635.
இந்நிலைய வெங்களத்தி னேற்றழிந்த மானத்தாற்
றன்னுடைய பல்படைஞர் மீண்டார் தமைக்கொண்டு
மின்னொளிவாள் வீசி விறல்வீரர் வெம்புலியே
றன்னவர்தம் முன்சென் றதிசூர னேரடர்ந்தான்.  28

     (இ-ள்.) வெளிப்படை இந்நிலையினையுடைய கொடிய
போர்க்களத்திற் போரேற்றுவந்து போரில் அழிந்து போயின
இளிவரவு பொறாமையினாலே தனது பலபடைஞர்களில்
மீண்டவர்களைச் சேர்த்து உடன்கொண்டு மின்போன்ற ஒளியுடைய
வாளினை வீசி வெவ்விய புலியை ஒத்த வலிமை யுடைய வீரராகிய
ஏனாதிநாதரின் முன்பு நேராகச் சென்று அதிசூரன் போர் புரிந்தான்.

     (வி-ரை.) இந்நிலைய வெங்களம் - இம்முனைய
வெம்போரில்
- (632) என்றது போல வந்தது. வெங்களம் -
கொடிய போர் நிகழும் களம், இடத்து நிகழும் போரின் வெம்மை
இடத்தின்மேல் ஏற்றப்பட்டது.

     வெம்மை - விருப்பம் எனக்கொண்டு, அதிசூரன் தானே
விரும்பி "இந்த வெளிமேற் கை வகுத்து" (620) என்று போருக்கு
அழைத்த களம் என்ற குறிப்புமாம்.

     ஏற்று - போர் ஏற்று. அழிந்த - அழிந்ததனால். அதில்தன்
படைகள் மடிந்தும் ஓடியும் போயினதாலே விளைந்த.

     மானத்தால் - மானம் - தன்னிலை திரியாதிருத்தல். இங்கு
இளிவரவு பொறாததன்மேல் வந்தது. இதனையே அவமானம் என்பர். மானங்கெடவரின் என்ற வழக்குங் காண்க. அழிந்த மானமிக (637)
என்று பின்னர்க் கூறுவதுங் குறிக்க.

     படைஞர் மீண்டார்- படைஞரில் மீண்டவர், இவனது
படைஞருள்ளே, முன்னர்ப் படைவீரர் விளைத்த போரில் (626)
கூறியபடி பட்டவர் பலர் அவர்போக எஞ்சியவருள் நாயனார்
செயிர்த் தெழுந்து வாளாற்றுணித்தபோது எதிர்ந்தவர் எல்லாரும்
கொலைப்பட்டொழிய, அவருடன் முட்டாதாராய்க் களத்தைவிட்டுப்
போர்முனையில் எதிர் நில்லாது மறைந்தும் ஓடியும்
போயினாருள்ளே, தன்னால் ஊக்கங்கொண்டு போருக்கு மீண்டும்
வந்தவர் சிலர்; அவர்களையும் உடன் கொண்டு என்க. மாண்டாரும்
ஓடினாரும் உள்ளாரும் ஒழிய மீண்டார் தமை என்பதாம்.

     மின்ஒளி வாள் வீசி - மின்னிரை தம்மிடையே கொடு (622)
என்றது காண்க.

     விறல் வீரர் வெம்புலி ஏறு அன்னவர் - விறல்
வீரர்
என்றது தம்மை எதிர்ந்தாரெல்லாரையும் தனி வீரராகிக்
கொன்றொழித்த வாளாண்மை செய்த விறலுடைய வீரர், வீரர்
அன்னவர்.
- புலியனையாராகிய வீரர். ஒருபொருட் பல்பெயர்.

     வெம்புலி ஏறு - வெங்கட் புலி (617) என முன்னரும்
இவ்வாறே கூறியது காண்க. ஆண்டுரைத்தவையும் நினைவு கூர்க.

     அதிசூரன் நேர் அடர்ந்தான் - நாயனார்க்கு விறல் வீரர்
என்றும், புலி அன்னார் என்றும் அடைமொழியும் உவமையும்
தந்து கூறிய ஆசிரியர் அதிசூரன் என்று வாளா கூறியது அவனது
சிறுமை நோக்கி.

     நேர் அடர்ந்தான் - நேர் பொருதற்குத் தகுதி
பெற்றானல்லனாயிருந்தும் சென்று நேர் நின்று போர் செய்தான்
என்க.

     தம்முன் - தம் - நாயனாரது சிறப்புக் குறித்து நின்றது.
வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வந்த சாரியை.

     புல் படைஞர் - வந்ததிசூரன் - என்பனவும் பாடங்கள். 28