350. ஆதியாய் நடுவு மாகி யளவிலா வளவு மாகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு                                     மாகிப்
பேதியா வேக மாகிப் பெண்ணுமா யாணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி
   1

     (இ-ள்.) ஆதியாய் நடுவுமாகி - ஆதியாகியதுடன் நடுவும்
ஆகி; அளவிலா அளவும் ஆகி - பாசஞான பசுஞானங்களால்
அளந்தறியப்படாது. சிவஞானத்தால் அறியப்படும் பொருளாகி;
சோதியாய் உணர்வும் ஆகி - காட்டும் அறிவாகிய ஒளியும், அது
காட்டக் காண்கின்ற அறிவுமாகி; தோன்றிய பொருளும்......ஏகம் ஆகி
- இருவகை மாயைகளினின்றுந் தோன்றிய எப்பொருளும் ஆகி
அவையனைத்தினும் அத்துவிதமாய்க் கலந்ததொரு பொருளேயாகி;
பெண்ணும் ஆய் ஆணும் ஆகி - பெண்ணும் ஆய் அதனோடு
இணைந்த ஆணுமாகி; போதியா நிற்கும்......போற்றி - போதித்து
நிற்கும் தில்லையின் பொதுவிலே ஆடுகின்ற திருக்கூத்து எம்மாற்போற்றப் பெறுவது! போற்றப் பெறுவது!!

     (வி-ரை.) ஆகி - ஆகி - ஆகி - ஆகி - ஆகி - ஆகிப் -
போதியா நிற்கும் - நடம் - போற்றி என்று முடிக்க.

     ஆதியாய் - எல்லா உலகங்களுக்கும் தோற்றுதற்
கருத்தாவாய். “அந்தம் ஆதி“ என்று உண்மை நூலிற் கண்டவாறு,
மாசங்கார காலத்திலே எல்லா உலகங்களும் சங்கார கருத்தாவாகிய
இறைவனிடத்தே ஒடுங்கி நின்று மீளவும் சிருட்டிக் காலத்திலே
அவனிடத்தினின்றும் தோன்றி உளவாம் என்பது முடிபு. “ஒடுங்கி
மலத்துளதாம்“ - சிவஞான போதம் 1-ம் சூத்திரம். ஆதி -
தொடக்கம்; மீளத் தோன்றுதற்கிடமாய் நிற்கின்ற நிலையைக்
குறித்தது. முதலிற் சங்கார கருத்தாவாகிய தன்னிடத்திலே உலகம்
ஒடுங்கச் செய்தலாலே சங்கார கருத்தாவும், பின்னர் மீளத் தோன்ற
நிற்றலாலே சிருட்டி கருத்தாவும் தானே ஆகியவன் என்பது ஆதி
என்பதனாற் பெற்றாம். “படைப்பாதித் தொழிலும்“ (1-ம் சூத்திரம் -
74) என்ற சித்தியாரில் படைப்பாகிய ஆதித் தொழில் என்று
உரைகண்டமையும் காண்க.

பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேவரமுங்
கருங்கடல் வண்ணன் களேவர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.

என்ற அப்பர் பெருமான் திருவிருத்தம்,

புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுண
                                  மமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரு முயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவன்.................“
                   - திருச்சிவபுரம் -

