706.
நெறிகொண்ட குஞ்சிச் சுருடுஞ்சி நிமிர்ந்து பொங்க
முறிகொண்ட கண்ணிக்கிடை மொய்யொளிப் பீலி
                                   சேர்த்தி,
வெறிகொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறிகொண்ட வண்டின்குலஞ் சீர்கொளப் பின்பு
                                செய்து,
 57

     706. (இ-ள்.) வெளிப்படை. நெறிப்புக்கொண்ட
தலைமயிரைச்
சுருள்கள் போய் நேரே நிமிர்ந்து பொங்கும்படி
மேலேதூக்கிக்கட்டி, அதில் தளிர்களாலாகிய கண்ணி சாத்தி,
அதற்கிடையே நெருங்கிய ஒளியுடைய மயிற்பீலி சேர்த்தி,
வாசனையுடைய முல்லைமாலையுடன் குறிஞ்சிப்பூவையும்
வெட்சிப்பூவையும் நிறைந்த வண்டின்கூட்டம் மொய்க்குமாறு
சிறப்பாக அவற்றின்பின்பு சேரச்செய்து, 57

     706. (வி-ரை.) நெறிகொண்ட- நெறித்தலையுடைய -
நெறித்த. நெறித்தல் - தலைமயிர் சுருள்களையுடையதா யிருத்தல்.
"தொடர்பங்கி சுருண்டிருண்டு தூறிநெறித் தசைந்துசெறி,
படர்துஞ்சின் கருங்குஞ்சி" (26), "அஞ்சனமஞ் சனஞ்செய்த
தனையவணி கிளர்பம்பை" (27), எனவரும் சிறுத்தொண்டநாயனார்
புராணத் திருவாக்குக்கள் காண்க. இதனைப் பம்பை என்பதும்
வழக்கு.

     சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க - சுருள்போய்
ஒழுங்காய்நீண்டு விரிய. துஞ்சி - நீங்கி என்ற பொருளில் வந்தது.

     முறிகொண்ட கண்ணி - தளிர்களைச் சேர்த்துக்கட்டிய
மாலை. முறி - தளிர். இத்தகைய மாலைசூடுதல் இந்நாட்டவர்
வழக்கு. "கானில்வரித் தளிர்துதைந்த கண்ணி சூடி" (697). கண்ணி -
ஆடவர் தலையிற்சூடும் மாலை.

     மொய் ஒளிப் பீலி - பீலி (658)ல் உரைத்தவை காண்க.
மயிற்பீலி குறிஞ்சி நிலத்தில் மிகுதியாய்க் கிடைக்கும்
கருப்பொருளாம். இதனைத் தலையிற்செருகும் அணியாக
இந்நிலமக்கள் பூண்பர். மரவுரி - புலித்தோல் முதலிய உடைகளின்
மேலும் அணிந்துகொள்வர். மொய்ஒளி - ஏழுவர்ணங்களும் விரவி
அழகும் ஒளியும் செய்கின்ற.

     வெறிகொண்ட முல்லை - வெறி வாசனை. முல்லை
மலர்கள் மிக்க மணமுள்ளவை என்பது குறித்தது. பிணை - மாலை.
பிணைக்கப்பட்டது. குறிஞ்சி - குறிஞ்சிப்பூ. இது.
இத்திணைக்குரியது. இதனால் திணையும் நிலமும் இப்பெயர் பெற்றன
என்பர். வெட்சி - 686 பார்க்க.

     செறிகொண்ட வண்டின் சூலம் - இப்புதுமலர்களிற்
றேன்உண்ண மிக்கு மொய்க்கும் வண்டுக்கூட்டங்கள். செறிவு
தொகையும், குலம் வகையும் குறிக்கும். காலைமலர்ந்த பூக்களில்
வண்டுகள் மொய்த்தல் நந்தனவனங்களிலும் பூ விற்பனை
செய்யுமிடங்களிலும் காணலாம்.

     சீர்கொளப் பின்பு செய்து - தலையின்முன்புறம்சேர இப்
பூமாலைகளைச்சாத்தின் வண்டுகள் மொய்த்து முகத்தின்முன் பறந்து
கண்ணின் பார்வையை மறைத்துப் பலவாறு
இன்னல்விளைவிக்குமாதலின் இவற்றைச் சீர்கொள்ளும்படி பின்புறம்
அணிந்தனர் என்றதாம். சீர் - இங்கு ஒழுங்கு குறித்தது. சீர்
கொள்ளுதல்
- அளித்தல் என்றலுமாம். 57