| 340.  
           | 
           வேத 
            வாரண மேற்கொண்டி ருந்தன;  
             | 
            | 
         
         
          |   | 
          பேதை 
            யேன்செய் பிழைபொறுத் தாண்டன;  
            வேத மானவை தீர்க்க விசைந்தன;  
            பூத நாதநின் புண்டரீ கப்பதம்.  
             | 
          194 | 
         
       
           (இ-ள்.) 
        வெளிப்படை. வேதங்களாகிய யானையின்மீது  
        நிற்பன; அறியாமை யுடையேனாகிய நான் செய்த பிழைகளைப்  
        பொறுத்தருளி - என்னை ஆளாகக் கொண்டன; (மேலும்  
        வரக்கடவனவாகிய) குற்றங்களை எல்லாம் போக்கவும் இசைந்து  
        நின்றன பூத கணங்களின் தலைவராகிய தேவரீரது தாமரைபோன்ற  
        சீபாதங்கள். 
         
             (வி-ரை.) 
        வேத வாரண மேற்கொண்டிருந்தன - வேதங்கள் 
         
        இறைவனைமேற்கொண்டு போற்றுகின்றன என்பது. வேதத்தில்  
        விளங்குந் திருவடி என்க. வாரணம் - யானை. யானைபோலப்  
        பெருமையும் விளக்கமும் தருதலால் வேதம் வாரணம் எனப்பெற்றது.  
        ஆரணம் - வேதம் எனக் கொண்டு வேதமாகிய ஆரணம் எனக்  
        கூறுவாரும், ஆரணம் - வேதத்தின் ஞானபாகமாகிய  
        உடநிடதமென்று கூறுவாரும் உண்டு. வாரணம் - குதிரை  
        எனக்கொண்டு வேதமாகிய குதிரையின்மேல் என்றுங் கூறுப.  
        இறைவன் மாணிக்கவாசகர் பொருட்டு வேதக் குதிரையின்மேற்  
        குதிரைச் சேவகனாகி வந்தான் என்ற சரிதமும், பண்ணியல்,  
        வைதிகப் புரவியும் (பதினொராந் திருமுறை - கோயினான்மணி - 4)  
        முதலிய திருவாக்குக்களையும் இங்கு எடுத்துக் கூறுவர். ஆயின்  
        குதிரைக்கு வாரணம் என்ற வழக்கு பெருநூல்களிற் காண்பதரிதாம். 
         
             ஆரணங்களே யல்ல மறுகிடை வாரணங்களும் மாறி 
         
        முழங்குமால் என முன்னர்க் கூறுதலும், வேதங்கள் நிஷாதசுரத்திற்  
        பயிலப்பெறுதலும் இங்கு வைத்துணரத் தக்கன. நிஷாதம் -  
        யானையின் பிளிற்றோசை. மலைக்கொளானை என்ற திருக்கடவூர்த்  
        திருக்குறுந்தொகையிலே அப்பர் பெருமான் இறைவனைக் கலைக்கை  
        யானை கண்டீர் கள்ளவானை கண்டீர் முதலாகப் பதிக முழுதும்  
        யானையாகவே காட்டியதும், வேதமாகிய வெஞ்சுடரானையார்  
        என்றருளியதும் காண்க. 
         
             செய்பிழை பொறுத்தாண்டன 
        - இதன் விரிவு முன்னர்த்  
        திருமலைச் சிறப்பின் வரலாற்றிலும், தடுத்தாட்கொண்ட வரலாற்றிலும்  
        காண்க. செய்பிழை - செய்த பிழை என இறந்த காலப் பொருளில்  
        வந்தது. பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன என்பது அப்பர்  
        பெருமான் தேவாரம். 
         
