1053.



ஊரில்விடும் பறைத்துடவை யுணவுரிமை யாக்கொண்டு
சார்பில்வருந் தொழில்செய்வார் தலைநின்றார்
                              தொண்டினால்;
கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயிறொறும்
பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும், 13 

     1053. (இ-ள்.) வெளிப்படை. (அவர்) ஊரில் விடப்பட்ட,
வெட்டிமைத் தொழிலுக்குள்ள மானிய நிலத்தின் வருவாயைத்
தமக்கு உணவுக்கு ஆதரவாகக் கொண்டு, தமது பிறப்பின்
சார்பினால் வரும் தொழிலைச்செய்து வருவார், திருத்தொண்டினால்
தலைநின்றார்; கூர்மையாகிய இலைவடிவுடைய மூன்று
தலைகளையுடையசூலப்படை யேந்திய சிவபெருமானுடைய
திருக்கோயில்கள்தோறும் பேரிகை முதலாகிய முகமுடைய
கருவிகள் பிறவற்றுக்கும், 13 1054.

     1053. (வி-ரை.) ஊரில் விடும்பறைத்துடவை - ஊரில்
பொதுச் சமூக ஊழியத்துக்காக விடப்படும பறைத்தொழில் மானியம்.
ஊரால் என்றது ஊரில் என வந்தது உருபு மயக்கம். விடும் -
விடப்படும். படுவிகுதி தொக்குவந்த செயப்பாட்டு வினைப்பெயரெச்ச
முடிபு. பறை - பறைதல், சொல்லுதல். பொதுச்சமூக நிகழ்ச்சியான
செய்திகளை ஊராரறியப் பறைசாற்றிச் சொல்லுதல் காரணமாகப்
போந்த பெயர். பறையர் - சொல்வோர். தொழிலின் பெயர்
அத்தொழிலைச் செய்யும் மரபுக்கு ஆகிவந்தது. இதுகாரணமாகவே
பறை என்ற கருவிக்கும் இப்பெயர் வந்தது. "ஊட்டிமுன் பறைந்தோர்
பார்ப்பான்" (758) என்றதும், பிறவும் காண்க. இத்தமிழ்ச்சொல்
இப்பொருளில் மலையாள மொழியில் நின்று இன்றும் வழங்குவதாம்.

     இப்பெயருக்கு இக்காலத்துத் தொடரும் இழிபொருள்
இம்மரபினர் செய்யும் புலைத்தொழிலின் றொடக்கினாற்
கூடியதென்பர். இதுபோன்ற சாதிப் பெயர்களில் இழிபு தொடக்காத
- நிலையினைச் சுவைபெறக்காட்டும் கருத்துடன் கச்சியப்ப முனிவர்
பேரூர்ப் புராணத்தினுள் "மறையவ னரசன் செட்டிதன்றாதை
வயங்குநூற் சூத்திரன் புவனம், பறைதரு நல்ல சங்கரன் வேடன் பணி சிவன் விளங்குமுக் கணக்கன், அறைசெயம் பட்ட னகமது
புறத்தே காலியாட்டரவமா ரிடையன், பறையனு முன்னரானநீ
யின்று பள்ளனா னமைதெரிந்தேன்யான்" (பள்ளுப்படலம் - 35)
என்று தமிழ்ச்சுவையும் விரவத் தெருட்டிய திறம் இங்கு
நினைவுகூர்தற்பாலது. துடவை- புன்செய்த்தோட்டம். அந்நிலத்திற்
கிடைக்கும் வருவாய்க்காகியது.

     உணவு உரிமை- உரிமையாற் பெறும் உணவுக்குரிய
ஆதரவு- சீவனம் என்பர் வடவர்.

     சார்பில்வரும் தொழில்- பிறந்த மரபின் சார்பினால்
செய்யும் புலையர் தொழில். "பிறப்பின் சார்பாற், குற்றமே குணமா
வாழ்வான் கொடுமையே தலைநின் றுள்ளான்" (657) என்றது
காண்க. வரும் சார்பு - பிறப்பின் சார்பு. இனிச், சார்பு என்பதற்கு
மேலைச்சார்பு என்று கொண்டு முன்பிறவியில் சிவன் கழற்கே
விளைத்த சார்பினால் வருகின்ற சிவன் அடிமைத் திறத்துக்கேற்ற
தொழில் என்று கொள்ளுதலும் ஆம். இப்பொருளில் செய்வார் -
செய்வாராகித் (முற்றெச்சம்) - தலை நின்றார் என்று முடிக்க.

     சார்பில்வரும் தொழில் செய்வார் தலைநின்றார்
தொண்டினால்
- புலையர் பிறவியின் சார்பினால் வரும் மரபுத்
தொழிலைச் செய்வாரேனும் திருத்தொண்டில் சிறந்து விளங்கினார்
என்க. தலைநிற்றல் - சிறத்தல். முயலுதல் என்றலுமாம்.

     கூர் இலைய முக்குடுமிப் படை - சூலம். கூர்மையான
மூன்று தலையுடைய படை. இது சிவபெருமானுக்குச் சிறப்பாய்
உரியது."ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்" (பிரமபுரம் -வியாழக்
குறிஞ்சி - திருவெழுகூற்றிருக்கை) என்ற ஆளுடைய பிள்ளையார்
தேவாரமும், "மருள்பொழிமும் மலஞ்சிதைக்கும் வடிச்சூலம்"

     (சிறுத் - புரா - 35) என்ற மாபுராணமும் காண்க."அயில்
கொள் முக்குடுமிப்படை" (1040) என்றவிடத் துரைத்தவையும் பார்க்க.

     பேரிகையே முதலாய முகக்கருவி பிற - இவை தோலால்
மூடப்பட்டு முழக்கப்படுவன. முழக்கப்படும் இடம் முகம் எனப்படும்.
இருமுகம், ஐம்முகம் உள்ளனவும் இருத்தலால் முகக்கருவி எனப்
பொதுப்படக் கூறினார். சிறப்புப்பற்றி பேரிகையை எடுத்துக்கூறி
முதலாய
என்றார். "பேரியோடும்" (1003) என்றதும் காண்க.
(திருவாரூரில் தியாகேசர் சந்நிதியில் முழுக்கப்படுவது முசுகுந்தர்
தேவருலகத்திலிருந்து தியாகேசருடன் கொணர்ந்த ஐம்முகமுள்ள
பேரி) இவை தோற்கருவி எனப்படும். 13