5. அளவி லாத பெருமைய ராகிய
 
  அளவி லாவடி யார்புகழ் கூறுகேன்
அளவு கூட வுரைப்பரி தாயினும்
அளவில் ஆசை துரப்ப வறைகுவேன்.
   5

     (இ-ள்.) அளவு..........கூறுகேன - அளவற்ற பெருமைகளை
யுடையார்களாகிய அளவில்லாத அடியார்களது புகழ்களை எவ்வாறு எடுத்துச் சொல்ல வல்லேன்; அளவுகூட உரைப்பு அரிது - அவற்றை
அளவு கூடும்படி சொல்லுதல் அரிது; ஆயினும் - இருந்தபோதிலும்;
அளவு இல் ஆசை துரப்பஅறைகுவேன - (என் மாட்டாமையை
அறிந்து தடுத்தேனாயினும் தடுக்க ஒண்ணாதபடி) அளவற்ற ஆசை
(என்னைச் சொல்வாயாக என்று) துரப்பதனாலே சொல்லத்
துணிகின்றேன்.


     (வி-ரை.) அளவிலாத பெருமை - மேற்பாட்டிலே
“தெரிவரும் பெருமை”, “பொருவருஞ் சீர்” என்று விதந்து
பேசப்பட்டது. இப்பெருமைகளின் விரிவைப் பின்னர்த் ‘திருக்கூட்டச்
சிறப்பு’ என்ற பகுதியிற்காண்க. பெருமை - செயற்கரும் செய்கை
செய்வது.


     அளவிலாசை - பேராசை. வருகின்ற பாட்டிற் பெருநசை
என்பது காண்க. தனது தகுதிக்கு மீறிய செய்வேன் என்று எழும்
ஆசை.

     துரப்ப - தூண்ட. தூண்டுதலினால் சொல்லப் புகுந்தேன்.

     அளவு கூட - அளவு கூடும்படியாக; அளவிட்டு -
அளவுபடுத்தி என்பது.     5