1189.
|
மண்ணின்மிசை
வந்ததற்பின் மனமுதலா யினமூன்று
மண்ணலார் சேவடியின் சார்வாக வணைவிப்பார்
புண்ணியமெய்த்
தொண்டர்திருக் குறிப்பறிந்து
போற்றுநிலைத்
திண்மையினாற் "றிருக்குறிப்புத் தொண்ட" ரெனுஞ்
சிறப்பினார்.
112 |
(இ-ள்.)
வெளிப்படை. இவ்வுலகில் வந்தவதரித்தபின், மனம்
முதலிய மூன்று கரணங்களையும் சிபெருமானது திருவடிகளின்
சார்பாகவே அணைவிப்பாராகி, (அவர்), சிவபுண்ணியமுடைய
மெய்த்தொண்டர்களுடைய உள்ளத்தின் திருக்குறிப்பினை
அறிந்து
அவர்களுக்குத் தொண்டுசெய்யும் தன்மையில் நிலைத்த
உறைப்பினாலே திருக்குறிப்புத் தொண்டர் என்று
சொல்லப்படும்
சிறப்புப் பெயரை உடையவராயினார்.
(வி-ரை.)
மண்ணின்மிசை வந்ததன் பின் - பிறந்தருளிய
பின்னர். "பிறந்துணர்வு தொடங்கியபின் (1052) என்றதும்
ஆண்டுரைத்தனவும் பார்க்க.
மனம்
முதலாயீன மூன்று - மனம், வாக்கு, காயம் என்பன.
இவை மூன்று கரணங்கள் எனப்படும். இவற்றுள் உண்ணின்று
தூண்டும் கருவி மனமேயாதலின் அது முதன்மையுடைய தென்பார்
மனமுதலாயின என்றார். மூன்றும்
அண்ணலார் சேவடியின்
சார்வாக அணைவித்தலாவது "வாழ்த்த வாயும் நினைக்க
மடநெஞ்சுந், தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவன்" (அப்பர்
சுவாமிகள்) என்றபடி இதுவே பிறந்தபயன் என்றறிந்து, மனம்
-
சிவனையும் அவனடியாரையும் நினைக்கவும், வாய்
-அவன்
திருநாமமாகிய திருவைந்தெழுத்தை ஓதவும் அடினடியாரைப்
போற்றவும், மெய் - சிவனுக்கும் அடியாருக்கும்
தொண்டு செய்யவும்
என்ற இந்தச்சார்பில் நிறுத்துதல். "சிந்தனைநின்
றனக்காக்கி நாயி
னேன்றன் கண்ணிணைநின் றிருப்பாதப் போதுக் காக்கி, வந்தனையு
மம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கி" என்ற
திருவாசகமும், அதனை உள் வைத்து " ஆங்கவர் மனத்தின்
செய்கை யரனடிப் போதுக் காக்கி, யோங்கிய வாக்கின்
செய்கையுயர்ந்தவஞ் செழுத்துக் காக்கித், தாங்குகைத் தொழிலின்
செய்கை தம்பிரானடியார்க் காக" (நேசநாயனார் புரா - 3) என்ற
புராணமும் இங்குக் கருதத்தக்கன. இவ்விரண்டனுள்ளும் மனத்தை
முதலில் வைத்தோதியதும் காண்க. பிறந்தது முதல் இவ்வாறு
நிகழப்பெறுதல் முன்னைத் தவத்தால் ஆகியது. 1051 பார்க்க.
அணைவிப்பார் - எதிர்கால வினையாலனையும்
பெயர்.
அணைவிப்பார் - அறிந்து போற்றும்நிலை -
என்று கூட்டி
உரைத்துக்கொள்க.
சேவடியின்
சார்வாக அணைவிப்பார் - மெய்த்
தொண்டர் திருக்குறிப்பு அறிந்து போற்றுநிலை என்றது
மெய்த்தொண்டரது திருக்குறிப்பினை அறிந்து போற்றினால் அதுவே
அண்ணலார் சேவடியின் சார்பு ஆகும் என்ற கருத்துடையது.
இதுபற்றியே இந்நாயனார் அடியார்களுடைய துணிகளை மாசுகழுவித்
தொண்டு செய்துவந்தனர் என்பதனை மேல்வரும் இரண்டு
பாட்டுக்களாலும் அறிவித்தல் காண்க.
புண்ணிய
மெய்த்தொண்டர் - சிவபுண்ணியத்திற் சிறந்த
மெய்யடியார்கள். திருக்குறிப்பு அறிந்து - திருவுள்ளக் கருத்தினை
அவர்கள் சொல்லாமலே குறிப்பினாலறிந்து. இந்நாயனார் அவ்வாறு
செய்த வரலாற்றினை 1195-ல் காண்க. "யானேமுன் செய்குற் றேவ,
லொன்றிது தன்னை யென்னை யுடையவ ரருளிச் செய்ய, நின்றது
பிழையாம்" (414) என்றவிடத்து இவ்வுண்மையடிமைத்திறம்
விளக்கப்பட்டது பார்க்க.
போற்றுதல்
- துதித்தலும், ஏவின செய்தலும், ஏவாமலே
குறிப்பறிந்து செய்தலும் முதலாயின எல்லாம் இயற்றுதல் இங்குப்
போற்றுதல் எனப்பட்டது. போற்றுதல் - கொண்டு
நெறிகாத்தல்.
போற்றுநிலைத்
திண்மை - திருத்தொண்டின் நெறியினைச்
சோர்வுபடாது காத்தளிக்கும் வலிமை. "திருத்தொண்டி னுறைப்பாலே
வென்றவர்" (அப்பூதி - 13), "ஆளுடையா
ரடியவர்தந்
திண்மை யொழுக்க நடை" (469) முதலியவை பார்க்க.
திண்மையினால்
"திருக்குறிப்புத் தொண்டர்" எனும்சிறப்பு
-சிறப்புப் பெயர் போந்த காரணம் உரைக்கப்பட்டது.இவரது
இயற்பெயர் விளங்கவில்லை. சிறுத்தொண்ட நாயனாருக்கு
அச்சிறப்புப் பெயர் போந்த காரணம் (சிறுத் - புரா - 15)
அறிவிக்கப்பட்டதும், அஃதேபோல்வன பிறவும் இங்கு நினைவு கூர்க.
எனும்-
திருத்தொண்டத் தொகையில் தமது இயற்பெயராலின்றி
இப்பெயரால் இவர் துதிக்கப்பட்டதனால் என்னும் என்று கூறிப்,
பெயர்க்காரணமும் கூறினார். 112
|