நட்டபாடை - 1

என்ற திருஞான சம்பந்த நாயனார் தேவாரம் முதலிய
திருவாக்குக்களைக் காண்க. இவ்வாறன்றி ஆதி என்பதற்கு
முதற்காரணர் என்று கூறுவாறுமுண்டு. குடத்திற்கு மண்
முதற்காரணமாவதுபோல உலகத்துக்கு இறைவன் முதற் காரணமாதல்
இல்லை என்பது ஞான நூல்களின் முடிபு; ஆதலின் அது
பொருந்தாமையறிக. நடுவும் - தோற்றம் - நிலை ஒடுக்கம் எண்ணும்
மூன்றில் நடுவில் நின்றதாகிய உலக நிலைபேற்றுக்குந் தானே
கருத்தாவாகி. ஆதியாய் என்றதனாலே தோற்றம் ஒடுக்கம்
இரண்டிற்கும் கருத்தாவாதல் பெற்றாம்; எஞ்சிய நடுவுக்கும் அவனே
கருத்தா என்பது இங்குக் கூறினார்.
எச்சவும்மைகள்
எண்ணும்மைகளுமாகி நின்றன. இங்கு நடு என்றது திதி
கருத்தா என்க. ஆதியாய் நடுவும் ஆகி - உலகச்சிருட்டி திதி
சங்கார மூன்றும் இத்தில்லைத் திருநடனத்திலே ஆவன என்பது.
திரோபவ அனுக்கிரகங்கள் இவற்றுள்ளே அடங்குவன. எனவே
இந்நடம் ஐந்தொழில் நடனம் என்பதை உபயோகித்தருளியபடி.

     அளவிலா அளவும் ஆகி ஆன்ம சிற்சக்தியே அளவை
யெனப்படும் பிரமாணம்; ஏனையவை பிரமேயமாகிய பொருள்கள்.
இவை பவுட்கரத்தும் சிவஞானபாடியத்தும் விளக்கப்பட்டன. இங்கு
அளவு என்னுந் தொழிற் பெயரிரண்டும் ஆகுபெயர். பசு பாச
ஞானங்களாகிய சுட்டுணர்வால் அறியப்படும் பொருளும்,
எவ்வாற்றாலும் அறியப்படாத பொருளும் அசத்தாம். ஆதலின்
சிவஞானங் காட்டக் காணும் ஆன்ம சிற்சத்தியாகிய அளவையால்
பரம்பொருள் அறிந்தநுபவிக்கப்படும் பொருளேயாம்.

     சோதியாய் உணர்வும் ஆகி - சோதி - காட்டும் புற ஒளி;
உணர்வு - அவ்வாறு காட்டப்பெற்றுக் காணும் உயிருணர்வு.

     தோன்றிய பொருளும் ஆகி அவ்வாறுணர்த்த உணரும்
அறிவினால் உணரப்பெறும் பொருட் பிரபஞ்சமெல்லாம் தானே
வியாபித்து நின்று.

“அறிகின்ற, மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பா
                                  ராகாச
மப்பொருளுந் தானே யவன்“

                 - அற்புதத் திருவந்தாதி - 20

     என்ற காரைக்கால் அம்மையார் திருவாக்கும் காண்க.

     பேதியா ஏகம் ஆகி - தோன்றிய பொருள்களினுட் பேதமற
அத்துவிதமாய்க் கலந்து நின்றதொரு பொருள் ஆகி. சொற்பிரபஞ்சம்
- பொருட் பிரபஞ்சம் என்ற இருவகை உலகமும். அதாவது
“உரையின் வரையும் பொருளின் அளவு, மிருவகைப்பட்ட
வெல்லையும்“ (கோயினான் - 4). சுத்த அசுத்த மாயைகளினின்று
தோற்றுவிக்கும் இறைவன் தான் அவற்றோடு அன்னியமின்றிக்
கலந்து நிற்கும் நிலையை இங்குக் குறித்தபடி.

     பெண்ணுமாய் ஆணும் ஆகி - சத்தியும் சிவமுமாய்
உலகெலா நிறைந்துநிற்கும் தன்மை. இவ்வாறு இறைவன் தன்னுள்ளே
சத்தி சிவமென இருவேறு வகைப்பட்ட தன்மைகள் வைத்தலாலே
தான், பல்வேறு வகைப்பட்ட உயிர் வடிவங்களெல்லாம் குறியாலும்
குணத்தாலும் ஆண் பெண் எனப் பேர்பெற்று அந்தந்த
யோனிக்குள்ளே இருவேறுவகையா யடங்கித் தம்முட் கூடிக் களித்து
வாழ்கின்றன. “அச்செலாம் இலிங்காங்க பகாங்கமாம்படி சிவமும்
சத்தியும் கொண்டருளிய பீட்விலிங்க வடிவமே அங்கனம் இருவேறு
வகைப்பட வைத்ததனைக் கண் கூடாக அறியச்செய்தல் சான்று“
என்று எமது மாதவச் சிவஞான முனிவர் உரைத்தமை காண்க.

