| 541. 
             | 
           
            நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின் | 
            | 
         
         
          |   | 
          றுலைவில் 
            பஃறன மொன்றொழி யாமையுய்த்  
                                        தொழிந்தேன்; 
             
            றலைவ! யானுமென் மனைவியுஞ் சிறுவனுந்  
                                            தகுமேற் 
            றுலையி லேறிடப் பெறுவதுன் னரு ளெனத்  
                                          தொழுதார். 
             | 
          40 | 
         
       
           (இ-ள்.) 
        வெளிப்படை. மற்று அந்த நிலைமையை நோக்கிய  
        நிகரில்லாதவராகிய நாயனார் மறையவர்முன் நேரெ நின்று  
        கேடில்லாத பலவகையாகிய தனங்களை யெல்லாம் ஒன்றுகூட  
        விடாமல் தட்டிலே இட்டு முடித்தேன். தலைவரே! யானும் எனது  
        மனைவியும் சிறுவனும் தகுமேல் துலையிலே இட ஏறப்பெறுதற்கு  
        உன் அருள் இருப்பதாக என்று தொழுதனர். 
         
             (வி-ரை.) 
        மற்றது - வேறாகிய அது. தனம் 
        முதலிய பொருட்  
        சார்புகளாற் கோவண நேர்பெறக்கூடும் என்ற எண்ணம் இதுவரை  
        நின்றது. இங்கு அது கழிந்து ஒழிந்து வேறுநிலை வருகின்றது.  
        ஆதலின் மற்று என்ற வினைமாற்றுச் சொல்லும் 
        அது என்ற  
        சேய்மைச் சுட்டும் தந்து ஓதினார். 
         
             நோக்கிய 
        - நோக்கம் - கூர்ந்த பார்வை. கண்ணொடு  
        கண்ணிணை நோக்கொக்கின் - குறள் 
        அண்ணலு நோக்கினான்  
        அவளு நோக்கினான் - கம்பராமாயணம். 
        இந்நிலையினைக்  
        கூர்ந்து அறிந்த நாயனார் பொருட்சார்புகள் யாவும் நேர்நிலா  
        தொழிந்தமை யுணர்ந்தனர்; உணரவே அந்தப் போதத்தினை ஒழித்து  
        எஞ்சிய உயிர்ச் சார்புகளை நேர்தர மனத்தில் எண்ணுகின்றார் எனும்  
        மனநிலை குறித்தது. 
         
             நேர்நின்று 
        - ஒரு பெருஞ்செயல் குறித்தோர் நேர்நிற்றல்  
        முறையாம். உடற் செவ்வே நிறுத்தி - திருமந்திரம். செந்நின்று 
         
        - திருஞான. புரா - 1052 காண்க. நேர் - 
        நேரே - எதிரே - என்றது  
        வெளிப்பொருள். எதிர்நின்று என்பது வரும் 
        பாட்டு. நேர்பெற  
        நின்று என்றலுமாம். நேர் - நேர்ச்சி - 
        சமன் - என்க. இங்குக் கூறிய  
        செயலால் கோவண நேர்பெறப் போகின்றார் என்றது குறிப்பு. 
         
             உலைவு 
        இல் - உலைதல் - கெடுதல். உலைவில்லாத தனம்  
        என்றது இதுவரை அது எண்ணித் தீர்ந்தது என்று சொல்ல  
        இயலாதபடி மிகுந்திருந்த தனம். இன்று தீர்ந்தது என்னும்  
        சொற்பெறுதல் இங்கு உலைவு எனப்பட்டது. உண்மையில் அவை  
        கெடுதலில்லாதனவே யாம். சிவனடியார் பெற்ற தனமாயிருந்தன;  
        சிவன்பாற் கொடுக்கப்பெற்றன; கேடிலானுடைய வாயினமையின்  
        இவையும் கேடிலாதனவாயின என்க. 
         
             ஒன்றும் 
        - முற்றும்மை. ஒன்றொழியாமை 
        - முழுமையும் -  
        என்றதனை உறுதிபெற வழங்கும் அழகிய வழக்கு. 
         
             ஒழியாமை 
        - ஒழியாமல். உய்த்து - தட்டிலே இட்டு. 
         
             ஒழிந்தேன் 
        - இட்டு முடித்தேன். தீர்த்தேன். எனது -  
        என் பொருள் என்ற மமகாரம் ஒழிந்தேன் என்பது குறிப்பு.  
        ஒழியாமையிட்டொழிந்தேன் என்ற சொற்சுவையுங் காண்க.  
        ஒழிந்தேன் - யான்மட்டும் எஞ்சினேன் என்ற 
        குறிப்புமாம். 
         
