1142. கம்பர் காதலி தழுவமெய் குழையக்
     கண்டு நிற்பவுஞ் சரிப்பவு மான
உம்ப ரேமுத லியோனிக ளெல்லா
     முயிரும் யாக்கையு முருகியொன் றாகி
"எம்பி ராட்டிக்கு மெல்லிய ரானா
     ரென்று மேகம்ப" ரென்றெடுத் தேத்த
வம்பு லாமவர் நிறையவிண் பொழியக்
     கம்பை யாறுமுன் வணங்கிய தன்றே.
65

     (இ-ள்.) வெளிப்படை. தமது காதலியாராகிய அம்மையார்தழுவ
ஏகம்பவாணர் மெய்குழைந்ததனைக் கண்டு, நிற்பனவும்
அசைவனவுமாகிய தேவர் முதல் எழுவகைப்பட்ட உயிர்வருக்கங்கள்
எல்லாம் உயிரும் உடம்பும் உருகி ஒன்றாகி, "என்றும் ஏகம்பர் எமது
பிராட்டிக்குத் தழுவக் குழைந்த திருமேனியுடையாராயினார்" என்று
புகழ்ந்து துதிக்க, மணம் வீசும் கற்பகப் புதுப்பூக்களை வானவர்
நிறையப்பொழிய, அப்பொழுதே கம்பையாறு வணங்கித் தன்வெள்ளம்
தணிந்தது.

     (வி-ரை.) காதலி தழுவக் கம்பர் மெய்குழைய - என்க.
கண்டு
- உணர்ந்து. உயிர்கள்தோறும் உயிர்க்குயிராய் ஒளித்துநின்ற
கள்வர் இறைவராதலின் அவர் தழுவக் குழைந்ததனை
எல்லாவுயிர்களும் உணர்ச்சியிற் கண்டன என்பதாம்.

     நிற்பவும்...ஒன்றாகி - நிற்பவும் சரிப்பவும் ஆன அசர
சர பேதமான உயிர். இயங்கியல் நிலையியற் பொருள்கள். தாவர -
சங்கமங்கள் என்பர். ஆன யோனிகள் என்க. நிற்பன சரிப்பன
என்றது நின்றநிலை - நிற்றலும் புடைபெயர்தலும் என ஒரு காரணம்
பற்றிய உயிர்களின் பாகுபாடு.

     தேவரே முதல் - என்றது தேவர் மனிதர் முதலிய பிறப்புப்
பற்றி எழுவகையாகப் பகுக்கப்படும் பாகுபாடு.

     உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி என்றது - ஊனும்
உருகிற்று; அதனுள் நின்ற உயிரும் உருகிற்று என்றதாம்.

     ஒன்றாகி - உருகுதலாகிய ஒரே உணர்ச்சியின்
வயப்பட்டவையாகி. "அவையே தானே யாயிரு வினையிற், போக்கு
வரவு புரிய வாணையின், நீக்க மின்றி நிற்குமன்றே"(சிவஞானபோதம்
2 - சூத்) என்ற ஞான நூலின்படி எல்லாவுயிருள்ளும் அவையேயாகிக்
கலந்து இறைவர் நிற்பவராதலின்அவை யாவும்
அக்குழைதலையடைந்து உருகி ஒன்றாயின என்க. வைகையாற்றின்
கரையில் பாண்டியனது கைப் பிரம்பினாலும், கயிலைமலைச் சாரலில்
அருச்சுனனது வில்லாலும் இறைவனார் அடியுண்டபோது, அவ்வடி
எல்லா உயிர்கள் மேலும் பட்டன என்ற சரிதங்களின் வரலாறும்,
இறைவன் நாயகியாரைப் பிரிந்து யோகத்திலிருந்த காலத்து
"வில்லாடன் மார னிருப்பவும் யோகம் விளைத்தவந்நாட், புல்லா
திருந்தன வெல்லா வுயிருந்தம் போகத்தையே" என்ற வரலாறும்
இங்கு நினைவு கூர்க.

     யோனிகள் எடுத்தேத்த - என்றது உயிர்கள் போற்றிய
செய்தி. விண்பொழிய - என்றது தேவர்கள் போற்றி மலர்மாரி
பொழிந்த செய்தி. விண் - விண்ணுலகத்தவர். ஆகுபெயர்.

     கம்பையாறு முன் வணங்கியது - வெள்ளம் தணிந்தது.
பிழை பொறுக்கும்படி அம்மையாரை அடி வணங்கிற்று
என்பாருமுண்டு. 65