| 322. 
              | 
           புலரும் 
            படியன் றிர; வென் னளவும்  
                 பொறையும் நிறையும் மிறையுந் தரியா;  
             | 
            | 
         
         
          |   | 
          வுலருந் 
            தனமும் மனமும்; வினையே  
                 னொருவே னளவோ பெருவாழ் வுரையீர்!  
            பலரும் புரியுந் துயர்தா னிதுவோ?  
                 படைமன் மதனார் புடைநின் றகலார்!  
            அலருந் நிலவும் மலரும் முடியா  
                 ரருள்பெற் றுடையா ரவரோ வறியார். 
             | 
          176 | 
         
       
           (இ-ள்.) 
        புலரும் ....... அளவும் - என்னைப்  
        பொறுத்தமட்டிலே இவ்விரவு விடிகின்றபாடில்லை; பொறையும் .......  
        தரியா - தாங்கும் சத்தியும் காக்கும் சத்தியும் சிறிதும் தங்கா ஆயின;  
        உலரும் தனமும் மனமும் - தனபாரங்களும் மனமும் உலர்ந்து  
        போகின்றன; வினையேன்......உரையீர் - இத்தனை பெருவாழ்வுகளும்  
        (துன்ப அநுபவங்களும்) தீவினையேனாகிய என் ஒருத்தியின்  
        அளவிலே தானா இயலவேண்டும்? சொல்லுங்கள்; பலரும்......இதுவோ  
        - பலபேரும் சேர்ந்து செய்யும் தொழில் இவ்வாறு துன்பம்  
        செய்வதுதானா? (ஒருவர் போலவே பலரும் துன்பமே செய்வதா?);  
        படை......அகலார் - மன்மதனார் என் பக்கத்திலே நின்று படை  
        செலுத்தலை ஒழிகின்றிலர்; அலரும்.....அறியார் - கொன்றைப் பூவும்  
        சந்திரனும் மலர்தற்கிடமாகிய திருமுடியுடையாரது திருவருள் பெற்று  
        என்னை உடையாராகிய நம்பிகளோ நான் படும் துன்பத்தை  
        அறியாதவராயினர். 
         
             (வி-ரை.) 
        புலரும்படியன்று இரவு என் அளவும் -  
        மற்றெல்லார்க்கும் அளவு பட்டு விரைவில் விடியும் தன்மையுடைய  
        இரவு என் அளவில்மட்டும் புலராமலே நிற்கின்றது. இரவிலே  
        இத்துன்பப்படுவார் பகல் வரில் தம் முன்னைநிலை பெறுவர்.  
        ஆதலின் பகலை விரும்பும் இயல்புபற்றி இரவு புலராது  
        நீட்டித்தலைக் குறித்து வருந்தினார். இரவு நீட்டித்தலாவது  
        ஆற்றாமையினால் ஒரு கணமும் ஊழியாய்த் தோன்றுதல்.  
        ஊழியிற் பெரிதால் நாழிகை யென்னும் (திவ்யப்) 
         
             உலரும் தனமும் மனமும் 
        - மனம் உலர்தலால் உடம்பும்  
        உலர்வதாம்; ஆதலின் உடன்சேர்த்துக் கூறினார். 
         
              வினையேன் ஒருவேன் 
        அளவோ பெருவாழ்வு உரையீர்  
        - பெருவாழ்வு - இகழ்ச்சிக் குறிப்பினாலே துன்ப மிகுதியைக்  
        குறித்தது. இவ்வாழ்வு என் ஒருத்தியின் அளவே நிகழ வேண்டுவதா?  
        ஒருவேன் என்பதனை நீங்கமாட்டேன் (ஒருவுதல் - நீங்குதல்)  
        எனக்கொண்டு முன்வரும் உலரும் தனமும் மனமும்  
        நீங்கமாட்டேனாயினேன் என்றுரைத்தலும் ஒன்று. இவ்வுரைக்கு  
        இவ்வளவுதனா எனது பெருவாழ்வாய் முடிந்தது என்று  
        முடித்துக்கொள்க. பெருவாழ் வுரையீர் - நான் வாழும் வழியைச்  
        சொல்லுங்கள் என்று முரைப்பார். 
         
              பலரும் புரியும் துயர்தான் 
        இதுவோ - ஒருவர்தாம்  
        துன்பஞ் செய்வாராயின் பிறர் அதனை விலக்குதலே அறநெறியா  
        யிருப்பவும், அவ்வாறு செய்யாமலும், அவ்வாறு விலக்காவிட்டாலும்  
        வாளா இராமலும், அவருடன் சேர்ந்து தாமும் துன்பஞ் செய்வதோ  
        அற இயல்பு? என்க. 
         
              அலரும் நிலவும் மலரும் 
        முடியார் - அலர் -  
        சிவபெருமானுக்குரிய கொன்றை மலர். இது கார்காலத்தைக் குறிப்பது.  
        காதல் நிகழ்ந்து பெருகும் காலம் அதுவேயாம். நிலா காதலை  
        மிகுவிப்பது. மலர்தல் - சிறந்து பெருகுதல். இவ்விரண்டும் பெருகச்  
        செய்தலின் அவர் திருவருள் காதலாய் மேன்மேல் விளைகின்றது.  
        அதற்கு மருந்து அவர் அருளேயாதலின் அவரருள் பெற்றுடையார்  
        அறிந்தால் தாம்பெற்ற திருவருளை எனக்குக் கொடுத்து ஆற்றுவர்.  
        அவரோ அறியாதிருக்கின்றார். நீங்களாவது அறிவியுங்கள்  
        என்பார்போலக் குறிப்பித்தவாறு. அறிந்தால் அருளுவர் என்பது  
        குறிப்பு. 
         
              ஆற்றாமையால் வாய் நெகிழ்ந்து வறிதே சொல்லும் 
         
        சொற்களாயினமையால் இச்செய்யுட்கள் ஒரு தொடர்ச்சிபெற்று  
        வராது வெவ்வேறு பல பொருள்களைக் குறித்த தனிச் சிறுசிறு  
        சொற்றொடர்களாக முடிந்துவரும் யாப்பமைதியும், சொல்லமைதியும்,  
        கொண்டுவிளங்கும் அழகு காண்க. இத்தகைய பொருளமைதிகொண்ட  
        கூற்றாயினவாறு, சடையாயெனுமால் என்ற தேவாரப்  
        பதிகங்களின் அமைதியையும் இங்கு வைத்துக் காண்க. 176  
	 |