
           (இ-ள்.) 
      நின்று.......பணிந்து - கோபுரவாயிலிற்கு வெளியே  
      நின்று கொண்டு கோபுரத்தைக் கீழே வீழ்ந்து எட்டுறுப்பும் நிலத்திற்  
      பொருந்த வணங்கி - நீண்ட அகவீதியை வணங்கி; மன்றலார்....ஏகி  
      - செழித்த செல்வ வீதிகளின் வழியே சென்று; மன்னிய......கடந்து -  
      நிலைத்த அந்தத் திருத்தலத்தினது தென்றிசை வாயிலைக் கடந்து;  
      முன்......இறைஞ்சி - முன்னே போய் நகரின் புறத்தே உள்ள தெற்குத்  
      திருவெல்லையை வணங்கி, அதன் பின்னர்; கொன்றை........கடந்தார்  
      - கொன்றையணிந்த சடையினையுடைய இறைவரது திருவருளையே  
      சிந்தித்தவராகிக் கொள்ளிடத் திருநதியைக் கடந்தார்.  
       
           (வி-ரை.) 
      நின்று - கோபுரவாயிலைக் கடந்து வெளியே நின்று. 
       
           திருவீதியை வணங்கி 
      - இஃது அம்பலம் சூழ்ந்த அகவீதி.  
      மேலே ‘அண்ணலாடு திருவம்பலஞ் சூழ்ந்த வம்பொன்வீதி என்று  
      வரிசை 248-ல் கூறியதுங் காண்க. 
       
           மன்றல்ஆர் செல்வ மறுகு 
      - மன்றல் - திருவிழா. செல்வ  
      மறுகு - இது ‘செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கி'  
      விளங்குகின்ற தேர்வீதி. 
       
           அருளையே நினைவார் 
      - தடுத்தாட்கொண்டும், தவநெறி  
      தந்தும், தமக்கு முன்னர்ச் செய்தனவும், ‘ஆரூரில் வருகநம்பால்'  
      என்று இப்போது அம்பலத்தே அருள்செய்ததும் ஆகிய  
      கருணையினையே. ஏகாரம் - பிரிநிலை. வேறொன்றையும் 
       
      நினையாதவராய். தேற்றமுமாம். 
       
           நினைவார் - கடந்தார் - நினைவிலே வைப்பாராய்க் 
      கடந்தார். 
       
           சேண்படு திருவெல்லை 
      - வரிசை 238-ம் பாட்டிலே ‘தில்லை  
      மல்லலம் பதியினெல்லை' என்ற இடத்துக்காண்க. தில்லையின்  
      நாற்புறமுஞ் சூழ்ந்த நான்கு எல்லையாவன கிழக்குக் கடலும்,  
      தெற்குக் கொள்ளிடத் திருநதியின் வடகரையும், மேற்கு நாகசேரியும்,  
      வடக்குத் திருமணிமுத்தாறுமாம் என்ப. 
       
           இவ்விரண்டு பாட்டும் ஒரு முடிபு கொண்டன. ‘செய்தவம் 
       
      பெரியோராகிய' அவர் எனத் தோன்றா எழுவாய் வருவித்துக் 
      கொள்க. அவர் - சென்னிமேற் கொண்டு - அஞ்சலிகொண்டு -  
      விடைகொண்டு - வலங்கொண்டு - போந்து - கடந்து - பணிந்து -  
      வணங்கி - ஏகி - கடந்து - முன்போந்து - இறைஞ்சி - அருளையே  
      நினைவார் - நதிகடந்தார் - என முடிபுசெய்க. அருளையே  
      நினைவார் என்றதனை எழுவாயாக்கி அவர் கடந்தார் என்று  
      கூட்டியுரைப்பினுமமையும். இச்செய்கைகள் நம்பிகள்  
      இத்திருத்தலத்தை அரிதின் நீங்கிய பெருமை குறித்தன. தலத்தை  
      வணங்கி விடைகொள்ளும் முறையும் குறித்தபடி. ‘தொழுந்தொறும்  
      புறவிடை கொண்டு' என்றதனை இப்பாட்டிற் கண்ட கோபுரம் - வீதி  
      - மறுகு - வாயில் - எல்லை - நதி என்பனவற்றிற்கும் கொள்க. 
       
           கொள்ளிடம் 
      - இதற்குக் கலங்கொள்ளிடம் என்ற பேர்  
      கல்வெட்டுக்களிற் காணப் பெறுகின்றது. சோழமன்னர்கள்  
      கடலிலிருந்து தமது நாட்டிற்குள் மரக்கலங்கள் வருவதற்காக  
      அகலமும் ஆழமும்பெற அமைத்ததாதலின் இப்பெயர் பெற்றதென்பர்.  
      கலங்கொள்ளிடம் என்பது முதற்குறையாய்க் கொள்ளிடம் என  
      வழங்குகின்றது. பெயர்க் காரணப்பொருளாகிய கலங்கள் மறையவே  
      சொல்லும் மறைந்தது போலும். 110 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |