| 349. 
              | 
           
            உம்பர்நா யகரடியார் பேருவகை தாமெய்த 
             | 
            | 
         
         
          |   | 
           
            நம்பியா ரூரர்திருக் கூட்டத்தி னடுவணைந்தார்  
            தம்பிரான் றோழரவர் தாமொழிந்த தமிழ்முறையே  
            யெம்பிரான் றமர்கடிருத்  
                             தொண்டேத்தலுறுகின்றேன். 
             
             | 
          203 | 
         
       
           (இ-ள்.) 
        உம்பர் நாயகர்.....அணைந்தார் - இறைவனது  
        அடியவர்கள் மிக மகிழ்ச்சியடைய ஆரூர் நம்பிகள்  
        அத்திருக்கூட்டத்துட் சென்று அணைந்தனர்.  
        தம்பிரான்.....உறுகின்றேன் - தம்பிரானும் தோழருமாகிய அவர்கள்  
        சொல்லிய அத்தமிழ்த் திருப்பதிகங்காட்டிய அம்முறையிலே  
        தனித்தனியாய் விரித்து, இறைவனுக்கு கந்தவர்களாகிய அடியார்களது  
        திருத்தொண்டின் வரலாறுகளையும் தன்மைகளையும் எடுத்துக்கூறித்  
        துதிக்க முற்படுகின்றேன். (இது ஆசிரியர் கூற்று.)  
           (வி-ரை.) 
        உம்பர் நாயகரடியார் பேருவகை தாமெய்த - உம்பர்  
        நாயகர் - தேவர்கட் கரசு செய்வார். உம்பர்கட்கரசே -  
        திருவாசகம். முதலில் நம்பிகள் இவர்க்கு நான் அடியேனாகப்  
        பண்ணும் நாள் எந்நாள் (335) என்று சிந்தித்துத் தூரத்தே  
        தொழுதுபோய்ப், பின்னர்ப் பெருமான் அருள்பெற்று, அவர்பாற்  
        சாரவணைந்து வணங்கி, அவன் அருளிய வழியே மொழிந்து தனித்தனி துதித்து வணங்கினார். 
        முன்னர்ப் பொதுவகையான்  
        மகிழ்ந்திருந்த அவர்கள். இப்போது பேருவகை எய்தினார் என்க.  
        நம்பிகள் தேவாசிரியனை முன்னரும் வணங்கிப் போந்தனர் என்பது,  
        தேனுறை கற்பக வாசமாலைத் தேவாசிரியன் றொழுதிறைஞ்சி (270).  
        சென்று தேவாசிரியனைச் சேர்ந்தபின் (301) என்பவற்றாற்  
        பெறப்பட்டது. முன்னர் வெகுண்ட விறன்மின்டரும் இதனால்  
        மிகமகிழ என்று கூறுவாரும், உம்பர் நாயகரும் அடியாரும் என்று  
        கூறுவாருமுண்டு. 
         
             திருக்கூட்டத்தின் 
        நடு அணைந்தார் - அடியேனுன்  
        னடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் (திருவாசகம்)  
        என்றபடி விண்ணப்பித்து, அவனருளாலே அடியார் திறமுணர்ந்து  
        பாடி வணங்கி, அவர் அருளால் அவ்வடியார் நடுவுள் அணைந்து  
        அவருள் தாமும் ஒருவராயினார் என்க. அடியார் கூட்டத்தில்  
        அணைவதே சைவசித்தாந்தத்துட் சிவப்பேற்றின் எல்லையாகக்  
        குறிக்கப்பெறும் பேறு என்க. இதன் விரிவு ஞான சாத்திரங்களுட்  
        காண்க. இதுவே சிவஞான போதம் 12-ம் சூத்திரத்துப் பேசப்  
        பெறுவதாம். 
         
             தம்பிரான் தோழர் 
        அவர் தாம் மொழிந்த தமிழ் -  
        தம்பிராணும் தோழரும் ஆகிய அவர்கள் சேர்ந்து மொழிந்த  
        திருப்பதிகம். இது திருத்தொண்டத் தொகை. இப்பதிகத்திலே  
        தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்ற தொடர்  
        தம்பிரானுடையதாதலாலும், இதனை ஓதும் உணர்வு அவன்  
        அருளியதாதலாலும், இஃது இருவரும் அத்துவிதமாய்க் கலந்த  
        நிலையில் மொழிந்த தமிழ் என்க. இச்சிறப்பு வேறெந்த - மொழிக்கு  
        மில்லாமையும் உணர்க. தமிழ் - இருமடியாகு பெயராய்ப் பதிகத்தை  
        யுணர்த்திற்று. தம்பிரான் றோழர் - உம்மைத் தொகை. இவ்வாறன்றித்  
        தம் பிரான்றோழர் என்ற பேர்பெற்ற நம்பிகள் என்றுரைத்தலுமொன்று  
        (275). முன்னரும் திருத்தொண்டத் தொகைத் தமிழ் (146) என்றது  
        காண்க. 
         
             தமிழ் முறையே 
        - இஃது இப்புராண அமைப்பில் ஆசிரியர்  
        பின்பற்றிச் செல்லும் பகுப்பு, உட்பிரிவு முதலிய வகையினை  
        உணர்த்திற்று. இப்பதிகத்தின் ஒவ்வொரு திருப்பாட்டின்  
        முதற்சொற்றொடரே ஒவ்வோர் சருக்கத்தின் பெயராம். இவ்வாறு  
        தில்லைவாழந்தணர் சருக்கம் முதல் மன்னியசீர்ச் சருக்கம்வரை  
        பதினொரு சருக்கங்கள் ஆயின. இவற்றுடன் முதலிற் றிருமலைச்  
        சருக்கமும், இறுதியில் வெள்ளானைச் சருக்கமுங் கூடிய பதின்மூன்று  
        சருக்கங்கள் கொண்டது இப்புராணம். அந்தந்தச் சருக்கத்தினுள்ளும்  
        அவ்வப்பதிகப்பாட்டிற் கூறித் தொழப் பெற்ற அடியார்களின் சரிதம்  
        அவ்வரிசையிலே விரித்துக் கூறப் பெற்றன. 16, 17 பக்கங்கள் பார்க்க. 
         
             எம்பிரான் தமர்கள் 
        - தம்மவர் என்பது தமர் என  
        வழங்கியது; நம்மவர் - நமர் - என வருவதுபோல, சிவனடியார்களே  
        எம்பெருமான் றமர்களாவார். எம்பிரான் றமரேயோ என்னா  
        முன்னம் - (318), கருமிடற்று மறையவனார் தமராய கழலேயர்  
        பெருமகன் (மானக்கஞ்சாறர் புராணம் - 16), தத்தா நமர்என 
         
        (மெய்ப் - புரா - 16), நந்தமரூரன் (நொடித்தான்மலை - 9 -  
        முதலியன காண்க. 
         
             திருத்தொண்டு 
        - தொண்டு செய்த வரலாறு, பண்பு முதலியன.  
        ஏத்தலுறுகின்றேன் - விரிநூலாகச் சொல்லத் தொடங்குகின்றேன்.  
        திருத்தொண்டத் தொகைவிரியின்றே னாதர வாலிங் கியம்புகேன்  
        (47) என்றதுங் காண்க. 203  
	 |