699.
"கோட்டமிலென் குலமைந்தன் றிண்ண னெங்கள்
    குலத்தலைமை யான்கொடுப்பக் கொண்டு பூண்டு
பூட்டுறுவெஞ் சிலைவேடர் தம்மைக் காக்கும்
    பொருப்புரிமை புகுகின்றா; னவனுக் கென்றும்
வேட்டைவினை யெனக்குமே லாக வாய்த்து
    வேறுபுலங் கவர்வென்றி மேவு மாறு
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி யுண்ணக்
    காடுபலி யூட்" டென்றான் கவலை யில்லான்.
50

     (இ-ள்.) வெளிப்படை. "நிலை பிறழாத எனது குலமகனாகிய
திண்ணன் எங்கள் குலவுரிமையாகிய தலைமையை நான் கொடுக்க
அதனை ஏற்றுத் தலைமை பூண்டு. நாண் பூட்டிய வெவ்விய
வில்லேந்திய வேடர்களைக் காவல் செய்கின்ற மலையாட்சி
யுரிமையிலே தலைப்படுகின்றான்; அவனுக்கு என்றும் எனக்கு
மேலாக வேட்டைத் தொழில் வாய்க்கும் படியும், மாறுபட்ட
அயற்புலங்களைக் கவரும் வெற்றி யுண்டாகும்படியும் வனத்தில்
வாழும் தெய்வங்கள் விரும்பி யுண்ணுமாறு (பூசித்துக்) காடுபலி
ஊட்டுவாயாக" என்று கூறினான் கவலை சிறிது மில்லாதவனாகிய
நாகன்.

     (வி-ரை.) கோட்டம் இல் என் குலமைந்தன் -
மன்னவனாவான் நடுநிலை பிறழாது எல்லார்க்கும் ஒப்ப முறை
செய்தல் வேண்டும் என்பதனை உணர்ந்து அவ்வழியில் தானும்
தன்மரபுளோரும் ஒழுகிவருவதைப் பெருமிதவுணர்ச்சியோடும்
நாகன் கூறியவாறு. "கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது"
என்ற அப்பர் சுவாமிகள் தேவாரங் காண்க. 122-ம் திருப்பாட்டும்,
இதுபற்றித் திருநகரச் சிறப்பில் உரைத்தவையும் நினைவுகூர்க.

     எங்கள் குலத்தலைமை - எங்கள் குலத்துக்கு வழிவழியாக
உரிய வேடர்தலைவராந் தன்மை.

     யான் கொடுப்ப - நானே இளவரசனை அரசனாகச்செய்து
தலைமைகொடுக்க. எனக்குப்பின் அவன்பெறுதல் என்பதின்றி
நானே கொடுக்க. இவ்வாறு தம் வாழ் நாளிலே அரசுரிமையைத்
தாமே துறந்து இளவரசருக்குப் பட்டஞ்சூட்டுவோர் அரசரில் மிகச்
சிலரே யாவர். உத்தமகுணம் படைத்துத் தமதுகடமையில் தலைநின்ற
ஒருசிலரே இது செய்தல் கூடும் என்பது பலதேச சரிதங்களா
லறியப்படும் உண்மை. கழறிற்றறிவார் நாயனார் புராணமும் பிறவும்
காண்க.

     பூட்டுறு வெஞ்சிலை வேடர் - வேடர்களின்
தறுகண்மையும் ஆண்மையும் குறித்தபடி. எப்போதும்
வில்லாண்மைத்தொழிற்கு ஆயத்தராகிப் பூட்டிய நாணுடன் உள்ள
வில்லேந்திய வேடர்கள்.

     காக்கும் - அவ்வாறு பெருவிறல் மிக்க வேடர்களைக்
காப்பது பெரும்பாரமாகிய ஆண்மைத் தன்மையும் பொறுப்பும்
வாய்ந்தது என்பது குறிப்பு.

     புகுகின்றான் - கைக்கொண்டு அதில் தலைப்பட உள்ளான்.
எதிர்காலத்தைத் தெளிவுபற்றி நிகழ்காலத்தாற் கூறினார்.

     என்றும் ....... மேவுமாறு - வேட்டை தமது புலத்திற்
செய்யும் காவற்றொழிலும், வேறு புலங்கவர்தல் அயற்புலத்திற்
சென்று அவர்கள் தம்மேல் மீதூர்தல் செய்யா தடக்குதலுமாகும்
என்பார் வாய்த்து - மேவுமாறு என்றார்.

     எனக்கு மேலாக வாய்த்து - "தம்மிற் றம்மக்க
ளறிவுடைமை மாநிலத்து, மன்னுயிர்க் கெல்லா மினிது" என்றது
நீதிநூல். நாகன் அறிவுடையோன்; இம்மகனைப் பெற முன்பு
தவமுஞ் செய்துமுள்ளான்; ஆதலின் தன் மகன் தன்னினும்
மேம்பட்டு விளங்க வேண்டுமென்று ஆசை கொண்டான் என்க.

