1236.
|
தம்மை
யணைந்த வான்முலைப்பால் தாமே பொழியக்
கண்டுவந்து
செம்மை நெறியே யுறுமனத்திற் றிருமஞ் சனமாங்
குறிப்புணர்ந்தே
எம்மை யுடைய வள்ளலா ரெய்த நினைந்து
தெளிந்ததனில்
மெய்ம்மைச் சிவனார்பூசனையை விரும்பும் வேட்கை
விளைந்தெழலும், 31 |
1236. (இ-ள்.)
வெளிப்படை. தம்மை அணைந்த பசுக்கள்
முலைப்பாலினை கறவாமல் தாமே பொழியக் கண்டு மகிழ்ந்து,
செம்மை நெறியிலே உற்ற தமது திருமனத்தில் அந்தப்பால்
சிவபெருமானுக்குத் திருமஞ்சனமாகும் குறிப்பினை உணர்ந்தே,
எம்மை ஆளுடைய வள்ளலாராகிய விசாரசருமனார்,
பொருந்தும்படி நினைந்து, தெளிந்து, அத் தெளிவினுள்ளே
சிவனாரது உண்மையாகிய பூசையை விரும்பும் வேட்கை
விளைந்து எழுந்ததாகவே, 31
1236. (வி-ரை.)
தம்மை அணைந்த - வள்ளலார், தம்மை
அணைந்த என்று கூட்டித் தொடங்கிக் கொள்க. அணைந்த -
கண்டு அருகு சார்ந்து என்று முன்பாட்டிற் கூறியபடி அணைந்த.
தாமே
- பிறர் எவரும் கறவாமல் தாமே. "கறவா மேபால்
பொழிந்தனவால்" (1235) என்றது காண்க.
செம்மை
நெறி - சிவநெறி - முத்திநெறி - செம்மை
நெறியே உறும் மனம் - சிவத்தன்மை
பெறுதற்காகிய வழியிலே
சென்ற மனம். சிவபூசையே முத்திக்குச் சாதனமாமென்று தெளிந்த
மனது. இதுவே செந்நெறி எனவும்படும்.
மனதில்
திருமஞ்சனமாம் குறிப்பு உணர்ந்து - செம்மை
நெறியே உறும் மனம் ஆதலின் அதனுள் அருளால் முன்சென்ம
வாசனைப்படி ஒரு குறிப்பு எழுந்ததாக, அதனை உணர்ந்து.
செம்மைநெறி உறுதல் குறிப்பு எழுதற்குக் காரணமாய்
நின்றது
என்பது குறிக்க அதனை உடம்பொடு புணர்த்தி ஓதினார்.
ஏனையோர்க்கு அவ்வாறு குறிப்புத் தோன்றாது என்பதாம்.
வள்ளலார்
- தம்மை யடைந்தோர் யாவர்க்கும் சிவபூசைப்
பயனாகிய, தாம் பெற்ற, பேரின்பத்தை வரையாது கொடுத்தலின்
வள்ளலார் என்றார். எம்மையுடைய என்ற கருத்தும்
அது;
எம்மைத் தமது அடிமையாகக் கொண்டு ஆள்கின்ற
ஆளாகவுடைய,
எய்த
நினைந்து - பொருள்முடிவுபெறப் பொருந்தநினைந்து.
நினைதல் - சிந்தித்தல் - ஆராய்தல்.
தெளிதல் - துணிதல்.
நினைதலாவது
- உடையவர்களின் சம்மதமின்றி இது
செய்யலாவதோ? என்றும், வேள்விக்காகும் பொருளைப்பிறிதொன்றிற்
பயன்படுத்தலாகுமோ? என்றும், இவ்வாறு பலவும் எண்ணுதல்.
தெளிதலாவது உடையவர் சம்மதமின்றியே பசுக்கள் தாமே
பால்பொழி தலானும், இவ்வாறு செய்யாவிடின் அந்தப் பால்
வேள்விக்கும் உதவாது வீணே நிலத்திற் கழியுமாகலானும்,
இறைவனைத் திருமஞ்சனமாட்டுதலும் சிவவேள்வியே
யாமாகலானும், பிறவாற்றானும் இதுவே தக்கதென்று துணிதல்.
