707.
|
முன்னெற்றியின்
மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னிற்புரி கொண்ட மயிர்க்கயி றாரச் சாத்தி,
மின்னிற்றிகழ் சங்கு விளங்குவெண் டோடு காதின்
மன்னிப்புடை நின்றன மாமதி போல வைக, 58 |
707. (இ-ள்.)
வெளிப்படை. முன்னெற்றிமேல்,
மயிலிறகின்அடியில் இடையிடையே குன்றிமணிகளை உடன்வைத்து
முறுக்கிய மயிர்க்கயிற்றைப் பொருந்தும்படி சாத்தி, மின்போல
ஒளிவிடுகின்ற சங்கினாற்செய்த விளங்குகின்ற வெள்ளிய தோடு
காதிலேபொருந்தி இருபக்கமும் நின்றனவாய்ப் பெரிய
முழுமதிபோலப் பொாருந்த வைத்து, 58
707.
(வி-ரை.) முன்னெற்றியின்
மீது - மேற்பாட்டிற்
குஞ்சி முடித்தகோலமும் தலையின் பின்புறக்கோலமும்கூறி, இங்கு
முன்புறம் நெற்றியின்மேல் அணிவகை கூறுகின்றார். முன்னெற்றி
-
நெற்றிமுன். முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை.
கடைக்கண் - "கீழ்நீர்" என்பவைபோல.
முருந்து
- மயிலிறகின் அடி. முருந்து ....... மயிர்க்கயிறு
- மயிலிறகின் அடியும் குன்றிமணிகளும் இடையிடையேவைத்துப்
புரிகொண்ட முறுக்கமைந்த மயிர்க்கயிறு. இவ்வாறு முறுக்கிய
மயிர்க்கயிற்றினைத் தலையில் நெற்றிக்குமேல் திரணைபோல்
அணிதல் வேடர் முதலியோரது வழக்கு. திருஞானசம்பந்த
மூர்த்திகளது திருமணத்தில் திருநெற்றியின்மேல் முத்தினாலமைந்த
திரணை சாத்தினார்கள் என்பதும் காண்க (திருஞான - புரா - 1215).
ஆரச் சாத்தி - பொருந்தி விளக்க முறும்படி
நிறையச் சாத்தி.
மின்னில் திகழ்சங்கு - இல் - ஒப்புப்
பொருளில் வந்த
ஐந்தாம்வேற்றுமை யுருபு. மின்போலத் திகழ்கின்ற. தோடுபோலச்
செதுக்கப்பட்டு ஒளிவிளங்குதலால் மின்னில் என்றார்.
சங்கினாலியன்றதோட்டினை அணிதல் முன்னாள்வழக்கு.
சிவபெருமான் சங்கக்குழை தரித்துள்ளார் என ஆகமங்கள்பேசும்.
"சங்கக் குழையார் செவியா அழகா" என்ற நம்பிகள் தேவார
முதலியன காண்க
புடை
- இருபுடையிலும். மாமதி - (இரண்டு)
முழுமதிகள்.
வரும்பாட்டில் துண்டப்பிறை என்றதனால் இங்கு மாமதி என்றது
முழுமதி குறித்தது. வைக - தங்க. 58
|