| 91. 
              | 
          படர்ந்த 
            பேரொளிப் பன்மணி வீதிதான் | 
            | 
         
         
          |   | 
          இடந்த 
            வேனமு மன்னமுந் தேடுவார் 
            தொடர்ந்து கொண்டவன் றொண்டர்க்குத் தூதுபோய் 
            நடந்த செந்தா மரையடி நாறுமால். | 
          6 | 
         
       
       
           (இ-ள்.) 
      படர்ந்த ... தான் - பேரொளி வீசும் பல மணிகள்  
      தூக்கிக் கட்டிய, அந்நகரின் அம்மாளிகை இருக்கும், வீதியானது;  
      இடந்த ... தேடுவார்- தோண்டிச் சென்ற பன்றியினாலும் (பறந்து  
      சென்ற) அன்னத்தினாலும் தேடப் பெறுபவராகிய இறைவர்;  
      தொடர்ந்து ... நாறுமால் - தாமே வலியத் தொடர்ந்து சென்று  
      ஆளாகக் கொண்ட வன்றொண்டர்க்காக (அந்த மாளிகைக்கு)த்  
      தூதாகப் போய் நடந்து வந்த செந்தாமரை போலும் திருவடி மணம்  
      கமழ்ந்துகொண்டேயிருக்கும். 
       
           (வி-ரை.) 
      வீதி - தூதுபோய் - நடந்த - அடி - நாறும் -  
      என்க. 
       
           மணிவீதி தான் 
      - மணிகள் கட்டி அலங்கரிக்கப் பெற்ற  
      திருவீதி. மணிகள் அவ்வீதிகளில் எப்போதும் நிகழும்  
      திருவிழாக்களின்பொருட்டுச் செய்யப்பெறும் அலங்காரங்கள்.  
      “வீதிகள் தோறும் ... சோதிகள் விட்டுச் சுடர்மாமணிகள்  
      ஒளிதோன்ற” என்று இத்திருவீதியினை அப்பர் சுவாமிகள்  
      சிறப்பித்துப் பாடியருளினமை காண்க. இச்சிறப்பு இத்திருவீதி  
      ஒன்றிற்கே உள்ளதென்பது தோன்ற வீதி தான் என்றார். இவ்வீதியிற்  
      படர்ந்த பேரொளிச் சிறப்பும், பிறவும் பின்னர் ஏயர்கோனாயனார்  
      புராணத்திற் காண்க. பன்மணிப் பேரொளி படர்ந்த வீதி எனக்  
      கூட்டுக. வீதிபார் என்பது பாடமாயின், வீதியானது - பார் இடந்த  
      ஏனம் - எனக் கூட்டுக. 
       
           இடந்த ஏனம் 
      - பன்றியுருவுடன் பூமியைத் தோண்டிக்  
      கொண்டு அடிதேடிச் சென்ற விட்டுணுமூர்த்தி.  
       
           அன்னம் 
      - (அங்ஙனமே) அன்னவுருவெடுத்து விண்பறந்து  
      முடிதேடிச் சென்ற பிரமதேவர். பார்இடந்த ஏனம் என்றமையால்  
      விண்பறந்த என அன்னத்திற்குரிய அடைகள் வருவித்துக்கொள்க. 
       
           தேடுவார் 
      - (ஏனத்தாலும் அன்னத்தாலும்) தேடப் பெறுபவர்.  
      அழற்றூணாய் நின்ற சிவபெருமானது அடிமுடிகளை இவ்வாறு இவர்கள் தேடச் சென்றும் காண இயலாது 
      நின்ற வரலாறு காந்தமா  
      புராணத்துள் விரித்துக் கூறப்பெறும். அப்புராணமேயன்றி (த் தமிழ்)  
      வேதமாகிய அப்பர் சுவாமிகளது இலிங்க புராணத் திருக்  
      குறுந்தொகைத் திருப்பதிகமும், பிறவும் விரித்துக் கூறும்.  
       
