| 52. 
           | 
          ஆதிமா 
            தவமுனி யகத்தி யன்றரு | 
            | 
         
         
          |   | 
          பூதநீர்க் 
            கமண்டலம் பொழிந்த காவிரி 
            மாதர்மண் மடந்தைபொன் மார்பிற் றாழ்ந்ததோர் 
            ஓதநீர் நித்திலத் தாம மொக்குமால். | 
          2 | 
         
       
           (இ-ள்.) 
        ஆதி.........தரு - முதன்மைபெற்ற பெருந்  
        தவமுனிரவாகிய அகத்திய முனிவர் கொணர்ந்த; பூதநீர்.......காவிரி -  
        பூதநீரைக் கமண்டலத்திலிருந்து கவிழ்த்தனாற் பெருகிய காவிரி  
        யாறானது; மாதர்........ஒக்குமால் - அழகிய பூமியாகிய பெண்ணினது  
        பொன் மார்பிலே தாழ்ந்து வளைந்து கிடந்ததாகிய தண்ணிய நீர்மை  
        பெற்று விளங்கும் ஒரு முத்துமாலை போன்றுள்ளது. 
         
             (வி-ரை.) 
        ஆதி - முதன்மை. இது தவத்திற்கும் -  
        முனிவனுக்கும் ஆம். அவரது தவத்தின் பெருமை கடல் குடித்தல் -  
        விந்தத்தை யடக்குதல் - இராமன் முதலியோர்க்கு அருளுதல் -  
        முதலிய பலவாற்றாலும் அறியப்படும். அவரது பெருமை இறைவனது  
        திருமணத்தின்போது எல்லாத் தேவர் முனிவர் முதலியோரும் கூடிய  
        வடக்குத்திசை தாழ, அதைச் சமனாக்க இறைவனது ஆணையினால்  
        தாம் ஒருவரே தெற்கிற் போந்து பொதியத்திற்றங்கிச் சமன்  
        ஆக்கினார் என்பதனால் அறியப்படும். சிவசமானர் என்று  
        கருதப் பெறுபவர். இவற்றின் விரிந்த வரலாறுகள் கந்தபுராணத்திற்  
        காண்க. தமிழுக்குத் தலையாசிரியராய் எண்ணப்பெறுபவரும் இவரே.  
        இவரது ஆசிரமத்தில் விட்டுணு முதலிய எல்லாத் தேவர்களுக்கும்  
        இடம் வகுத்துச், சிவபெருமானுக்கு மட்டும் இடம் வகுக்காமல்  
        அமைத்தார் என்றும், அதனால் மற்ற எல்லாத் தேவர்களும் இவரை  
        வந்து அடையவும், இவர் சிவனொருவனையே தாம் தேடி அடையும்  
        தன்மையுடையார் என்றும் வால்மீகி இராமாயணம் பேசும் என்பர். 
         
             பூதநீர்க் கமண்டலம் 
        பொழிந்த காவிரி - சூரபன்மனாதி  
        அசுரர்களுக்குப் பயந்து இந்திரன் சீகாழியில் புகலடைந்து, அங்கே  
        நந்தனவனம் வைத்து இறைவனை வழிபட்டு வருங்கால், அது நீரின்றி  
        வாடியதனால் விநாயகக் கடவுளை வழிபட்டு வேண்டினன்.  
        அப்போது அகத்தியர் தம் கமண்டலத்திலே ஆகாய கங்கையைக்  
        கொண்டு தென்றிசை போந்த சமயம் கொங்கு நாட்டிலே விநாயகர்  
        அக்கமண்டலத்தைக் கவிழ்க்க அதுவே காவிரியாகப் பரந்து ஓடிச்  
        சோழநாட்டிற் புகுந்து நந்தனவனத்தைச் செழிக்கச் செய்தது என்பது  
        சரிதம். 
         
