| 39. 
           | 
          அங்க ணாள னதற்கருள் செய்தபின் 
             | 
            | 
         
         
          |   | 
          நங்கை 
            மாருட னம்பிமற் றத்திசைத் 
            தங்கு தோற்றத்தி லின்புற்றுச் சாருமென் 
            றங்க வன்செய லெல்லா மறைந்தனன். | 
          29 | 
         
       
            (இ-ள்.) 
        அங்கணாளன் ... பின் - (அவ்வேண்டுகைக்குப்) 
        பெருங்கருணையாளனாகிய இறைவன் அவ்வாறே ஆக  
        என்றருளினார். பின்னர் அதன்படியே; நங்கைமாருடன் ... சாரும்  
        என்று - நம்பி அந் நங்கைமாருடன் முன்சொன்ன  
        அத்தென்றிசையிலே அருள் தங்கிய மானுடப் பிறவியிலே போந்து  
        இன்பங்கலந்து மீண்டும் இங்குச் சார்கின்றார் என்று; அங்கு அவன்  
        ... அறைந்தனன் - அங்கே அவரது வரலாறு முழுமையும்  
        உபமன்னிய முனிவர் சொன்னார். 
         
             (வி-ரை.) அங்க(ண்)ணாளன் 
        - அழகிய - கண் -  
        உடையார்; மிகக்கருணையுள்ளார் மிகுந்த கண்ணோட்டம் உடையார்  
        ஆதலின் அவர், வேண்டியது வேண்டியவாறே அருள் செய்தனர்  
        என்பது குறிக்க இப்பெயராற் கூறினார்.? 
         
             நம்பி - ஆடவருட் சிறந்தவன் : சுந்தரமூர்த்திகளது 
        நம்பி என்ற திருப்பதிகம்காண்க; 
        அதிலே நம்பி என்பது  
        சிவபெருமானை; அவரே எல்லார்க்கும் சிறந்தாராதலின் அவரை  
        நம்பி என்றார். அவரே போல்வாராதலின் ஆலால சுந்தரரும் நம்பி  
        எனப் பெறுவர். ஆளுடைய நம்பிகள் என்ற வழக்கும் காண்க.  
        மேலும் நம்பி என்பது இறைவனது அருச்சகர்களாகிய  
        முப்போதுந்திருமேனி தீண்டுவார்க்குரிய மரபுப் பெயர். ஆலால  
        சுந்தரராயிருந்த நிலையிற் சென்ற அவர் நம்பியாக அவதரித்துத்  
        திரும்புகின்றார் என்பதும் குறிப்பாம். அருச்சிப்பாரை அரன் எனவே  
        பாவித்தல் விதியாதலின் நம்பி என்ற அரன் பெயர் அருச்சகர் மரபுப்  
        பெயராயிற்று. திருமுது குன்றத்திலே இறைவன் சுந்தரமூர்த்திகளுக்கு  
        நம்பி உருவங்கொண்டு காட்சி கொடுத்தார் என்றும், அப்போது 
         
        நம்பி என்ற பதிகம் நம்பிகள் பாடினார் என்றும் ஒரு  
        பரம்பரை வரலாறு அத்தலத்திலே கேட்கப் பெறுகின்றது. 
         
             நங்கைமாருடன் 
        - நங்கைமாருக்கும் இவ்வாறே திருவருள் ஆணை யுண்டாயினமையால் அவர்களும் தென்றிசையிற் 
        போந்தனர்  
        என்பது கொள்க.  
         
             இன்புற்றுச்சாரும் - இன்புறுதல் மேலே இன்பங் 
        கலந்து  
        என்ற இடத்துக் காண்க. இன்புற்று அதன் பின் சாரும் எனவும்,  
        இன்புற்றும் அவ்வழியே மயங்கி மயங்கிச் செல்லாது சாரும் எனவும்,  
        கொள்க. அங்கணாதன் - என்றும் பாடம்.  29 
       |