1057.



சீரேறு மிசைபாடித் திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும் பிடவேண்டு மெனநினைந்தார்க்                              கதுநேர்வார்
காரேறு மெயிற்புன்கூர்க் கண்ணுதலார்
                             திருமுன்பு
போரேற்றை விலங்கவருள் புரிந்தருளிப்
                         புலப்படுத்தார். 17

     (இ-ள்.) வெளிப்படை. சீர் ஏறும் இசையினைப் பாடித்
திருத்தொண்டராகிய நந்தனார், திருவாயிலின் நின்றுகொண்டு
இறைவரை நேரே கண்டு கும்பிடவேண்டுமென்று நினைந்தவர்க்கு
அவ்வாறே அருள்புரிவாராய், மேகங்கள் ஏறிச் செல்லும் மதில்
சூழ்ந்த திருப்புன்கூர்ச் சிவலோகநாதர், தம் முன்பே இருக்கும்
போர்வல்ல இடபவேற்றினை விலகியிருக்கும்படி ஆணையிட்டருளித்
தம்மை நந்தனாருக்கு நேர் காட்சிப் புலப்படும்படி செய்தருளினார்.

     (வி-ரை.) சீர் ஏறும் இசைபாடி - சிறப்பின்மிக்க இசை,
இறைவன் புகழ்களைப் பாடும் இசை. "இறைவன் பொருள்சேர் புகழ்"
(குறள்) என்றது காண்க. உயிர்களைச் சீரினால் ஏறச்செய்கின்ற இசை
என்றலுமாம். இறைவனது புகழ்பாடும் இசைதான் இத்தன்மையுடையது.
ஏனைய இசைகளுக்கு இத்தன்மையில்லை. அவை வெறும் புலன்
இன்பமாய் ஒழிந்து உயிர்களை மயக்கிப் பிறவியுட் செலுத்துவன.

     திருவாயில்...நினைந்தார்க்கு - திருவாயிலில் நின்றபடியே
இடையில் எதுவும் மறைக்காதபடி நேரே கண்டு கும்பிடுதல்
வேண்டுமென்று நினைந்தவராகிய அவருக்கு. தமது குல
ஒழுக்கப்படி கோயிற்புறவாயிலினின்று ஆடல் பாடல் புரிந்து
தொண்டு செய்த நந்தனார், தாம் இருந்த வாயிற்புறத்தி னின்றபடியே,
உள்ளே விளங்குகின்ற சிவலோகநாதரை நேர்காண விரும்பினர்;
அதற்குத் தடையாக இருந்து மறைத்தனர் இடபதேவர்; அவரால்
மறைக்கப்படாது நேரே கண்டு கும்பிட வேண்டும் என்று
நினைத்தார். "ஆய பசுவு மடலே றெனநிற்கும்" என்று
திருமந்திரத்திற் கூறியபடி ஏறு. - இடபம் - ஆன்மாவைக்
காட்டிநிற்பது. ஆன்மாவின் தன்மையாகிய பசுத்துவம்
விலகியபோதுதான் பதி தரிசனம் பெறப்படும் என்றதொரு
ஞானசாத்திர உண்மையும் இங்குக் குறிப்பிற் பெறப்படுதல் காண்க.

     அது நேர்வார் - "அவர் தாம் வேண்டு மதனையே
அருளவேண்டி" (341), "வேண்டுவார் வேண்டுவதே யீவான்கண்டாய்"
(திருமறைக்காடு - திருத்தாண்டகம்), "மனத்தானை மனத்திருந்த
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான்றன்னை" (திருவாலவாய் -
தாண்டகம்) முதலியவை பார்க்க. நேர்வார் - வினையாலணையும்
பெயர்.

     நேர்வார் - விலங்க அருள்புரிந்து - புலப்படுத்தார் என்க.

     திருமுன்பு போர் ஏறு - சந்நிதானத்தில் நேர் முன்பு
இருக்கும் பெரிய வலிய இடபதேவர். இப்பொழுதும் இங்கு
இடபதேவர், வெளியே நிற்போர் நேரே இறைவனைத் தரிசிக்கும்படி
வழிவிட்டு விலகி வீற்றிருத்தல் காணத்தக்கது.

     புலப்படுத்தார் - கண்ணாகிய புலனிற் படும்படி
செய்தருளினார். 17