1096. |
நீறு
சேர்திரு மேனியர் நிலாத்திகழ் முடிமேன்
மாறில் கங்கைதா னவர்க்குமஞ் சனந்தர வணைந்தே
யூறு நீர்தரு மொளிமலர்க் கலிகைமா நகரை
வேறு தன்பெரு வைப்பென விளங்குமா முல்லை.
19 |
(இ-ள்.)
வெளிப்படை. திருநீறு சேர்ந்து விளங்குகின்ற
திருமேனியினையுடைய சிவபெருமானது பிறை விளங்கும்
திருமுடிமேல் உள்ள ஒப்பற்ற கங்கையானது அவர்க்குத்
திருமஞ்சனநீரைத் தரும்பொருட்டு இவ்வுலகத்தில் வந்து
அணைந்து ஊறுகின்ற நீரைத்தரும் ஒளிபொருந்திய
மலர்களையுடைய கலிகைமாநகர் என்ற திருவூறல்
என்னும்
தலத்தை வேறாகத் தனது பெரிய சேமவைப்பு என்று
சொல்லும்படி பெரிய முல்லை நிலமானது விளங்கும்.
(வி-ரை.)
நீறு சேர்திருமேனியர் - நீறுசேர் - உலகங்கள்
தீயூழியிற் சாம்பராயின போது அச்சாம்பர் அக்காலத்து
அழியாதிருக்கும் சிவன்திருமேனியில் சேர்ந்துகிடப்பதாம் என்ற
குறிப்புப்பட நின்றது. "வெந்த சாம்பல் விரையெனப் பூசியே"
(கௌசிகம் - திருப்பாசுரம் - 3) என்ற ஆளுடைய பிள்ளையாரது
தேவாரத்துக்கு, ஆசிரியர் சேக்கிழார் நாயனார் அருளிய "வெந்த
சாம்பல் விரையென் பதுதம, தந்த மில்லொளி யல்லா
வொளியெல்லாம், வந்து வெந்தற மற்றப் பொடியணி, சந்தமாக்
காண்ட வண்ணம்" என்ற பேருரையும் இங்கு நினைவு கூர்க. "நீறு
சேர்திரு மேனியர்" (மேகராகக்குறிஞ்சி - பராய்த்துறை - 1) என்ற
ஆளுடைய பிள்ளையார் தேவார ஆட்சி போற்றப்பட்டது காண்க. மேனியரது என ஆறனுருபு விரிக்க.
நிலாத்திகழ்முடி
- திகழ்ச்சி குன்றிய நிலா மீளவும் திகழும்
பேறுபெற்ற திருமுடி என்பதாம்.
மாறில்
கங்கை - மாறுஇல் - ஏழு பெருந் தீர்த்தங்களுள்
ஒன்றாதலானும், அவற்றுள் இறைவன் றிருமுடியில் இருக்கும்
பேறுபெற்றதாகலானும் மாறு இல்லாத தாயிற்று. மாறுஇல்
-
குற்றமற்ற என்றலுமாம். கங்கைதான் - அணைந்தே
- நீர்தரும்
என்று கூட்டுக. மஞ்சனம் - திருமஞ்சனம்
செய்தற்கரிய நீர்
தான் - தானாகவே. கங்கையே என்ற தேற்றப் பொருள்படக்
கூறுதலுமாம்.
முடிமேல்
- கங்கை - மஞ்சனந்தர - அணைந்தே
என்றதனால் முடிமேல் தங்கிக் கிடத்தலினும், இந்நிலவுலகத்தில்
இங்கு ஊறுநீராய் வரின் அவரது திருமேனி முழுதும் தீண்டும் திருமஞ்சனநீராகப் பயன்பெறலாமென்று
எண்ணி அணைந்து
என்ற குறிப்பும் (அணைந்த என்ற சொல்லாற்றலாற்) பெறுதல்
காண்க. அணைதல் - வானிடத்தினின்றும் கயிலையினின்றும்
போந்து இங்குச் சேர்தல்.
ஊறு
நீர் தரும் - ஓடுகின்ற பேரியாறானது சிறிய அளவாய்
உருவெடுத்து ஊறுகின்ற நீரினைத்தரும் என்க. இக்காரணத்தால்
திருவூறல் என்ற இத்தலத்துக்குப் பெயர் வழங்குவதும்
காண்க.
சுவாமி பெயர் சலநாதேசுவரர் எனவும், கங்காதரேசுவர் எனவும்
வழங்கப்படுதலும் காண்க.
வேறு
தன்பெருவைப்பு - வேறு - வேறாகிய - தனியாகிய.
பெருவைப்பு - பெரிய சேமநிதி.
கலிகைமாநகர்
- இது தக்கோலம் எனவும், திருவூறல்
எனவும் வழங்கப்படும். தொண்டை நாட்டில் 12-வது தலம்.
ஆளுடையபிள்ளையாரால் பாடப்பெற்றது.
சுரர்குருவுக்கு
இளையமுனியாகிய சம்வர்த்தன முனிவர் பூசித்த
தலம் என்று ஆசிரியரால் பாராட்டப்படும் பெருமையுடையது.
(திருஞான - புரா - 1005). இது தக்கோலம் என்ற இருப்புப்பாதை
நிலையத்திலிருந்து கிழக்கே ஒரு நாழிகையளவில் உள்ளது. 19
|