1262.
எல்லா வுலகு மார்ப்பெடுப்ப வெங்குமலர்மா
                            ரிகள்பொழியப்
பல்லா யிரவர் கணநாதர் பாடி யாடிக் களிபயிலச்
சொல்லார் மறைக டுதிசெய்யச் சூழ்பல் லியங்க
                              ளெழச்சைவ
நல்லா றோங்க நாயகமா நங்கள் பெருமான்
                        றொழுதணைந்தார். 57

      (இ-ள்.) வெளிப்படை. எல்லா உலகங்களில் உள்ளோரும்
மகிழ்ச்சியினால் அரகரவென்று ஆரவாரிக்கவும், எவ்விடத்தும்
பூமழை பொழியவும், பற்பல ஆயிரம் சிவநணநாதர்கள் பாடியும்
ஆடியும் களிப்படையவும், வேதங்கள் மொழிகளால் நிறைந்த
துதிகளைச்செய்யவும், நாற்புறமும் சூழ்ந்த பலவகை வாத்தியங்கள்
முழங்கவும், சைவ நன்னெறியானது ஓங்கி வளரும்படியாக, நமது
பெருமானாகிய சிவபிரானைத் தொழுது, தலைவராகத் தமது
சண்டீசபதவியில் அணைந்தனர்.

     (வி-ரை.) ஆர்ப்பெடுப்ப - பொழியக் - களிபயிலத் துதிசெய்ய
- எழ - என்றவை முன் ஐந்து பாட்டுக்களிற் போந்த திருவருள்
வெளிப்பாடுபற்றி நிகழ்ந்தவை.

     சைவ நல்லாறு ஓங்க என்பது ஓங்கும்பொருட்டு எனநாயனார்
நாயகம் பெற்று அணைந்ததன் பயன் குறித்தது. சிவபூசையின்
பெருமையை உலகம் அறிந்து பயன்பெறுதல் குறிப்பு. "சைவ வாய்மை
வளர" 1217 என்றதை இங்கு நினைவுகூர்க.

     நாயகமா - தலைவராக. முன்பாட்டிற் கூறியபடி தொண்டர்தமக்
கதிபனாக்கி" னாராதலின் அவ்வாறே நாயகமாக அணைந்தனர். ஆக
- என்பது ஆ - என ஈறுகுறைந்து வந்தது.

     நங்கள் பெருமான் - தொண்டர்தமக் கதிபராகஆயினமையின்
நமக்கெல்லாம் தலைவர் - பெருமானாவர் என்பது குறித்து நின்றது.

     தொழுது - தமக்கு மாலைசூட்டிப் பதமளித்தசிவபெருமானைக்
கும்பிட்டு.

     அணைந்தார் - தமக்குத் தந்த சண்டீசராகிய பதத்தில்
சேர்ந்தனர் என்க.

     கணநாதர் பாடி ஆடிக் களிபயில - இவை இவரைத்
தலைவராகக் கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சியின் விளைவு.

     மறைகள் சொல்லார் துதிசெய்ய என்க.மறைகள் தாமே
துதி முழக்கின என்பதாம். இயங்கள் எழ - இவை தேவதுந்துபி
முழக்குக்கள். மலர்மாரி - தேவர்கள் பொழியும் கற்பகப்பூமழை.
57