570.
என்றவ ருரைத்த மாற்ற மெறிபத்த ரெதிரே வாரா
நின்றவர் கேளா மூளு நெருப்புயிர்த் தழன்று
                                பொங்கி
"மன்றவ ரடியார்க் கென்றும் வழிப்பகை களிறே
                                யன்றே,
கொன்றது வீழ்ப்ப" னென்று கொலைமழு வெடுத்து
                                வந்தார்.
 20

     570. (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு அவர்மொழிந்த
சொற்களை எதிரே வாரா நின்ற எறிபத்த நாயனார் கேட்டு,
மூளும்நெருப்புப் போன்று பெருமூச்சு விட்டுக், கோபத்தாற்
பொங்கி, "அம்பலவருடைய அடியார்களுக்கு என்றும் யானை
வழிப்பகையன்றோ? அவ்வியானையைக் கொன்று வீழ்ப்பேன்"
என்று தமது கொலை வல்லமழுவாயுதத்தை ஏந்திக் கொண்டு
வந்தார். 20

     இந்த ஆறுபாட்டுக்களும் ஒரு முடிபுகொண்டன.

     570. (வி-ரை) மாற்றம் - சொற்கள். மேலே விரித்துக்
கூறப்பட்டவை. ஒருவர் கருத்துக்களைக் கேட்பவர் மனத்திற்குச்
செல்லுமாறு இடம் மாற்றுதற்குக் கருவியாயிருத்தலின் சொற்கள்
மாற்றம் எனப்படுவன போலும். இங்குச் சிவகாமியார் மனதிலும்
எறிபத்தர் மனத்திலும் ஒரே தன்மைத்தாகிய சிவ நிறைவு
பொருந்தியிருந்தது. மேல் ஆரா அணைவாய் என்பதீறாகச்
சொல்லியவை அந்நிறைவுக்குள்ளே தாக்க, சிவம்
அவ்விடையூற்றினை மாற்றத் திருவுளங்கொள்ள, அது எறிபத்தர்
உள்ளத்திற்றாக்க, அவராக அணைந்தனர் என்ற குறிப்புப்பெற
மாற்றம் என்றார்.

     எதிரே வாரா நின்றவர் - அடியார்க்கு அடாதன
அடுத்தபோது சிங்கம்போலத் தோன்றி இடையூறு தீர்ப்பார் (557),
ஆதலின் இங்கு எதிரே வாரா நின்றவர் கேட்டு என்க. வாரா
வந்து, என்று பொருள் கொண்டு, எதிர்வந்து கொண்டிருந்தவர்,
மேற்செல்லாது இதனாற்றடைப்பட்டு நின்றார் என்ற குறிப்பும்பெற
இவ்வாறு கூறினார். முன்னர் 560 - ம் பாட்டில் வாரா நின்றார்
என்றபடி இங்கும் குறித்தது காண்க.

     மூளும் நெருப்பு உயிர்த்து - மூள்கின்ற கோபத் தீயால்,
தீப்போல வீசும் நெட்டுயிர்ப்பு வீசி. அழன்று - முன்னர் மூண்டு
புகைகின்ற அழல் பின்னர்ப் பொங்கி மேல் எழுந் தெரிவதுபோல,
முன்னர் நெருப்பு உயிர்த்தலும் அதன்பின் அழன்று பொங்குதலும்
உண்டாயின என்க.

     மன்றவர் - அம்பலவாணர் - சிவபெருமான். களிறே
வழிப்பகை
- சிவபெருமானுடன் பொருதான் கயாசுரன். அவ்வாறு
ஒரு யானை இறைவனுக்குப் பகையாகவே அதன் வழிவரும்
யானைகளும் அவ்விறைவன் வழிப்படும் அடியார்க்குப் பகையாம்
என்று குறிக்க வழிப்பகை என்றார். இறைவனுக்கு எவரும்
பகையில்லை என்றிருப்பவும் அவனுக்கு மாறாகப் பொருதல் என்றது,
அவன் விதித்த விதிகளினின்றும் மாறுபட்டு ஒழுகும்படி ஏவி உலக
நியமத்தை அழிக்க முயலுதல். களிறு வழிப்பகையே என ஏகாரம்
பிரித்துக் கூட்டுக. வழிப்பகை - வழியில் உள்ள பகை
என்றலுமாம். அடியார்க்குக் களிறு வழிப்பகையாதல் கோச்செங்கட்
சோழநாயனார் சரிதத்துங் காண்க. "மலையே வந்து வீழினும்
மனிதர்காள், நிலையினின்று கலங்கப்பெறுதிரேல், தலைவனாகிய
வீசன்றமர்களை, கொலைகை யானைதான் கொன்றிட கிற்குமே"
என்ற தனிக்குறுந்தொகையும் கருதுக. இனி இங்குக் களிறு -
ஐம்புலக்களிறு எனவும் இப்பொருள் "தொண்ட ரஞ்சுகளிறும்
மடக்கி" என்னும் தேவாரத்தாற் பெறப்படும் எனவும், ஐம்புலனே
வழிப்பகை என்பது "இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும் ஏழையேற்
கென்னுடன் பிறந்த ஐவரும் பகையே" என்ற திருவிசைப்பாவினாலும்
"பழியே விளைக்கும் பஞ்சேந்திரியக் குஞ்சரம்" என்ற
திருவாக்காலுங் விளக்கமுறுகின்றது எனவும் கூறுவர் திரு. வ. சு.
செங்கல்வராய பிள்ளை, M.A., அவர்கள், ஐம்புலன் யாவர்க்கும்
பகைமையாயினும் அடியார் அவற்றைப் பகை
யென்றுணர்ந்தொழுகுவர் என்க.

     கொலைமழு - தண்டனையின் பொருட்டுக் கொலைசெய்யும்
மழு. கொலைபாவச் செயலாயினும் அரனடிக் கன்பு பற்றிச்
செய்யப்படுவ தாதலின் அது புண்ணியமே யாகும் என்பது ஞான
நூற்றுணிபு. இதனைக்குறிக்க மழுவுக்கு அடைகொடுத்து விசேடித்தார்.
இக்கருத்தேபற்றிப் பின்னர் மங்கலமழு என்றதும் காண்க. கொலை
- மழுவுக்கு இயற்கை யடைமொழியே யன்றிப் பின்னர்
யானையையும் பாகர் ஐவரையும் கொல்லும் மழு என்ற
சரிதக் குறிப்புமாம்.

     கொன்றதை - கொடுமழு - என்பனவும் பாடங்கள். 20