1156.


தாள தொன்றினின் மூன்றுபூ மலருந்
     தமனி யச்செழுந் தாமரைத் தடமு,
நீள வார்புனல் குடதிசை யோடி
     நீர்க ரக்குமா நதியுட, னீடு
நாள லர்ந்தசெங் குவளைபைங் கமல
     நண்ப கற்றரும் பாடல மன்றிக்
காள மேகமொப் பாளுறை வரைப்பிற்
     கண்ப டாதகா யாப்புளி யுளதால். 79

     (இ-ள்.) வெளிப்படை. ஒருதாளில் மூன்று மலர்கள் பூக்கும்
பொற்றாமரையினையுடைய தடமும், மிகப் பெருகிவரும் நீரானது
மேற்குமுகமாக ஓடிப் பின்மறைந்துபோகும் ஆறும், அதனுடனே,
நீண்ட பகற்காலத்தில் மலர்ந்த செங்குவளையும், (இரவில் மலரும்)
பசிய தாமரை மலரும், நடுப்பகலில் மலரும் பாதிரியும், அன்றிக்,
கரிய மேகம்போன்ற நிறங்கொண்ட திருமேனியையுடைய அம்மையார் எழுந்தருளியிருக்கும் அந்த எல்லையில் (இரவில்) உறங்காத காயாத
புளிய மரமும் உண்டு.

     (வி-ரை.) நீள வார் புனல்...நதி - கம்பையாறு. கம்பை
வெள்ளம் (1139), பெருவெள்ளம் (1140), கம்பையாறு (1142) என்றவை
காண்க. மேற்கே ஓடுகின்ற ஆறு சிறப்புடைய தென்பர். நீர்சுரக்கும்
- நிலத்தில் மேற்பரப்பில் ஓடுதல் மறைந்து, நிலத்தின்கீழ் ஓடுகின்ற
என்க. இப்பொழுதும் கிணறுகளில் அடியில் நீர் ஓடுதல் குறிப்பிற்
காணவுள்ளது.

     நாள் அலர்ந்த - நாள் - பகல். குவளை இரவில் மலர்வது;
அது பகலில் மலர்தல் விம்மிதமாம்.

     பைங்கமலம் - குவளை நாள் அலர்ந்து என்றமையால் கமலம்
இரவில் மலர்தல் இங்குக் குறித்த விம்மிதம் என்பது பெறப்பட்டது.
கமலம் - பகலில் மலர்வது.

     நண்பகல் தரு பாடலம் - அவ்விதமே மாலையில் மலரும்
பாடலம் நண்பகலில் அலர்வது விம்மிதமாம்.

     காளமேகம் ஒப்பாள் - கருக்கொண்டமையால் கருமைமிக்க
மேகம். நிறத்தால் மட்டுமின்றிக் கைம்மாறு கருதாது பொழியும்
பயனாலும் மேகம் அம்மையாருக்கு ஒப்பாயிற்று. மெய்யும் பயனும்
பற்றிவந்த உவமம்.

     கண்படாத காயாப்புளி - கண்படுதல் - உறங்குதல்.
கண்படாத புளி என்றது இம்மரத்தின் இலைகள் இரவிற்
குவிகின்றதில்லை என்றதாம். இதற்கு மனிதர் கண்ணுக்குத்தோன்றாத
என ஒருவர் உரை கூறினார். காயாப் புளி - காய்த்தலில்லையாகவே கனிதலும், வித்து உண்டாகி மீளவும் முளைத்தலும், இல்லையாயின.
கோவைச்சில்லா திருப்பேரூரில், அத்தலத்தைச் சார்ந்தார்க்கு மீளப்
பிறத்தல் இல்லை என்பதற்குச் சான்றாகப் பிறவாப்புளி
என்றதொருமரம் உள்ளது. அதன் விதைகள் நிலத்தில் இட்டால்
முளைப்பதில்லை இது பேரூர்ப் புராணத்துக் கண்டது. 79