96. தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்  
  வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த வின்பத் துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்வே றிடத்ததத் தொன்னகர்.
11

     (இ-ள்.) தாழ்ந்த...விரவுவார் - தலையிலிருந்து நிலம்வரை
நீண்டு தொங்கிய சடையுடையவர்கள், சைவர்கள், பெருந் தவசிகள்,
வாழ்வையடைந்த மனமுடையவர்களாகிய முனிவர்கள், வேதியர்,
விரும்பிய இன்பத் துறைகளிலே பொருந்தியவர்கள்; (என்ற இவர்கள்
பலரும்) சூழ்ந்த ... நகர் - சுற்றிச் சூழ்ந்து வாழும் பற்பல வெவ்வேறு
இடங்களையுடையது அந்தப் பழமை மிகுந்த திருவாரூர்த் திருநகரம்.


     (வி-ரை.) தாழ்ந்த வேணியர் - நீண்டநாள் வளர்க்கப்
பெற்றதாதலின் தாழ்ந்தது. தாழ்ந்த - விரும்பிய என்று
பொருள்கொண்டு தாம் விரும்பிய என்றும், பிறர்க்கு விருப்பத்தை
விளைவிக்கின்ற என்றும் பொருள் கூறலும் ஒன்று. 52-ம் பாட்டின்கீழ்
உரையிற் காண்க.

     வேணி - சடை; சைவத்திற்கே சிறப்பாக உள்ள
அடையாளங்களில் ஒன்று. “சைவம் விட்டிட்ட சடை“ என்பது
திருவிசைப்பா. மும்மையா லுலகாண்ட மூர்த்தி நாயனார் புராணமும்
காண்க. சடையான் என்பது சிவபெருமானுக்கே உரிய பெயராம்.

     தாழ்ந்த வேணியர் சைவர் - நீண்ட சடை
கொண்டவர்களாகியதொருவகையினரும், பிறரும், ஆகிய சைவர்கள்
- காபாலியர் - பாசுபதர் முதலிய பலவேடங்களையுடைய சைவர்.
சிறுத்தொண்ட நாயனாருக்கு அருள்புரியப் பெருமான்
கொண்டருளியது காபாலிச் சைவ வேடம். இதனைப் புராணத்துக் காண்க. “... பம்புசடைத் திருமுனிவர் காபாலக்கையர் பலவேடச்
சைவர் ...“ திருஞா - புராணம் - 1018.

     தபோதனர்
- தவத்தையே தனமாகவுடையவர். அன்மொழித்
தொகை; வடநூன் முடிபு. தனம் - செல்வம். தவம் - சரியையாதி
சிவபூசை. இது முன்னரே விரிக்கப்பெற்றது.

     வாழ்ந்த சிந்தை முனிவர் - முனிவர் - மனனசீலத்தை
உடையவர். தமக்கென வாழாது பிறர்க்கெனவே வாழ்ந்த - என்று
முரைப்பர்.

     வீழ்ந்த இன்பத் துறையில் விரவுவார் - வீழ்தல் - விரும்புதல்.
“தாம் வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல்“ என்ற குறளில்,
“வீழ்வார்“ என்பதற்கு விரும்புவார் - என ஆசிரியர் பரிமேலழகியர்
பொருளுரைத்தமை நோக்குக. இவ்விருப்பங்கள் பெரும்பான்மை
மக்களை வீழ்த்துவன எனும் குறிப்பும் பெற இன்பத்துறைக்கு
வீழ்ந்த என்ற எச்சம் கொடுத்துக் கூறினார். ஆனால் இங்கு
உள்ளாரை அவ்விருப்பங்கள் வீழ்த்தாது உயர்த்துவனவேயாம்
என்று குறிக்கத் தபோதனர்; முனிவர், மறையவர் முதலிய
வகையினருடன் கூட்டிக் கூறினார் என்னை? இன்பத் துறையில்
விரவுவாராயினும் தபோதனர் - முனிவர் - மறையோர்களது தன்மை
கொண்டு வாழ்வார்கள் என்ற காரணத்தாலென்க.

“...... ஐந்து புலன்களு மார வார்ந்தும்
மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந் தோங்கி
இவ்வகை யிருந்தோ மாயினு மவ்வகை
மந்திர வெழுத்தைந்தும் வாயிடை மறவாது
சிந்தை நின்வழிச் செலுத்தலி னந்த
முத்தியு மிழந்திலம் முதல்வ! ......“
               - பதினோராந்திருமுறை.

