1254.
|
கண்ட
போதே விரைந்திழிந்து கடிது சென்று
கைத்தண்டு
கொண்டு மகனார் திருமுதுகிற் புடைத்துக் கொடிதா
மொழிகூறத்
தொண்டு புரியுஞ் சிறியபெருந் தோன்ற லார்தம்
பெருமான்மேன்
மண்டு காத லர்ச்சினையின் வைத்தார் மற்றொன்
றறிந்திலரால். 49 |
(இ-ள்.)
வெளிப்படை. கண்டபோதே விரைவில் இறங்கி
வேகமாகச் சென்று கைத்தண்டினால் மகனாரது திருமுதுகில்
புடைத்துக் கொடிதாகிய மொழிகளைக் கூறவும், திருத்தொண்டு
புரியும் சிறிய பெரிய தோன்றலார்,தமது பெருமான்மேல்
அருச்சனையில் முறுகிய காதலினை ஊன்றி
வைத்திருந்தாராதலின் வேறொன்றும் அறிந்தாரல்லர்.
(வி-ரை.)
கைத்தண்டு கொண்டு திருமுதுகிற் புடைத்து
- முதுமறையோனாதலின் கையிற்றண்டு வைத்திருந்தான்; அல்லது
ஒருதண்டு அன்று எடுத்திருக்கலாம்.
முதுகிற்
புடைத்து - விசாரசருமனார் தன்னை அறியாமல்
மறைந்து ஒளித்திருந்தவன் பின்புறமிருந்து சென்றானாதலின் முதுகிற்
புடைத்தான் போலும்.
தொண்டு
புரிதல் - பூசை புரிதல். இங்குத் திருமஞ்சன
மாட்டும் திருப்பணி குறித்தது.
சிறிய
பெருந் தோன்றலார் - பருவத்தாலும் உருவத்தாலும்
சிறியரேனும் பண்பினாற் பெரியவர் என்க. முரண் தொடை.
தோன்றல் - பெருந்தகை. பெருமையிற் சிறந்தோர்.
"சிறிய
பெருந்தகையார்" (1220) பார்க்க.
தம்பெருமான்
மேல் அர்ச்சனையின் மண்டுகாதல்
வைத்தார் என்க. "ஒன்றும் உள்ளம்" (1252), "ஒருமை நினைவு" (1242)
என்று உரைத்த நிலை. இந்நிலையை "நெறிவழியே சென்று நேர்மையு
ளொன்றித், தறியிருந் தாற்போலத் தம்மை நிறுத்திச், சொறியினுந்
தாக்கினுந் துண்ணென் றுணராக், குறியறி வாளர்க்குக்
கூடலு மாமே" (தந் . 5, யோகம் 1) என்று திருமந்திரம் உணர்த்திற்று.
மற்றொன்று
- எச்சதத்தன் செய்த அடாதசெயலை அவன்
பக்கத்தில் அவனைச் சார்த்திக்கூறிய ஆசிரியர், அச்செயலின் நிலை
விசாரசருமனார் பக்கம் சாரா வகை அதனை மீண்டும் சொல்லாராகி,
மற்றொன்று என்று விலக்கிக் கூறிய பண்பு
காண்க. மேல்வரும்
பாட்டிலும் "வெகுண்டோ னடிக்க, வேறுணரார்" என்றது காண்க.
"முன்னினைந்த வப்பரிசே" (481), "தன்கருத்தே"(647) என்றவை
காண்க. மற்றொன்றும் - உம்மை தொக்கது.
49
|