498. சேணார் மேருச் சிலைவளைத்த சிவனா ரடியார்
                           திருக்கூட்டம்
 
  பேணா தேகு மூரனுக்கும் “பிரானாந் தன்மைப்
                             பிறைசூடிப்
பூணா ரரவம் புனைந்தார்க்கும் புற“ கென்
                     றுரைப்ப மற்றவர்பாற்
கோணா வருளைப் பெற்றார்மற் றினியார்
                       பெருமை கூறுவார்.
8

     (இ-ள்.) வெளிப்படை. சேணிடையிலும் உயர்ந்து நிறைந்த
மேருமலையை வில்லாகவளைத்த சிவபெருமானடியார் திருக்கூட்டம்
பேணாது செல்லும் நம்பியாரூரருக்கும் அவரை ஆண்ட தலைவராந்
தன்மையுடைய, பிறையைச் சிரத்திற் சூடிப் பாம்பை அணியாக
அணிந்த பெருமானுக்கும் புறகு என்றுரைப்ப மற்ற அவர்களிடமே
கோணாத அருளைப் பெற்றார். இதனின் வேறு பெருமையும் யாவர்
சொல்ல வல்லார்?

     (வி-ரை.) சேணார்மேருச் சிலை வளைத்த - நெடுஞ்
சேய்மைக் கண்ணும் சென்று ஒங்குகின்ற மேருவாகிய மலையை
வில்லாக வளைத்த. சேண் - நெடுந்தூரம். ஆகாயத்தை அளாவி
என்றுரைப்பாரு முண்டு. மிக மேலும் மிகக் கீழும் சென்று, அண்ட
கோளகையின் நடுவாகி விளங்குவது மேரு என்பர். சிலை - மலை
என்று கொண்டு மேருவாகிய மலையை வளைத்த எனவும், சிலை -
வில் எனக்கொண்டு மேருவை வில்லாக வளைத்த எனவும்,
இருவழியும் கொள்ளத் தக்கது. 496 பார்க்க.

     சிவனார் அடியார் - சிவனாரது அடியார். வேற்றுமைத் தொகை.

     திருக்கூட்டம் பேணாது - இரண்டாம் வேற்றுமைத் தொகை.
திருக்கூட்டத்தைப் பேணாது செல்லும். தொழுது வந்தணையாது
என்றதும் காண்க.

     பேணுதல் - உரிய வகையில் பாராட்டுதல். ஊரனுக்கும் -
புனைந்தார்க்கும் புறகு என்றுரைக்க எனக் கூட்டி உரை கூறுவாரு
முண்டு. திருக்கூட்டத்திற்கு ஊரனையும் பிரானையும் புற கென்றதே
யன்றி அவர்களுக்குத் திருக்கூட்டத்தைப் புறகென்றல்
பொருந்தாதென்று அதனை மறுப்பாரு முண்டு. அவர்க்கு இவர்
புறகாயினும் இவர்க்கு அவர் புறகாயினும் பொருள் ஒன்றேயென
விடை கூறுவாருமுண்டு.

     ஊரனுக்கும் - எண்ணுப் பொருளோடு உம்மை இழிவு
சிறப்புப் பொருளும் பெற நின்றது. உரைப்ப - உரைக்கத்
தக்கபடியாக.

     மற்று அவர் பால் - மற்று - மற்றும் - மேலும் -
முன்பெற்ற அருளோடு. இதனையே மேற்பாட்டில் மற்றும் பெற
நின்றார்
என்று குறித்தது காண்க. அவர் பால் - தான புறகென்று
கூறிய நம்பிகளிடத்தும் பிரானிடத்தும் என்றலுமாம். நம்பிகளிடத்துக்
கோணா அருள் பெற்றதாவது “விரிபொழில்சூழ் குன்றையார்
விறன்மிண்டர்க் கடியேன்“ என்று திருத்தொண்டத்தொகைப்
பாட்டினுள்ளே தொழப் பெற்றது.

     கோணா அருள் - எஞ்ஞான்றும் எவ்விடத்தும் கோடுதல்
இல்லாத திருவருள்.


     இனியார் மற்றுப் பெருமை கூறுவார்? - என மாற்றுக.
இனி
- இதன் மேலும் - இனியும்; மற்று - வேறுமொரு; யார்
கூறுவார்
என்றது யாவரும் கூற வலியிலர் எனக் குறித்தது. இவ்
வினாவழக்கின் உறுதிப்பாடு முன்னர் உரைக்கப்பட்டது.

     இனியார் பெருமை கூறுவார் - இனியவர்களாகிய
அடியவர்களது பெருமை கூறுவாராயினும் என்றலுமாம். அவர்பாற்
கோணா வருளைப் பெற்ற தெங்ஙனமெனில் இறைவரே அடியார்
பெருமைகளை எடுத்துச் சொல்லவும் (341, 342), திருத்தொண்டத்
தொகைக்கு முதலெடுத்துக் கொடுக்கவும் (345), நம்பிகள் தொகை
பாடித் துதிக்கவும் (347) உள்ள நிலை பெற்றதாம். திருத்தொண்டத்
தொகையிலே பிரானும் நம்பிகளும் அடியார் பெருமை கூறியது
காண்க. 349 உரை பார்க்க. இனி யார் - அடியவர்கள். “இகத்தும்
பரத்து மினியார்“ - சிறுத்தொண்டர் புராணம் -77.

     இங்கு நாயனார் நம்பியை யாண்ட இறைவனுக்கும் புறகு
என்றது தீயதன்றோ எனின், அஃது அடியார்பாற் சென்ற
பத்திமையின் திண்மை யொழுக்கத்தால் உளதாயிற்று; அன்றியும்
அவ்வாறு சொல்லும் அடியார்பத்தியின் உறைப்புடைய அடியாரும்
உளர் என உலகிற்கு இவர் மூலம் அறிவுறுத்த இவர் வாக்கில்
அவ்வாறு நிகழ்த்தச் செய்தது இறைவன் திருவுள்ளம் போலும்.
ஆதலின் பிரானும் புறகென்றுரைப்ப அருளைப் பெற்றார் என்றார்.
“ஈசனோ டாயினும் ஆசையறு மின்கள்“ என்ற திருமந்திரமும்
இங்குச் சிந்திக்கத் தக்கது.

     மற்று இரண்டும் அசையென்றொதுக்குவாறு முண்டு. 8