           தேடுவார் 
      - தேடப்படுவார் என்பதில் படு விகுதி தொக்கு  
      நின்றது. “இல்வாழ்வான் என்பான்” என்பதுபோல. இவ்வாறு  
      வருதலை வடநூலார் நயக்கு என்பர். இக்கருத்தையே பின்னும்  
      அனுவதித்து (ஏயர்கோ - புரா - 324) பாட்டில் கூறுதலும் காண்க. 
       
           தொடர்ந்து கொண்ட 
      - பெருந் தேவர்களாற் றேடப்பெறும்  
      அப்பெருமை வாய்ந்தவராயிருந்தும் தாமே வலியத் தொடர்ந்து  
      ஆளாக்கொண்டவராயும், அப்போது மறுத்து வலிமைபேசி  
      வன்றொண்டர் என்ற பேர்பெற்றவராயும் உள்ள. பிறர் தம்மைத்  
      தேடிச் செல்லத் தாம் இவரைத் தேடித் தொடர்ந்து கொண்டார்  
      என்றது, குறிப்பு.அடியவர்சிறப்பும் உரைத்ததாம். வன்றொண்டர்க்கு 
       
      - வன்றொண்டர்க்காக. 
       
           தூதுபோய் நடந்த 
      - இவ்வரலாறு பின்னர் ஏயர்கோன்  
      கலிக்காம நாயனார் புராணத்து 323 - 374 - வரை  
      திருப்பாட்டுக்களிற் காண்க. 
       
           அவ்வீதி பரவையார் அவதரித்த மாளிகையுடையதேயன்றி, 
       
      அந்த மாளிகைக்கு அவரிடம் தொண்டர்க்காகத் தூதுபோய்நடந்த  
      மணங்கமழும் பெருமையுமுடையதென அதனை அடுத்துக்கூறி,  
      அங்கு உரைக்கென் என முடித்தபடி. 
       
           போயின என்னாது போய் நடந்த என இருமுறை கூறியது  
      ஓரிரவிலே இருமுறை நடந்து தூதுசென்ற சரிதத்தைக் குறித்ததாம்.  
      இப்பாட்டிற் கூறிய சிறப்பினை இம் முறையே, 
       
       
      
         
          “... 
            அடியிட்ட செந்தமிழி னருமையிட் டாரூரி லரிவையோர் 
                                                பரவை 
            வாயில் 
            அம்மட்டு மடியிட்டு நடைநடந் தருளடிகள் அடியீது  
                முடியீதென வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே ...” | 
         
       
       
      என்று தாயுமானார் விதந்து 
      பாராட்டியமையும் காண்க. 
       
           செந்தாமரை யடிநாறும் 
      - செந்தாமரைபோன்ற திருவடியின்  
      திருமணம் வீசும். தாமரை என்றதற்கேற்க நாறும் என்றார்.  
      திருவடியைத் தாமரை என்பது வழக்கு. ஒருமுறைக் கிருமுறை தூது  
      நடந்ததனால் அடி சிவந்ததென்பதும் குறிப்பு. 
       
           தேடுவார் தேடித் தொடர்ந்துகொண்டதுமன்றித் தேடித் 
      தூதும்  
      போனார் என்ற சுவையும் காண்க. “அணியுடைய நெடுவீதி  
      நடப்பர்போலும் அணியாரூர்த் திருமூலட் டானனாரே” எனத்  
      திருமூலட்டானத்திலே எழுந்தருளியிருப்பதை விட்டுத் திருவீதியிலே  
      வந்து திருவிழாக் கொள்வர் என்ற கருத்துப்பெற, அப்பர் பெருமான்  
      சுவைபெறக் கூறியருளியமையும் இங்குக் காண்க. நாறுதல் -  
      அருள்விளங்குதல். 
       
           வீதிபார் 
      - என்பதும் பாடம். 6 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |