1188.
|
அவ்வகைய
திருநகர மதன்கணொரு மருங்குறைவா;
ரிவ்வுலகிற் பிறப்பினா லேகாலிக் குலத்துள்ளார்;
செவ்வியவன்
புடைமனத்தார்; சீலத்தி னெறிநின்றார்;
மைவிரவு கண்டரடி வழித்தொண்ட ருளரானார். 111
|
(இ-ள்.)வெளிப்படை.
அத்தன்மைத்தாகிய காஞ்சித்
திருநகரத்தில் ஒரு பக்கத்தில் வாழ்வார்; இந்த உலகத்திற்
குடிப்பிறப்பினால் ஏகாலியர் குலத்தில் உள்ளவர்; செம்மையுடைய
அன்பு நிரம்பிய மனத்தினை உடையவர்; சைவசீலமாகிய
தவவொழுக்கத்தின் நெறியில் நின்றவர்; விடம்பொருந்திய
கண்டராகிய சிவபெருமானது திருவடிகளில் வழிவழியாகத்
தொண்டுபுரிபவர் ஒருவர் உள்ளவராயினார்.
(வி-ரை.)
அவ்வகைய- 1125 முதல் 1187 வரை உள்ள
திருப்பாட்டுக்களில் விரித்த அந்த எல்லா வகைகளையுமுடைய
என்ற தொடர்பினை அறிவிப்பார் அ என்ற சேய்மைச் சுட்டினாற்
கூறினார்.
ஒருமருங்கு
- தமது மரபினுக்கு விதித்த ஓரிடத்தில்.
"தந்தகைமைக் கேற்ற தனியிடங்கள் மேவி" (1180) என்றது காண்க.
ஒரு மருங்கு என்ற இலேசினால், இறைவர் அறிவித்தாலன்றி
உலகம்
இவரது பெருமையை அறியமுடியாதபடி ஒதுங்கிய ஓரிடத்தில் என்ற
குறிப்பும் காண்க.
இவ்வுலகிற்
பிறப்பினால் ஏகாலிக் குலத்து உள்ளவர் -
இவ்வுலக நிலைப்பிறப்புக் காரணமாக - உடல்பற்றிய தொடர்பாகிய
பிறப்பின் அளவிலே - ஏகாலியர் குலத்தவர் - வண்ணார் -
என்பதாம். உயிர்பற்றிய நிலைவேறு, உடல்பற்றிய நிலைவேறு,
என்றும், இவ்விரண்டினையும் பிரித்துணர்தல் வேண்டும் என்றும்
அறிவிக்கப், பிறப்பினால் என்றார். "வேட்கோவர்
குலத்து வந்தார்"
(360) "குடிமுதல் வணிகர்" (405), "வணிகர்தங் குலத்தினில் வந்தார்"
(503), "அந்தணர் கலயரென்பார்" (835) "கடைஞர் இருப்பின்
வரைப்பினில் வாழ்வார்" (1051) முதலியவை காண்க.
ஏகாலிக்
குலம் - வண்ணார் மரபு - "ஊரொலிக்கும்
பெருவண்ணார்" (1190) என்றது காண்க. இவர் சிவபெருமானுக்குத்
தும்பைமலர் எடுத்துக் கொடுத்து வந்தமையால் "தும்பையான்"
என்ற மரபுப் பெயர் உலக வழக்கில் வழங்குவதாயிற்று என
அம்மரபில் வந்த அன்பர் திரு. முத்து (தஞ்சை) என்பவர்
அறிவித்தனர்.
செவ்விய
அன்பு - சிவபிரானிடத்து இடைவிடாது செய்கின்ற
அன்பு. செவ்விய செம்மையாகிய - முத்திக்குக்
காரணமாகிய. சீலம்
- அந்த அன்பின் வழியதாகிய சைவ வொழுக்கம். "சீலத்தார்
கொள்கை" (கோயில் - குறிஞ்சி) என்றது ஆளுடையபிள்ளையார்
தேவாரம்.
அடி
வழித்தொண்டர்- திருவடியில் வழிவழியாளாய்த்
தொண்டு புரிபவர். அவரது மரபின் முன்னோர்களும் சிவத்தொண்டு
செய்துவந்தனர் என்பது. "வழிவழியாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடியார்" (திருப்பல்லாண்டு.)
உளரானார்
- 1051 ல் "உளரானார்" என்றதும்
ஆண்டுரைத்தவையும் பார்க்க. "சூதன் ஒலிமாலை " (திருப்பாசுரம்
என்று ஆளுடைய பிள்ளையாரால் விதந்து கூறப்படும்
பதினெண்புராணங்கள் எனப்படும் மாபுராணங்களின் சாரமாகிய
சிவபுண்ணியத்தின் விளக்கமாக இப்புராணம் அமைந்தது என்பது
பதினெட்டு என்ற தொகைக் குறிப்பினால் போதரும் என்க.
இம்மாபுராணத்துள் பாடற்றொகைக்குறிப்புக்காளற் போந்த
பொருள்களைப்பற்றி 661 - ல் உரைத்தவை பார்க்க. 111
|