| 347.  
           | 
          தூரத்தே 
            திருக்கூட்டம் பலமுறையாற் றொழுதன்பு  
             | 
            | 
         
         
          |   | 
          சேரத்தாழ்ந் 
            தெழுந்தருகு சென்றெய்தி நின்றழியா 
            வீரத்தா ரெல்லார்க்குந் தனித்தனிவே  
                                       றடியேனென் 
             
            றார்வத்தாற் றிருத்தெர்ணடத் தொகைப்பதிக                            மருள்செய்வார், 
             | 
          201 | 
         
       
           (இ-ள்.) 
        வெளிப்படை. அடியார் திருக்கூட்டத்தைத் தூரத்து  
        நின்றே பல முறையாலும் வணங்கியும், அன்பின் மிகுதியினாலே  
        மீண்டும் தாழ்ந்தெழுந்தும், பின்னர் அருகேபோய் நின்றுகொண்டு,  
        எக்காலத்தும் அழியாத வீரமுடையார்களாகிய அவர்கள்  
        ஒவ்வொருவர்க்கும் தனித்தனியாக அவ்வவர் திருப்பெயர் சொல்லி  
        இவர்க்கு அடியேன், இவர்க்கு அடியேன் என்றும், பின்னர் அதற்கு  
        வேறாகத் தொகுதியாய்க் குறித்து இத்தொகுதியார்க்கு அடியேன்  
        என்றும் துதித்து மேன்மேல் எழுகின்ற ஆசையினால்  
        திருத்தொண்டத்தொகை என்ற பேர்பெற்ற திருப்பதிகத்தை நம்பிகள்  
        அருளிச் செய்வாராய், 
         
             (வி-ரை.) 
        திருக்கூட்டம் - கூட்டம் - கூடியிருந்த  
        அடியவர்களைக் குறித்தது - ஆகுபெயர். இத்திருக் கூட்டத்தின்  
        இயல்பும் விரிவும் முன்னர்த் திருக்கூட்டச் சிறப்பிற் காண்க.  
        அதனைத் தூரத்தே தொழுதல் - அதன் பெருமையும், அதனை  
        நோக்கத் தமது சிறுமையும், அதனை வணங்கும் முறையும்  
        குறித்ததாம். திருக்கூட்டம் பேணாதேகும் ஊரனுக்கும் புறகு என்று  
        வெகுண்ட விறன்மிண்டர் மகிழுமாறு தூரத்தே தொழுதார்  
        என்பாரும், இது அவரது கோபத்தின் மிகுதி குறித்தது  
        என்பாருமுண்டு. 
         
             பல முறையால் தொழுது 
        - மனம் - மொழி - மெய் என்ற  
        மூவகை வணக்கமும், மூன்றுறுப்பு - ஐந்துறுப்பு - எட்டுறுப்பு -  
        என்னும் பலவகை உடல் வணக்கமும், இவை ஒன்றுக்கு மேற்பட  
        மீளமீளச் செய்தலாகத் தொகையின்மிக்க வணக்கமும் அடக்கிப் பல  
        முறையால் என்றார். மகிழ்ந்தெழுந்து பலமுறையும் வணங்கு  
        கின்றார் என்றதும் காண்க. (திருஞான - புரா - 1023) 
         
             அன்பு சேரத் தாழ்தல் 
        - மேன்மேல் அன்பு கூர்தலால்  
        மீண்டும் வீழ்ந்தெழுந்து வணங்குதல். சேர - சேர்தலால்; சேரும்  
        பொருட்டு என்றுரைத்தலுமாம் தாழ்ந்து - விரும்பி  
        என்றுரைப்பினுமாம்.  
         
             நின்று 
        - (வன்றொண்டர்) நின்று அருள் செய்தார் என்று  
        கூட்டுக. அடியார்கள் வீற்றிருக்க அவர்களின் முன் நின்று துதிக்கும்  
        முறை குறித்தவாறு. 
         