             ஏதமானவை தீர்க்க 
        இசைந்தன - முன் செய்த பிழை  
        பொறுத் தாண்டது போலவே, இனி வருங்காலத்திற்  
        செய்யக்கடவனவாகிய பிழைகளையும், அவற்றால்வரக் கடவனவாகிய  
        ஏதங்களையும் தீர்க்க இசைந்து நின்றன. இசைதல் - ஒருப்படுதல்;  
        முன்னே பிழையைப் பொறுத்ததுபோலவே பின்னர் வரும்  
        ஏதங்களையும் தீர்க்க இப்போதே உடன்பட்டன என்க. ஏதந்தீர்  
        நெறியைப் பெற்றேன் (343) என்பதும் காண்க. முன்னே  
        திருக்கயிலையில் ஏதந்தீர்க்க இசைந்தன; ஆதலின் பேதையேன்  
        செய் பிழைபொறுத்தாண்டனஎன்று கூட்டியுரைத்தலுமாம். என்  
        பிழையைப் பொறுத்தாண்டதேயன்றி எல்லா உயிர்க்கும் ஏதம் தீர்க்க  
        இசைந்தன என்றலுமொன்று. ஆறாத வானந்தத் தடியார் செய்த  
        வனாசாரம் பொறுத்தருளி யவர்மே லென்றுஞ் சீறாத பெருமானை  
        என்ற திருத்தாண்டகம் காண்க. யான்செய்யும் துரிசுகளுக் குடனாகி  
        என்ற நம்பிகள் தேவாரமும் இங்குச் சிந்திக்கத்தக்கது. 
         
             பூதநாத! 
        - சிவபூத கணங்களின் தலைவனே! பூதபதயேநம:  
        என்பது சிவாஷ்டோத்திரம். பூதங்களாற் சூழப்பட்டு நடம்புரிதல்  
        சிவபெருமானுக்கே யுரியது. இப்பூதங்களின் இயல்பும் வலிமையும்  
        முன்னர் 16-ம் திருப்பாட்டிற் காண்க. பூத நாயகர் புற்றிடங்  
        கொண்டவர் (136) என முன்னர் இத்திருவாரூர்ப் பெருமானைக்  
        குறித்ததும் நினைவுகூடர்க. ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்  
        அங்க ணன்றனை முதலிய எண்ணிறந்த திருவாக்குக்களும்  
        காண்க. பூதங்கள் தாருகவனத்து இருடிகள் மாறாகச் செய்த  
        ஆபிசார யாகத்திற் றோன்றின என்றும், அவற்றைச் தம்மைச்  
        சேவித்துச் சூழ்ந்து நிற்க இறைவன் ஆணையிட்டான் என்றும்  
        புராணங்கள் கூறும். 
         
             புண்டரீகப்பதம் 
        - அடியும் அடியவர்களும் இணைந்து  
        நிற்றலின் அன்பால் நினைவார்களது உள்ளக்கமலத்தே விரைந்து  
        சென்று நிற்கும் திருவடி என்க. அடியவர்களுக்கு ஆளாந்தன்மையை  
        வேண்டியே திருவடியைத் துதித்தாராதலின் அவர்களது  
        உள்ளக்கமலத்தே விரைந்து சேறும் தன்மையனவாகவே அவற்றைத்  
        துதித்தார் என்பது குறிப்பாம். அன்பர் சிந்தை யலர்ந்த செந்தாமரை  
        என்று தொடங்கிய நம்பிகள் அதனையே அநுவதித்து முடித்தார்  
        என்க தாமரைபோன்ற பாதம் என்பதும் ஆம். 
         
             பொலம்புண்டரீகப் புதுமலர் போல்வன, 
        தூக்கமலத் தன்ன  
        வடிவின என்பனவாதி அப்பர் பெருமான் திருவாக்குக்கள் காண்க. 
         
             இந்நான்கு திருப்பாட்டுக்களிலும் நின் புண்டரீகப்பதம் 
        என்ற  
        ஒரே எழுவாய் எதிர் நின்றன என்பது முதல் இசைந்தன  
        என்பதுவரைப் பதினொரு தனி வினைமுற்றுக்களைக் கொண்டு  
        முடிந்தது காண்க. பஞ்சப்பிரம சடங்கமாகிய பதினொரு  
        மந்திரங்களாலே இறைவனைக் கொண்டு துதிக்கும் சிவாகம மரபும்  
        காண்க. இவையே பின்னர்த் திருத்தொண்டத்தொகையின் பதினொரு  
        பாசுரங்களாகப் போந்தன என்பர் ஆலால சுந்தரம்பிள்ளை. பதம்  
        எதிர் நின்றன - ஆடின - என்னாது, இறுதியில் நிற்கவேண்டிய  
        பயனிலைகள் முன்னும், முன்னிற்கவேண்டிய எழுவாய் இறுதியிலும்  
        வந்தன. மலையின் மேலே சகடங்களை ஏற்றும் இயந்திரம்  
        பின்னின்று தள்ளுதல்போன்ற மரபுபற்றிப் போலும். எழுவா யிறுவா  
        யிலாதன என்று அப்பர் பெருமான் இத்திருவடிகளின் இலக்கணம்  
        வகுத்ததும் காண்க. 194 
	 |