320. மலரமளித் துயிலாற்றாள்; வருந்தென்றன்
     மருங்காற்றாண்: மங்குல் வானி
 
  ணிலவுமிழுந் தழலாற்றா; ணிறையாற்றும்
     பொறையாற்றா; ணீர்மை யோடுங்
கலவமயி லெனவெழுந்து கருங்குழலின்
     பரமாற்றாக் கைய ளாகி
யிலவவிதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்தாற்றா
     மையின்வறிதே யின்ன சொன்னாள்.
174

     (இ-ள்.) மலர் ......... தழல் ஆற்றாள் - [பூம்படுக்கையிலே
வீழ்ந்த பரவையார் - 318] அந்த மலர் அமளியிலே படுத்துத்
துயிலைச் செய்யாதவராய்; நிலாமுற்றத்திலே துயிலை விளைக்கக்
கூடியதாய்த் தமது பக்கத்திலே வந்து மெல்லென வீசும் தென்றற்
காற்றுத் தமதுமேலே பட அதனையும் பொறாதவராயினர்; மேகங்கள்
தவழும் ஆகாயத்திலிருந்து ஒளிவீசும் நிலாவினுடைய கதிர்கள்
நெருப்பை உமிழ்தலால் அவ் வெப்பத்தையும் பொறுக்க
முடியாதவராயினர்; நிறை ...... ஆற்றாள் - தமக்குரிய தன்மையோடு
காக்கின்ற பெண்மைக் குணமாகிய நிறையைக் கொண்டு செலுத்த
வல்ல பொறை எனும் சத்தியைத் தாங்க இயலாத வராயினர்;
நீர்மையோடும் ..... ஆகி - (மலரணையில் வீழ்ந்து கிடந்தவர்)
இக்குணத்துடன் சிறிய தோகைமயிலைப்போல எழுந்து தமது கரிய
கூந்தலின் பாரத்தையுந் தாங்கமுடியாத நிலையுடையாராய்; இலவ
........ சொன்னாள் - இலவம் பூப்போன்று இயல்பிலேயே சிவந்த
வாய் நெகிழ்ந்து தரிக்கலாகாத வருத்தத்தாலே தமக்குத் தாமே
பின்வருமாறு சொல்வார் ஆயினார்.

     (வி-ரை.) நிலா முற்றமும், மலர் அமளியும், தென்றலும்
உடற்கின்பம் செய்து, துயில்வர உதவி, ஏனோர்க்கெல்லாம் இன்பம்
தரும் பொருள்கள். ஆயின் இணைபிரிந்தார்க்குக் காதல்நோய்
மனத்தில் வளர்ந்து பொங்குதலால் இவையே துன்பந்தருவன ஆயின
என்பதை விளக்க, ஆற்றாள் ஆற்றாள் எனத் தனித்தனி
ஒவ்வொன்றுடனும் கூட்டி உரைத்தார்.

      மலர் அமளித் துயில - மலர் பரப்பிய அமளியிலே
துயிலுதல். அமளி - படுக்கை. முன்னரும் மலர்ச்சேக்கை என்றதும்
காண்க.

      வரும் தென்றல் - மேலே 283-ம் திருப்பாட்டிற் கண்டபடி
மலையத்திற் பிறந்து நீர்நாட்டின்வழி அணைந்தும், நம்பிகள்பாலும்
அழல் வீசி வருகின்ற தென்றல் என்க.

      மங்குல் வானில் நிலவு உமிழ் தழல - நிலவு குளிர்ந்தது;
அது வரும் வழியும் குளிர்ந்த மேகமண்டலமாம்; எனவே மிகக்
குளிர்ச்சி விளைக்கவேண்டிய பொருள் என்பது குறிக்க மங்குல்
வானில் நிலவு என்றார்.

     நிறையாற்றும் பொறை - நிறையாகிய ஒழுக்கத்தைக்
கொண்டுசெலுத்தக்கூடிய பொறையை.

      கலவ மயில - குழற்பாரம் மயிற்றோகையை ஒத்திருந்தது
என்க. கலவம் - தோகை. மயில் சிறிதாயினும் பெருந்தேகையின்
பாரத்தைத் தாங்கும். இந்த மயிலோ (மயில் போன்றாரோ) குழலின்
பாரமும் தாங்க இயலாதபடி அவ்வளவில் மெல்லியள் ஆயினள்
என்பார் கையள் ஆகி என்றார்.

      செந்துவர் வாய் - செவ்விய பவளம்போன்ற நிறமுடைய
வாய். “செந்துவர்வாய்க் கருங்கண் வெண்நகைப் பண்ணமர்
மென்மொழியீர்“, “செந்துவர் வாயுமைபங்கன்“ என்ற திருவாக்குக்கள்
காண்க.

      வாய் நெகிழ்தல் - வாயினை இயல்பாலே திறந்து
சொல்லாமல் இதழ்கள் மெல்ல அசைந்து நெகிழச் சொற்கள்
தடுமாறிச் சொல்லத் தொடங்குதல்.

      வறிதே - தமக்குத்தாமே. ஒருபயன் குறித்து எவரையும்
நோக்கிக் கூறாது ஆற்றாமையாலே சாற்றுதலின் வறிதே என்றார்.
வறிது - பயனின்மை. அலக்ஷ்ய வாக் என்றார் காளிதாசர்.
(குமாரசம்பவம்) வறிது - சிறிது என்றலுமாம்.  174