     வேறு புலம் கவர் வென்றி - "அயற்புலங் கவர்ந்து
கொண்ட" (655), "தெவ்வர் கணநிரைகள் பலகவர்ந்து கானங் காத்து"
(692); முதலாக மேல் உரைத்தவை காண்க.

     எனக்கு மேலாக வாய்த்து எனவும், வேறுபுலங்
கவர்வென்றி மேவுமாறு
எனவும் இங்கு நாகன் கூறிய சொற்களில்
அவனையறியாமலே மேல்நிகழ்ச்சி பற்றிய உட்குறிப்புத் தோன்றுவது
காண்க. நாகனது வேட்டைவினைகள்யாவும் ஊனவேட்டைகளேயா
யொழியத் திண்ணனாரது வேட்டை உண்மையில் அவனுக்கு
எய்தாததாகிய ஞான வேட்டையாக வாய்த்தது. ஐம்புல
வேடர்கூட்டங்களை வெற்றிகொண்டு அவற்றிற்கு வேறாகிய
பேரின்பப் புலங்களைக் கவர்ந்து விளங்குபவர் திண்ணனார். நாகன்
விரும்பியவண்ணம் தேவராட்டியின் பூசை மேலாகிய பலனையே
தந்தது என்க. நாகன் சொற்கேட்ட தேவராட்டியும் அவ்வாறே யாகுக
என்று வாழ்த்தும்போது "திண்ணனான வெற்றிவரிச் சிலையோனின்
னளவி லன்றி மேம்படுகின்றான்" என்று கூறியதன் உண்மைக்
குறிப்பும் வரும்பாட்டிற் காண்க.

     காட்டிலுறை தெய்வங்கள் - ஒவ்வோர் துறைக்கும் பற்பல
படித்தரமாக அரசாங்கத்தின் கீழமைந்து தொழிலியற்றும் பல
அதிகாரிகளிருத்தல் போலக்காட்டில் உறைந்து காவல்
செய்வனவாகிய பல சிறு தெய்வங்கள் உள்ளன. இதனால்
இறைவனது முழுமுதற்றன்மைக்கு இழுக்காவதொன்றில்லை. இவற்றின்
வழிபாடும் பல தெய்வ வழிபாடாகாது. "பிறவா யாக்கைப் பெரியோன்
முதலாப் பதிவாழ்சதுக்கத்துத் தெய்வமீறாக" வெவ்வேறு
கடவுளர்களைப்பற்றிப்பழந்தமிழ் நூல்களும் பேசும். "நற்றெய்வமு
மனந்த பேதம்" என்பர் தாயுமானார். மகனாரைப் பெறுதற்கு
முழுமுதற்கடவுளும் குறிஞ்சிக் கிழவனுமாகிய முருகப்பெருமானை
வழிபட்டான் நாகன். எனவே, இந்நாட்டில் முதற்கடவுள் முதல்
வனதெய்வமீறாக உள்ள தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள் என்று
தெரிகின்றோம். இவ்வாறு எல்லாக் கோட்டங்களுக்கும் குறைவின்றி
வழிபாடு இயற்றச்செய்வது அரசனது கடமையுமாம். இங்கு மகன்
கானிற் கன்னிவேட்டைக்குச் செல்வதால் காட்டிலுறை தெய்வங்களை
வழிபாடுசெய்தான் என்க. காடு - மலையைச் சார்ந்த
வேட்டைக்காடுகள். தெய்வம் - ஒளியுடையவை. திவ் பகுதி. ஒளி
குறித்தது.

     கவலையில்லான் - இவ்வேட்டை திண்ணனார்பால் உலகத்
தொடர்புகளையெல்லாம் அறவெறியும்செயலாய் முடிந்தது.
அவ்விளைவை யறியாதவனாதலின் கவலையில்லாது காடுபலியூட்டு
என்றான் என்பதாம். வரையாட்சிபெற்று, அதனைத் தாங்கும்
வன்மையுடைய தக்கமகனையும் பெறுதலியலாக்காலத்துப் பெற்று,
அவனுக்கு ஆட்சியும் தந்து உவக்கும் தந்தைக்கு உலகநிலையில்
ஒருகவலையுமிராதென்ற உலகியலையும் விளக்கியபடியாம்.

     பூட்டுறு .... புகுகின்றான் என்றது (வில்லல்லாவிடினும்
வில்லாகப்) பூட்டப் பெற்ற விருப்பந்தரும் (பொன்மலைச்)
சிலையுடைய வேடர்வடிவந் தாங்கிவந்த காளத்தியப்பரை என்றும்
காவல்புரிந்து அவரது வலப்பக்கத்து அழியாது நிற்பதோர் (காளத்தி)
மலையின் உரிமையைப்பெற என்மகன் புகுகின்றான் என்றிவ்வாறு
பிறிதோர் குறிப்புப் பொருள்பட நின்ற அமைப்புங் காண்க. 50