1205. சீர்நிலவு திருக்குறிப்புத் தொண்டர்திருத்
                          தொழில்போற்றிப்
பார்குலவத் தந்தைதா ளறவெறிந்தார்
                            பரிசுரைக்கேன்;
பேரருளின் மெய்த்தொண்டர் "பித்த" னெனப்
                               பிதற்றுதலா
லாருலகி லிதனுண்மை யறிந்துரைக்க
                      விசைந்தெழுவார்?
128

     (இ-ள்.) வெளிப்படை. சிறப்பு நிலவப்பெற்ற திருக்குறிப்புத்
தொண்ட நாயனாருடைய திருத்தொழிலைத் துதித்து, உலகம்
விளங்கும்படி தந்தையின் தாள்கள்

     அறும்படி வெட்டிய சண்டீச நாயனாரது தன்மையினைச்
சொல்லத் தொடங்குகின்றேன்; பேரருளுடைய மெய்த்தொண்டர்
இறைவரைப் "பித்தன்" என்று பிதற்றுதலாலே, இதன் உண்மைத்
தன்மையினை முற்றும் அறிந்துசொல்ல இசைந்து எழுவார்
யாவர்? (ஒருவருமிலர்).

     (வி-ரை.) சீர்நிலவு - திருத்தொண்டத்தொகையினாற்
போற்றப்பட்டபடி திருக்குறிப்புத்தொண்டர் என்ற சிறப்பு
நிலவப்பெற்ற, அப்பெயரினையே இங்கு எடுத்தாண்டமை
காண்க. அப்பெயரினைக் கூறியதனாலே சரிதச் சுருக்கமும்
உரைத்து முடித்துக்காட்டிய பண்பும்கருதுக. 1189-ல்
"திருக்குறிப்புத் தொண்டரெனுஞ் சிறப்பினார்" என்றதும்
இங்கு நினைவு கூர்க.

     திருத் தொழில் - 1191லும், 1199 முதல் 1202 வரை
திருப்பாட்டுக்களிலும் உரைக்கப்பட்டவை.

     சீர் நிலவு.... தொழில் போற்றி - ஆசிரியர் தமது
மரபின்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை முடித்துக்
காட்டியதாம்.

     பார்குலவ...உரைக்கேன் - இது மேல்வருஞ்
சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்ததாம்.

     பார்குலவத் தந்தை தாள் அற எறிந்தார் - பார்குலவ
- உலகம் விளங்க - அறிந்து துதித்துப் பயன்பெற. சிவபூசை
செய்தபின் சண்டேசுவரபூசை செய்து அதனாற் சிவபூசைப்பயனை
உலகத்தார்பெறுதலின் குலவ என்றார் "தாதைதாள் மழுவினால்
எறிந்த" என்பது முதனூல்.

     குலவுதல் - விளங்குதல். "குலவு கோலத்த கொடிநெடு
மாடங்கள்" (தேவாரம்)."திசைவிளங்க" (திஞான - புரா - 22)
என்று ஆளுடையபிள்ளையார் திருவவதாரப் பயன் கூறியது
காண்க. இதனால் மேல்வருஞ் சரித சாரத்தைத் தோற்றுவாய்
முகத்தால் அறிவித்த நயமும் காண்க. அற எறிந்த -
தாள்களைத் தந்தையினது குற்றம் அறும்படி - அறும்பொருட்டு -
எறிந்த என்றலுமாம்"மழுவா லேறுண்டு குற்றநீங்கி" (1263)

     பேரருளின் மெயத்தொண்டர் - ஆளுடைய நம்பிகள்.
அருளினாலே திருக்கயிலையினின்றும் இவ்வுலகில் அவதரித்து, அருளினால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, அருளினால்
திருத்தொண்டத்தொகை அருளி, அருளினால் மீளத்
திருக்கயிலையினை அடைந்த பெருமானாதலின் இவ்வாறு
கூறினார் "வந்து வானவரீச ரருளென" (34) "அருள் செய்தபின
்" (39), "அருள்செய்த சாலுமொழியால்" (174), "அருளின் நோக்கி"
(219) என்றிவ்வாறு வருமவை யெல்லாம் காண்க. இக்கருத்தைப்
"பெருமணச்சீர்த் திருத்தொண்டத் தொகைவிரித்த பேரருளின்
பெருமாள்"
(கடவுள் வாழ்த்து - 12) என்றுகாஞ்சிப்புராணமுடையார்
விரித்தனர். மெய்த்தொண்டர் - "உம்பர் நாயகர் தங்கழ லல்லது
நம்பு மாறறி யாத" (299) திருத்தொண்டின் உண்மைநிலையுடையார்.

