658.
அரும்பெறன் மறவர் தாயத் தான்றதொல் குடியில்
                                 வந்தாள்;
இரும்புலி யெயிற்றுத் தாலி யிடையிடை மனவு
                                 கோத்துப்
பெரும்புற மலையப் பூண்டாள்; பீலியுங் குழையுந்
                                 தட்டச்
சுரும்புறு படலை முச்சிச் சூரரிப் பிணவு
                                போல்வாள்.
9

     (இ-ள்.) வெளிப்படை. (தத்தை) பெறுதற்கரிய சிறப்புடைய
மறவர் தாயத்திலே உயர்ந்த பழங்குடியிற் பிறந்தவள்; பெரிய
புலிப்பல்லாலாகிய தாலியை இடை யிடையே பலகறைகளைக்
கோத்துப் பிடரியின் கீழும் நீண்டு தொங்கும் படி அணிந்தவள்;
மயிற்பீலியும் இலைத்தளிர்களும் மோத வண்டுகள் மொய்க்கும்
பூமாலையை அணிந்த, உச்சிக் கொண்டையை உடைய அச்சந்
தரும் பெண்சிங்கத்தைப் போன்றவள்.

     (வி-ரை.) பெறல் அரும் மறவர் என்க. மறவர் - சாதி.
தாயம்
- அதனுட் பிரிவாகிய குலம். தொல்குடி - அதனுட்
பிரிவான குடி. "நடைமரபிற் குடிகாப்பண், விலக்கின்மனை
யொழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண், குலத்தின்கண்
வரும்பெருமைக் குறுக்கையர்தங் குடிவிளங்கும்" (திருநா -
புரா - 15) "அந்தணர்தங் குலமுதல்வ ராசின்மறை, கைப்படுத்த
சீலத்துக் கவுணியர்கோத்திரம்விளங்க" (திருஞான - புரா - 15)
"தருமுறைக் கோத்திறத்திற் றங்குலஞ் செப்பி" (திருஞான புரா -
1235) முதலியவை காண்க. அரும் பெறல் மறவர் என்றது
கண்ணப்ப நாயனாரைப் பெறும் பெரியதோர் பேறு பெற்ற
மரபாதலின் என்க. இதனை வந்தாள் - என்றதனோடு கூட்டி
இம்மரபிற் பெறலகு மணியாய்ப் பிறந்தவள் என்று தந்தையைக்
குறிப்பதாய்க் கூறுவாறுமுண்டு. பெற்றியால் - என்றதற் கேற்ப
உரை கொள்வது பொருத்தமுடைத்தாம். "கானவர்தங் குலமுலகு
போற்றவந்த கண்ணப்பர்" - திருஞான - புரா - 1017 என்றது
காண்க. இனி, அரும்பெறற்றொல்குடி எனக் கூட்டியுரைத்தலுமாம்.

     தாயத்து - பெருங்கிளைகளில் ஒன்றாகிய. ஆன்று -
குலவொழுக்கத்தின் மேம்பட்ட. தொல்குடி - "இருவர்ச் சுட்டிய
பல்வேறு தொல்குடி" (திருமுருகாற்றுப்படை) என்றபடி வழிவழியாக
வழாது, நீண்ட காலமாய்த் தொடர்ந்துவரும் பழங்குடி,

     இரும்புலி எயிற்றுத் தாலி - இரும்புலி - பெரும்புலி.
வேங்கை. புலிப்பல்லைத் தாலியாகக் கோத்தணிவது குன்றவர்
பழமரபு. "புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி - "(புறநானூறு)
முதலிய பழந்தமிழ்நூ லாட்சிகள் காண்க. இடை இடை மனவு
கோத்த
என்றமையால் புலிப்பற்கள் பலவற்றை இடையிடையே
பலகறைகளைக் கோத்து மாலையாக்கித் தாலியாக அணிவது
வழக்கென்பதாம். இவர்களது இளஞ்சிறார்க்கும் இவை
போல்வனவற்றைக் காப்பாகவும் அணியாகவும் அணிவது நாட்டு
வழக்கு. 669 பார்க்க. மனவு - பலகறை. மணமகன் வீரத்தாற்
கொன்ற புலியின் பற்களைக்கோத்துத் தாலியாக மணமகளுக்கு
அணிவதும் வழக்குப்போலும். "மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து
பெற்ற, மாலை வெண்பற்றாலி" (வேட்டுவ வரி - 27 - 28) என்பது
சிலப்பதிகாரம்.

     பெரும்புறம் - பிடரியினை அடுத்துள்ள முதுகின்
பாகங்களில். அலைய - தொங்க என்பர் மகாலிங்கையர். பிடரியைச்
சிறுபுறம் என்னும் வழக்கும்காண்க.

     பீலி - மயிற்பீலி. இந்நாள் ஐரோப்பியர் முதலிய நவீனர்
வழக்கிலும் உயர் குடிப்பெண்கள் தலையில் வான்கோழி (Ostrich)
முதலிய பறவையிறகுகளை அணிதல்காண்க. ஆயின் எந்தப்
பறவையிறகுகளும் மயிற்பீலியின் அழகுக் கொவ்வா என்பது துணிபு.
இது கொண்டே. முற்காலத்தில் ஐரோப்பியரும் பிறநாட்டவரும்,
"பீலிபெய் சாகாடு" என்று திருக்குறளாசிரியர் உவமான முகத்தாற்
கூறியது உண்மை முகத்தாலும் பொருந்தும் எனக் கொள்ளுமாறு
பெரிய அளவுக்கு, மயிற்பீலியை நமது நாட்டினின்றும் ஏற்றுமதி
செய்து வந்தார்கள் என்று சரிதங்களா லறிக்கின்றோம்.

     குழை - சந்தன முதலிய உயர்ந்தசாதி மரங்களின்
இளந்தளிர்கள்.

     முச்சி - உச்சியில் முடித்த கூந்தல். இது கூந்தல் முடிக்கும்
ஐம்பாலில் ஒன்று.

     சூர் - அச்சம். அரிப்பிணவு - பெண் சிங்கம். பிணா
என்றது பிணவு என நின்றது. நிலா நிலவு என வருவதுபோல. 9