             நின்று என்பதனைத் தத்தமது சித்த நிலைகளிலேயும் 
         
        ஒழுக்கத்திலேயும் நிலைபெற்று நின்று அந்நிலைகளினின்றும் சிறிதும்  
        பிறழாத வீரமுடையார், என அடியார்களுடன் கூட்டியுரைத்தலு  
        மொன்று. சித்தநிலை திரியாது செய்பணியின் றலைநின்றார் -  
        (திருநா - புரா - 422) முதலிய திருவாக்குக்கள் காண்க. நிலையிற்  
        றிரியா தடங்கியான் றோற்ற, மலையினும் மாணப்பெரிது என்பது  
        குறள். வானந் துளங்கிலென்? என்றது அப்பர் பெருமான்  
        தேவாரம். வீர மென்னால் விளம்புந் தகையதோ (144) என்றதும்  
        இங்கு நினைவு கூர்க. விரிவு ஆண்டுக் காண்க. 
         
             தனித் தனி வேறு அடியேன் 
        என்று - தனித்தனியும்  
        வேறும் என உம்மைத் தொகையாக்கித் தனித்தனி அடியேன்  
        என்றும், அதற்கு வேறாய்த் தொகுதி குறித்து அடியேன் என்றும்  
        உரைக்க. தனியடியார், தொகையடியார் என்ற இருபகுப்பும் குறிக்க  
        இவ்வாறு கூறினார். இவ்வாறு கொள்ளாக்கால் வேறு என்றது  
        கூறியதுகூறலாய் வேறு பொருள் பெறாது நிற்றலறிக. பத்தராய்ப்  
        பணிவார்கள் என்று தொடங்கும் பாசுரத்திற் குறித்த அடியார்களைத்  
        தொகையடியார்கள் என்பது வழக்கு. 
         
             ஆர்வத்தால் 
        - ஆர்வம் - அடியார் வணக்கத்தில் மேன்மேல்  
        எழும் ஆசை. இது வரை ஆரூரில் அம்மானுக்கு ஆளாய்ப்  
        பணிசெய்யப்பெற்ற ஆரூரனாகிய அடியேன் இன்று தில்லைவாழ்  
        அந்தணர்த மடியார்க்கு மடியேனாகப்பெற்றேன் - பெருமிழலைக்  
        குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியனாகப் பெற்றேன் -  
        பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேனாயினேன் - சித்தத்தைச்  
        சிவன்பாலே வைத்தார்க்கும் அடியனானேன் - எனது  
        இவ்வடிமைத்திறத்தைக் கேட்டுவப்பாரும் ஆரூர்  
        அம்மானுக்கன்பராவார் என்று மேலும் மேலும் பாராட்டிப் போற்றி  
        உலகினுக் குறுதிகூறுதல் ஆசைப்பாட்டின் மிகுதி காட்டிற்று. இது  
        இத்திருப்பதிகம் அருளியபோது நம்பிகளின் உள்ளநிலை குறித்தது. 
         
             தொழுது 
        - தாழ்ந்து - எழுந்து - சென்று - எய்தி - நின்று -  
        என்பன நம்பிகளது அரிய வணக்கத்தின் பற்பல செயல்களையும்  
        தனிச் சொற்களாற் பிரித்து எடுத்துக் காட்டியவாறு. திருத்தொண்டத்  
        தொகைப்பதிகம் - பதிகத்தின் பெயர் குறித்தபடியாம்.  
        திருநீற்றுப்பதிகம் என்பது போல. தனித்தனிவே றடியே னென்று -  
        அப்பதிகத்தின் அமைப்பு நுதலியபொருளும் குறித்ததாம். வீரத்தார் -  
        பதிகத்துப் பாடப்பெற்றோர் தன்மை காட்டியபடி. எல்லார்க்கும் -  
        எல்லாக்காலத்தும் எல்லா இடத்தும் உள்ள  
        இத்தன்மையரெல்லாருக்கும் என விரித்துரைக்க. விரிவு  
        அப்பாலுமடிச்சார்ந்த அடியார் புராணத்துட் காண்க. 
         
             நின்றிழியா 
        - அருள்செய்தார் - என்பனவும் பாடங்கள். 201  
       |