 “சத்தியுஞ் சிவமுமாஞ் சரிதைப், பன்மையோகிகள்
  யாவையும் பயில்வன“

                         - திருநா - புரா - 374

சத்தியும் சிவமு மாய தன்மையில் வுலக மெல்லாம்
ஒத்தொவ்வா வாணும் பெண்ணு முணர்குண குணியுமாகி
வைத்தன னவளால் வந்த வாக்கமிவ் வாழ்க்கை
                                     யெல்லாம்
இத்ததையு மறியார் பீட லிங்கத்தி னியல்பு மோரார்.

             சிவஞான சித்தியார். (1-ம் சூத்திரம் - 69)

     இதனையே “தொன்மைக் கோலம்“ என்றருளியது
திருவாசகம். (திருக் - கோத்தும்பி - 18).

     போதியா நிற்கும - போதித்து நிற்கின்ற.போதித்துக்கொண்டு
இறைவன் என்றும் நித்தியமாய் நிற்கின்ற. மேலே கூறியவாறு
ஆதிமுதலியனவாய் ஆகின்ற தெதற்கு?என்றும், அதன் பயன்
யாது? என்றும், வினவுவாரை நோக்கித் தனது அத்தன்மைகளை
உயிர்களுக்கு உணர்த்தி உய்விக்கும் பொருட்டு நிற்கும் நிலையே
இந்நிலைகள் எனவும், அதுவே இத்திருநடம் எனவும் உணர்த்தினார்.
இத்திருக்கூத்தினால் இவை போதிக்கப்பெறுதல் நல்லாசிரியர்கள்
உணர்த்தத், திருமூலர் திருமந்திரம் (திருக்கூத்துத்தரிசனம்),
சிவஞானபோதம் முதலிய ஞானசாத்திரங்களுக்குள்ளே தெளிந்து
கொள்க. 252 முதலிய பாட்டுக்களிலும் இன்னும் வரும் இடங்களிலும்
காண்க.

     தில்லை - தில்லை என்ற நகரம். தில்லை என்னு மரமடைந்த
காடாயிருந்தமை பற்றி இதற்கு இப்பெயர் வந்தது. தில்வம் என்னும்
வடமொழி, தமிழில் தில்லை என வந்தது. மரத்தின் பெயர் அது
நிறைந்த காட்டுக்காகிப், பின்னர் அக்காடிருந்த இடத்தில் அமைந்த
நகரத்துக்காயிற்று. பொது - அந்நகரிலே அமைந்த அம்பலம் - சபை.
நடம் - அச்சபையில் நிகழும் திருக்கூத்து.

“தில்லை மாநகர் போற்றி; தில்லையுட்
செம்பொ னம்பலம் போற்றி; யம்பலத்
தாடு நாடகம் போற்றி“

     என்று கோயினான் மணிமாலையிற் (40) பட்டினத்தடிகள்
போற்றியதும் காண்க.

     போற்றி - போற்றப் பெறுவது. ஊருணி என்பதனுட்போல
இகரம் செயப்படுபொருள் விகுதி. வாழியவென்பது வாழி என
வந்தாற்போல யகரங்கெட்டு வந்த வியங்கோள் வினைமுற்றெனக்
கொண்டு காக்க எனப் பொருள் கொள்ளலும் பொருந்தும்.

     இப்பாட்டிலே, ஆதி - பிரமா; நடு - விட்டுணு; அளவு -
இறுதியாகிய உருத்திரன், சோதியா யுணர்வுமாகியவன -
உயிர்களுக்கு மாயா சத்தியால் மறைப்புச் செய்யும்
திரோதானசத்தியையுடைய மகேசுரன்; தோன்றிய பொருள் -
அச்சத்தி தோன்றுதற்கிடமாகிய சாதாக்கியம் - சதாசிவமூர்த்தி என்று
கூறுவாறுமுண்டு.  1