அதனில் - அக்குறிப்பினைத் தெளிந்த அதனுள்;
தளிவினுள்ளே. அதனில் - எழலும் என்று கூட்டுக.
தெளிந்ததுஎன
வினையாலணையும் பெயராகக்கொண்டு உரைத்தலுமாம்.
தெளிந்ததனால் என ஏதுப்பொருள் கொள்வதுமொன்று.
செம்மை
நெறியே.............குறிப்பு - முன் தொடர்ச்சியினால்
செம்மை நெறி உறும் மனம் பெறும் விதியில்லாத ஏனையோர்,
பாலினைக் கண்டபோது, அது தமக்கும் மகார்க்கும் பிறர்க்கும் நல்ல
உணவுப்பண்ட மாகும் என்ற குறிப்பினையே உணர்குவர். இன்னும்,
முன் தொடர்ச்சியினால் தீமைநெறியே உறும் மனங்
கொண்டவிதியுடையோர் திருமஞ்சனத்துக்கு அமைத்த பாலினையும்
அது மக்கட்குதவாமல் வீணே கழிகின்றது என்று வாதாடிக் கழிந்து
நிரயத்துக்காளாகுவர். இவ்வாறுளாரையும்காண்பது இந்நாட்
கொடுமைகளுள் ஒன்று. காதற்ற வூசியைப் பட்டினாற் பொதிந்து
பெட்டியில் வைத்திருக்கக் கண்டபோது, பிறரெல்லாம் காதறுந்த
ஊசியேயாயினும், வேறுஎப்பொருளேயாயினும், இவ்வாறு
காப்பாற்றப்படுதல்வேண்டும்என்ற குறிப்புணர்வாராக,
எமதுபெருமகனாராகிய பட்டினத்தடிகள் "காதற்ற வூசியும் வாராது
கூடக் கடை வழிக்கே" என்ற உண்மையினை அதனுட் கண்டு
ஒன்பதுகோடிபொருளையும் ஒரே நொடியில் துறந்து
தவராசசிங்கமாயினர் என்ற வரலாறும் இங்கு நினைவுகூர்தற்பாலது.
சிவனார்
மெய்ம்மைப் nபூசனையை என்க.மெய்ம்மையாவது
எவ்வாற்றானும் பொக்கம் ஒன்றுமில்லா திருத்தல். "நெக்கு நெக்கு
நினைப்பவர்" என்பது முதலிய திருவாக்குக்கள் இங்குக் கருதற்பாலன. சிவனையே குறிக்கோளாகக்
கொண்டு குறிவைத்த பூசை. "குறித்த
பூசை"(1241),"ஒன்றுமுள்ளத் துண்மையினால்" (1252) என்பன காண்க.
சிவனார்
- சிவபெருமானே முழுமுதற் கடவுளாவார் என்பது
குறிப்பு. பூசனை - திருமஞ்சனமாட்டுதல் முதலிய
பூசையின் எல்லா
உறுப்புக்களின் தொகுதி குறித்தது.
விரும்பும்
வேட்கை விளைந்து எழலும் - மனத்தின்கண்
பூசனையையே விரும்புகின்ற ஆசை. முன்னைப் பிறவியின்
விளைத்த வாசனையாகிய விதையினின்று முளைத்தெழுந்து
மேன்மேல் வளர்ந்து எழுந்ததனால் விளைந்து எழ
என்றார்.
"முகைத்த மலரின் வாசம்போல்" (1218), "பண்டைப் பரிவால்"
(1241) முதலியவையும், "விளைத்த அன்பு" (772) என்றதும் பார்க்க.
விரும்பும்
வேட்கை - விருப்பமானது முற்றிய நிலையில்
வேட்கை எனப்படும்.
விரைந்தெழலும்
- என்பதும் பாடம். 31
|