     "பித்தன்" எனப் பிதற்றுதல் - தம்மை ஆட்கொள்ளவந்த
முதல்வனை அறியாது "பித்தன்"என இகழ்தல். 186 பார்க்க.

     பின்னர்ப் "பித்தா" என்று பாடியதன் பொருள் வேறு; இது
இறைவராணையின்படி பாடியது. முன்னர்ப் "பித்தன் " என்று
ஏசியதும், பின்னரும் அவ்வாறே "பித்தன்" என்று பாடியதும்
வெவ்வேறு பொருளன; ஆதலின் பிதற்றுதலால் என்றார்.
பிதற்றல்
- பொருள் மயங்க மொழிவழங்குதல். பலபடியும் பல
முறையும் சொல்லுதல். "வன்றொண்டன் சொல் பெருங்குலத்
தவரொடுபிதற்றுதல் பெருமையே" (நம்பி - காந்தா - வலம்புரம்
- 10) "பிணங்கித்
தம்முட் பித்தரைப் போலப் பிதற்றுவார்"
(குறிஞ்சி - திருவாரூர் 4 அப்பர்) என்ற தேவாரங்கள் காண்க.
பித்தனென
- என - போல என்று உவம உருபாகக் கொண்டு
பித்தனைப்போல மெய்த்தொண்டர் பிதற்றுதலால்
என்றுரைத்தலுமாம். இப்பொருளில் மெய்த்தொண்டர்
பித்தன்போலப் பிதற்றுவாராயின்யாவர் உண்மை யறிந்து
உரைக்கவல்லார் என்று கொள்க. "பித்தனொப் பானடித்
தொண்டனா ரூரன் பிதற்றியவை" (கொல்லிக் கௌவாணம்
- முதுகுன்றம் - 11) என்ற நம்பிகள் தேவாரம் காண்க.

     பித்தனெனப் பிதற்றுதலால் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து உலகில் யாவர் எழுவார்? என்றது
ஆட்கொண்டு இன்பந்தர வந்த தம்மைப் "பித்தன்"
என்றிகழ்ந்ததனையும் புகழ்ந்ததுவாகக் கொண்டதுமன்றி,
அவ்வண்ணமே பாடுக என்று மகிழ்ந்தும் கொண்டதுபோலத்,
தந்தையைத் தாள்அற எறிந்த பாதகத்தையே புண்ணியமாகக்
கொண்டு பரிசும் கொடுத்தனர்; ஆதலின் இதன் உள்ளுறையை
எவரும் அறிந்து சொல்ல வல்லவரல்லர் என்றதாம். யாவர்
என்ற வினா ஒருவரும் இலர் என்று இன்மை குறித்தது.
"ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு, பித்தர் காணும்
பெருமானடிகளே" (கடவூர் மயானம் - 5) என்ற
குறுந்தொகையிற் பித்தரியல்பு வகுத்தமைகாண்க.

     யாவர் அறிந்து இசைக்க - மாபாதகம் தீர்த்த திருவிளையாடலின் வரலாறும் "பாதகமே சோறு பற்றினவா
தோணோக்கம்" என்ற திருவாசகமும், "பாதகத்துக்குப்
பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே" என்ற
திருப்பல்லாண்டும் இங்குக் கருதத் தக்கன. பரிசு உரைக்கேன்
- என்ற குறிப்பும் அது.

     உண்மை - உள்ளது - உள்ளுறை. அறிந்து - உரைக்க
- இசைந்து - எழுவார்
- அறிதலும், அறிந்தாலும் அதனை
உரைத்தலும், உரைப்பேன் என்று இசைந்து எழுதலும் ஒன்றன
்மேலொன்றா அரிய செயல்களாமென்பது குறிப்பு.

     இவ்வாறு சொல்ல அரிய செயலினுள் புகுகின்றேன் என்ற
அச்சத்தினையும் பணிவினையும் புலப்படுத்தியபடி. தாதை தாள்
எறிந்த கதை என்றிகழ்ச்சியாய் எண்ணிக் கழியாமல், அதனை
இறைவர் ஏற்றுப் பரிசுவைத்த அறியலாகப் பெருமையினையே
எண்ணிப் பத்திசெய்து கேட்குமாறு எச்சரித்தபடியுமாம்.
"பித்த"னென் றிகழ்ந்தது நன்றி கொன்ற சிவநிந்தையாகிய
பெரும்பாதகமாயினும், அங்ஙனமாகாது சிவனைப் போற்றிய
பெரும் புண்ணியமேயாயினமையும் கருதுக என்று வற்புறுத்திய
படியுமாம்.128