             தலைவ! 
        யான் எனது என் றற்ற விடமே திருவடி என்றபடி  
        இங்கு எனது என்பது அற்று, யான் என்பது விட்டமையால் திருவடி  
        தோன்றிற்று. அடியைத் தலையின்மேற் கொள்ளப்படும்; திருவடி  
        தோன்றவே தான் அடிமை என்பதும் தோன்றிற்று. ஆதலின் இங்குத்  
        தலைவ என்றார். 
         
             யானும் - 
        எனது என்ற தொழிந்தேனாக, யான் என்றது  
        எஞ்சியது; அதனையும் என்க. அவ்வாறு எஞ்சியதாகிய - எச்சமாகிய  
        - என உம்மை எச்சவும்மை. 
         
             என்மனைவியும் 
        - சிறுவனும் - மனைவி முன்னரும் அவர்  
        மூலம் சிறுவனும் வருதலின் அம்முறை வைத்தார். மனைவி தமது  
        உயிர்ச் சார்பாதலின் என் மனைவி என்று 
        குறித்த ஆசிரியர்  
        சிறுவன் - இருவர் சார்புமாதலின் வாளா கூறினார். சிறிய மகார்க்குத் 
         
        தாயின் சார்பு மிகுதலின் முன்னர் வைக்காது மனைவியாரின் பின்னர்  
        அவரைச் சாரவைத்தனர். 
         
             தகும் 
        மேல் - தகுவதாயின் - தகுமென்று நீர் எண்ணினால்.  
        கோவணத்திற்கு நேர்பெறத் தம்மைக் கொடுக்கத் தமக்குத்  
        தகுதியில்லை என்று எண்ணிய நாயனார் மறையவர் தக்கதென்று  
        இசைந்தால் ஏற நிற்பதாகக் குறிப்பிட்டார். கோவணத்தின்  
        பெருமையும் தமது சிறுமையும் குறிக்கொண்டு சொன்னபடி.  
        இதனானே முன்னர் நோக்கிய என்றார். 
         
             தகுமேற்றுலையில் 
        - என்று கூட்டி யுரைத்தலுமாம். இதுவரை  
        அத்தகுதி பெறாது இனி நேர் நிற்கும் தகுதி பெறுவதாகிய மேற்றுலை  
        என்ற குறிப்பும் பெற இருபொருள் குறித்து வழங்கிய சொற்சுவை  
        காண்க. 
         
             ஏறிடப் 
        பெறுவது உன் அருள் - இட ஏறப்பெறுவது என  
        மாற்றுக. இட - இட்டார் 
        - 533. இடஇட 534, இடஇட 535,  
        இடுந்தட்டு - 536, இடப்பெற 537, இடஇட 
        539 என்றவை  
        போலத் தங்களையும் கோவண நேர் பெறும் பொருட்டுத் தட்டிலே  
        இடும் - பொருளாக வைக்கத் துணிந்தார். 
        ஆதலின் இட - என்றார்.  
        இடும் பொருட்டு நாங்கள் ஏற நீர் கோவணநேராக எங்களை  
        ஏற்றுப்பெற்றுக்கொள்வது என்பதாம். உமது அருள் இருப்பதாக!  
        என்பது தொக்கி நின்றது. 
         
             சிறுவனும் 
        - நாயனார்க்கு அக்காலத்து ஒரு சிறு மைந்தர்  
        இருந்தனர். அவரும் துலைத்தட்டிலே இவருடன் ஒக்க ஏறி அழிவில்  
        வான்பதம் பெற்றனர் (548) என்று ஆசிரியர் கூறியவாறாம்.  
        சிறுத்தொண்ட நாயனார் சரிதமும் இங்கு நினைவு கூர்க. மைந்தர்  
        இருந்தமை முதனூல் வகைநூல்களிற் பெறாதிருப்ப ஆசிரியர்  
        கூறுவதென்னை? யெனின்,  
         
      
         
          நாட்கொண்ட 
            தாமரைப் பூந்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே 
            கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான் 
            வாட்கொண்ட கண்ணி மனைவி யொடங்கோர் வாணிகனை 
            ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோ? விவ் வகலிடமே | 
         
       
      என்ற அப்பர் சுவாமிகள் 
        திருவிருத்தத்தான் அறியக்கிடக்கின்றபடி  
        இச்சரிதம் பண்டைக்காலம்தொட்டு வழங்கிய வழக்கினானும்  
        திருவருளானும் கண்டுரைத்தனர் ஆசிரியர் என்க. 40 
       |