             இதன் விரிவும் கந்தபுராணம் கூறும். மேலே காவிரிநாடு 
        என்று  
        தொடங்கினாராதலின் அந்நாட்டைக் கூறுமுன் அதற்குரிய அந்த  
        ஆற்றின் சிறப்பைக் கூறினார். நாட்டின் சிறப்புக்குக் குடிவளமும்,  
        குடிவளத்துக்கு உழவு வளமும், அதற்கு நீர்வளமும், ஒன்றற்கொன்று  
        இன்றியமையாதன ஆதலின் நாட்டுச் சிறப்பின் முகப்பிலே ஆற்றுச்  
        சிறப்புத் தொடங்கிப் பேசினார் என்க. இது முதல் 9 பாட்டுக்களில்  
        காவிரிச் சிறப்புக் கூறுகின்றார். இச்சிறப்புக்கள் யாவும் வேறு எந்த  
        யாற்றினுக்கும் பொருந்தச் சொல்ல இயலாத சிறப்பியல்புகளாதலும்  
        காண்க. யாற்றின் சிறப்பைப் பிறபுலவோர் தனிப்படலங்களாக  
        விரித்துக் கூறுதலும், ஆசிரியர் அதனை வேண்டிய அளவிற்  
        சுருக்கி யாத்து  நின்றமையும் 
        உணர்க. பூதம் - தூய்மையுமாம்.  
        பூதநீ்ர் - ஐம்பூதங்களில் ஒன்றாகிய நீர் எனவும், உற்பவத்தைச்  
        செய்கின்ற நீர் (பூ - செனித்தல்) எனவும், கமண்டலத்துள்ளே  
        அடங்கி உருவிற் சிறிதாயினும் வலியிற் பெரிதாய்ப் பூதங்கள் போன்ற  
        நீர் என்று பொருள் உரைத்துக் கொள்ளத் தக்கது. கமண்டலம் 
        -  
        (தவமுனிவர்கள் தாங்கும்), மூக்குடையதொரு சிறுபாத்திரம்;  
        கமண்டலம் பொழிந்த பூதநீர்க் காவிரி என மாற்றுக. பொழிந்த 
        -  
        பெருகிய. 
         
             மாதர்மண் மடந்தை 
        பொன்மார்பில் தாழ்ந்தது - மாதர்  
        - அழகு. மண்மடந்தை - பூமிதேவி. பொன்மார்பு 
        -  
        பொன்னிறமுடைய மார்பு, மண்ணிற்கு நிறம் பொன்மையும், நீருக்கு  
        நிறம் வெண்மையுமாம். “பொன்பார் புனல்வெண்மை....“என்பது சைவ  
        சாத்திரம். பால் பசுவின் உடல் முழுதும் நிறைவுள்ளதாயினும் அதன்  
        முலையிலே வெளிப்படுவதுபோல, மண் மடந்தை முழுதும்  
        பொன்மையுடையவளாயினும், காவிரி ஒழுகியியலும் உயர்ந்த பகுதியே  
        அப்பொன்மை, தேற்றம்பெற வெளிப்பட்டுத் தோன்றும் என்பார்,  
        “மண்மடந்தை பொன்மார்பில்“ என்றார். காவிரியின்  
        தொடக்கப்பிரதேசத்திலிருந்து (Kolar Gold Fields) இப்பொழுதும்  
        பொன் விளையக் காண்டலும் இங்குக் குறிக்கற்பாலதாம். “மகளிர்க்  
        குறுப்பிற் சிறந்த உறுப்பாகிய முலை“ என்று பேராசிரியர்  
        திருக்கோவையாருரையில் விரித்தமையும் இங்கு வத்தெண்ணத்தக்கது.  
        நீருக்கு நிறம் வெண்மை யாதலின் ‘நித்திலத் தாமம்' என்றார். 
         
             ஓதநீர் நித்திலம் 
        - சலத்திற் பிறந்த ஒளிநீர்மையுடைய  
        முத்து. கரும்பு - யானை மத்தகம் முதலிய பல 
        இடங்களிலும்  
        முத்துப் பிறக்கும். இங்கு நீரைக் குறித்தலால் அதற்கேற்பச் சலச  
        முத்தினைக்குறித்தார். உலகினை ஊட்டி வளர்க்கும் தன்மையாலும்,  
        எல்லாப் பொருள்களையும் தன்னிடத்திலே தங்கவைத்துத்  
        தோற்றுவித்தலாலும், நிலத்தை மடந்தை என்றார். (பூமி - பூ - பகுதி  
        - செனிப்பிப்பது - எனப் பொருளாதலும் காண்க) இதனை வரும்  
        பாட்டிற் காண்க. 
         
             தாழ்ந்த - கீழ் இறங்கி வந்த என்று கொண்டு - 
         
        மார்பினின்றும் போந்து இறங்கிய - எனக் கூறுதலுமாம்.  
        இப்பொருளில் மார்புபோன்ற சைய மலையினின்றும் போந்து கீழே  
        வருகின்ற என்பது கருத்தாகக் கொள்க. இதனால் யாற்றுச் சிறப்பும்  
        நாட்டுச் சிறப்பும் ஒருங்கே கூறத்தொடங்கியவாறு.  2  
       |