என்று இக்கருத்துக்களைப் பட்டினத்தடிகள் திருவிடைமருதூர்
மும்மணிக் கோவையில் 19-வது திருப்பாட்டில் எடுத்துக்
காட்டியிருப்பது இங்கு வைத்துக் காணத்தக்கது. மேலும் திருவாரூர்ப்
பிறந்தார்கள் யாவரும், பிறந்த அக்காரணம் பற்றியே, முத்தி பெறும்
தகுதியுடையராதலின், அத்திருநகரிலே முயன்று தவங்கிடந்து முத்தி
பெறும் முனிவர் மறையோர் முதலிய கூட்டத்துடன் இவர்களையும்
கூட்டி உரைத்தனர் என்பதுமாம். வேணியர் என்பது துறவிகளையும்,
சைவர், தபோதனர் என்பது சிவதீக்கை பெற்றுச் சிவபூசை செய்யும்
பல ஆச்சிரமங்களிலுமுள்ள சைவர் - ஆதிசைவர் என்ற
முனிவர்களையும், முனிவர் என்பது எல்லா வருணத்துள்ளும்
மனனசீல வாழ்வுடையோரையும், மறையோர் - மகா சைவராகிய
வேதியரையும், விரவுவார் - அரசவீதியிலும் கோயிற்சுற்று
விழாவீதியிலும் இருக்கத்தக்க ஏனைய எல்லா இல்வாழ்வார்களையும்
குறிக்கும் என்றும் கூறுவர்.


     வேணியர் - சைவர் - ஆதிசைவர் எனவும், வீழ்ந்த
இன்பத்துறை
- சிவபெருமானிடத்திலே பதிந்து விழுந்த
பேரின்பத்துறை எனவும், இவ்வாறு பிறவும் உரைப்பாருமுளர்.
சைவராகிய தபோதனர் - என்றும் விரவுவாராகியும்
முனிவராயுமுள்ள மறையோர் என்றும் கூட்டி உரைப்பாருமுண்டு.
பல்வேறிடத்தது என்று கூறுவதால் இங்குக் கூறும் பலரும் பற்பல
வகையினர் என்றும், அவர் பலபல வெவ்வேறு இடங்களில்
வாழத்தக்கவர் என்றும் அறிகின்றோமாதலின் வெவ்வேறு
பெயராற்கூறிய இவ்வகையினரை, எவ்வாற்றானும் சேர்த்துக்
கூறாது, வெவ்வேறு வகுப்பினராக உரைத்தலே ஆசிரியர்
கருத்தாகக் கொள்க.

     சூழ்ந்த - மொய்த்து நெருங்கிய. இடம் பலவேறாயினும்
இறைவனது பூங்கோயிலாகிய அகமலர் ஒன்றினையே இவை
எல்லாம் சுற்றிச் சூழ்ந்திருந்தன என்பதும், இங்கு வாழும்
இவ்வெல்லா வகையினரும் பூங்கோயிலுள்ளாரையே மனத்தாற்
சூழ்ந்து கொண்டு வாழ்வார் என்பதும் பெறப்படும். “அனையதனுக்கு
அகமலராம் அறவனார் பூங்கோயில்“ என்று பின்னர்க் கூறுதலும்
காண்க.

     பல்வேறிடத்தது - என்றமையால் நகர அமைப்பிலே,
ஒழுக்கம் - தொழில் - குலம் - முதலிய எவ்வித வேறுபாட்டையும்
பாராட்டாமல் யாவரேனும் யாண்டாயினும் இருத்தற்குரியார் என்ற
இக்காலத்துப் புதுக்கொள்கை, முன்னாள் நகரங்கள் அமைத்த
அறிவாளிகளுக்குக் கருத்தன்று என்பதுணரப்பெறும்.

     தொன்னகர் - நகரின் தொன்மை முன்னர் முதற் பாட்டின்
கீழ் உரைக்கப்பெற்றது. வேணியர் - சைவர் முதலிய அவ்வவர்களது
இருப்பிடம் இறைவனது பூங்கோயிலுக்கு அணிமை கருதிய
வரிசையிலே அமைக்கப்பெற்றன என்க.

     இவ்வகையினராகிய பல வேறுவகைச் சைவர்களும்
திருவாரூரில் வாழ்ந்து பெருமானை வழிபட்டு வருகின்றார்கள்
என்பதாம். இஃது,

“அரும ணித்தடம் பூண்முலை யரம்பையரொ
                               டருளிப்பாடியர்
உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிக ளந்தணர் சைவர்பாசு பதர்கபாலிகள்
தெருவினிற் பொலியும் திருவாரூ ரம்மானே“
                               - சீகாமரம் - 3

எனும் அரசுகள் தேவாரத்தால் அறியலாம். இதிலே “தெருவினிற்
பொலியும்“ என்று கூறிய அகநகர் வீதியையே இப்பாட்டில்
ஆசிரியர் “சூழ்ந்த பல்வேறிடத்தது“ எனக் குறித்தனர். இங்குக்
குறித்த தாழ்ந்த வேணியர், சைவர் என்பவர்கள் சைவத்தின்
உட்சமயத்தவர்களாம்.

“... சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே“

என்ற திருஞானசம்பந்த நாயனார் தக்கேசிப் பண் தேவாரமும்
காண்க.   11