51. பாட்டியற் றமிழுரை பயின்ற வெல்லையுட்  
  கோட்டுயர் பனிவரைக் குன்றி னுச்சியிற்
சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி
நாட்டியல் பதனையா னவில லுற்றனன்.
1

     (இ-ள்.) பாட்டியற்........எல்லையுள் - (தமிழ் இலக்கணத்துள்
வகுத்துக்கூறிய) பாட்டாகிய இயற்றமிழுக்குப் பொருளாகப் பரந்த
எல்லைக்குள்ளே (காணும் பல நாடுகளுக்குள்);
கோட்டுயர்.....இயல்பதனை - மலைகளிற் பெரிய இமயமலையினது
உயர்ந்த சிகரத்தின் உச்சியிலே, புலிக்கொடியை நாட்டிய வளர்கின்ற
சோழர்களால் அரசாளப்பெற்ற காவிரி நாட்டினது சிறப்புக்களை;
யான் நவிலல் உற்றனன் - நான் சொல்லத் தொடங்குகின்றேன்.

     (வி-ரை.) பாட்டு இயற்றமிழ் உரை பயின்ற எல்லை -
இங்குப் பாட்டு என்பது மேலே - அலகில்சீர் நம்பி ஆரூரர் பாடிய
- என்று குறித்த பாட்டு - திருத்தொண்டத் தொகை - என்ற
குறிப்புத் தருதலும் காண்க.

     பாட்டு இயற்றமிழ் - பாட்டாகிய இயற்றமிழ் என்க.
இயற்றமிழாகிய பாட்டு எனினுமாம். உரைபயின்ற எல்லை - அதிற்
குறிக்கப்பெற்ற நாடுகளுக்குப் பொருளாய் நின்ற பல பிரதேசங்களும்
அடங்கிய எல்லை - அளவு. இது மிகப் பரந்ததாம். எல்லையுள் -
இவற்றுளே - என்று அளவுபடுத்திக் கொண்டு, சோழர்கள் இமயத்திற்
புலிக்கொடி நாட்டியதொரு உள் எல்லை கண்டு, அதற்குள்ளும்
நின்ற, சோழர் அரசுக்குட்பட்ட பல நாடுகளுள்ளே, காவிரி நாட்டின்
இயல்பினையே இங்குச் சொல்லப் புகுந்தனர் என்க. இதற்குக்
காரணம் முன்பாட்டிற் சொன்னார். இப்பாட்டிலே நாட்டின்
பகுதியையும் அளவுகளையும் குறிப்பிட்ட வாறாம்.

     இவ்வாறன்றி இயற்றமிழ்ப் பாட்டும் உரையும் பயின்ற எல்லை
எனக் கொண்டு தமிழ் பயிலும்நாடு என்பதுமாம். பாட்டும் உரையும்
என்பது, செய்யுள் வழக்கு - உலக வழக்கு - என்ற இரண்டு
வகையிலும் தமிழ் பயிலும் நாடு வடவேங்கடம் தமிழுக்கு வட
எல்லையாக இலக்கணம் கூறுதலின் அதுவரையும் தமிழ் நூலும்
செய்யுளும் பயிலும் நாடு. இமயத்தில் உச்சியில் சோழர் புலிக்கொடி
நாட்டி வடநாட்டையும் ஆண்டன ராதலின் அக்காலம்
வேங்கடத்தின் வடக்கே தமிழ் உரைமட்டும் பயின்ற நாடாகும்.
எனவே, இந்த எல்லைக்குள்ளே வேங்கடத்துக்கு தெற்கே குமரியும்
அதற்கப்பாலும் என்க. தலைமைபற்றி இயற்றமிழ் என்றமையால்
அதன் இனமாகிய இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்ற இவைகளையும்
கொள்க. பாடு - மேம்பாடு - பெருமை - என்று பொருள்
உரைத்தலும் ஒன்று. இயற்றமிழின் மேன்மையும் புகழும் பயின்ற
(பரந்த) எல்லை என்க.

     கோட்டு உயர் பனிவரைக் குன்றின் உச்சி - மலைகளில்
உயர்ந்த இமயத்தில் உள்ள பல குன்றங்களிலும் உயர்ந்த ஒன்றின்
சிகரத்திலே.

     புலி - அவ்வுருவம் தீட்டிய கொடி. புலி பொறித்த கொடிக்கு
ஆகுபெயர்.

     சூட்டிய வளர்புலிச் சோழர் - புலி சூட்டிய வளர்சோழர்
என மற்றியுரைக்க. ஆசிரியர் காலத்திற் சோழர் அரசு செய்தமையின்
வளர்சோழர் என நிகழ்காலத்தாற் கூறியதும் வாழ்த்தியதும் ஆம்.
வளர்கின்ற புலிக்கொடியையுடைய சோழர் என்று கொண்டு,
கொடியை வாழ்த்தியதாக உரைத்தலுமாம். “சேவேந்து
வெல்கொடியான்“ முதலிய திருவாக்குக்களின்படி அரசனை
வாழ்த்துவோர் அவனது கொடியை வாழ்த்துவது மரபாம். இமயம்வரை
இராசராசச் சோழர், கங்கை கொண்ட சோழர் முதலாயினார் தங்கள்
ஆணை செலுத்தி அந்த மலைச் சிகரத்திற் புலிபொறித்த வரலாறு
மேலே ஏனாதிநாத நாயனார் புராணத்திலும்,

“புண்டரிகம் பொன்வரைமே லேற்றிப் புவியளிக்கும்
தண்டரள வெண்கவிகைத் தார்வளவர் சோணாட்டில்“ (1)

என்று நிகழ்காலத்துக் குறித்தமை காண்க. இதன் விரிவு
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்திலே,

“.......கரிகாற் பெருவளத்தோன்
வன்றிறற்புலி யிமயமால் வரைமேல் வைக்க
                    ஏகுவோன்.....“(85)

என்ற திருப்பாட்டின் கீழ் உரைக்கப்பெறும்.1

     சோழர் காவிரிநாடு - சோழர்களது காவரி பாயும் நாடு.
காவிரிநாடு சோழநாட்டுக்குப் பெயராய் வழங்குவது. சோழர்களுக்கு
உரியனவாய்ப் பல நாடுகள் இருப்பவும், அவற்றுள் ஒன்றாகிய காவிரி
பாயும் நாட்டையே எடுத்துக் கொண்டு இங்கு நாம் நாட்டுச்
சிறப்பிலே கூறுவாம் என்பார், “சோழர் நாடு“ அன்றியும் காவிரி
தோன்றுவதும், வருவதும், வேறு பற்பல நாடுகளாயிருப்பவும், அது
பாய்ந்து சிறப்பாய் வளப்படுத்துவது சோழ நாடேயாம்; ஆதலின்
சோழர்காவிரிநாடு எனக் குறித்தார் என்றுமாம். காவிரி ஏனைய
நாடுகளை வளப்படுத்துதல் பிற்காலத்துச் சிறுபான்மை இயல்பாம்.
நாட்டு இயல்பு - நாட்டின் சிறப்பு இயல்பு.     1


1 எனது “சேக்கிழார்“ என்னும் நூலில் 108 - 109 - 110,
பக்கங்களைப் பார்க்க.
என்னாது “சோழர் காவிரிநாட்டு” என்றனர்.
நீர்நாடு - புனல்நாடு - காவிரிநாடு என்னும் பெயர்களைச்
சோழநாட்டைக் குறிக்கும் பெயர்களாகப் பின்னர்ப் பல இடங்களிலும்
ஆசிரியர் வழங்குதல் காண்க.