728.
தாளறுவன விடைதுணிவன தலைதுமிவன கலைமா;
வாளிகளொடு குடல்சொரிதர மறிவனசில மரைமா;
நீளுடல்விடு சரமுருவிட நிமிர்வனமிடை கடமா;
மீளிகொள்கணை படுமுடலெழ விழுவன்பல
                                 வுழையே.
79

     (இ-ள்.) வெளிப்படை. கலைமான் (களிற் பல) காலறுவனவும்,
இடை துணி வனவும், தலை இறுவனவும் ஆயின; மரையினத்துட்
சில உடலுட்பாய்ந்த அம்புகளோடு குடல் வெளியிற்சொரிய
இறப்பன ஆயின; கூட்டமாக நெருங்கிய கடமாக்கள் நீண்ட
வுடலினுள் வேடர்விட்ட அம்புகள் பாய்ந்து ஊடுருவிச்செல்லவே
செயலற்றுப் பெரு வருத்தத்துடன் நிமிர்வனவாயின; பலமான்கள்
வலிய அம்புகள் தைத்தலால் உடல் துள்ள விழுவன ஆயின.

     (வி-ரை.) இப்பாட்டிற் கூறியன மான் வகைகள். 727 பார்க்க.
அறுபடுவன துணிபடுவன துமிபடுவன என்றபடி செயப்பாட்டு
வினைகள் செய்வினையாக வந்தன.

     வாளிகளொடு.....மறிவன - அம்புகள் உடலிற் றைத்த
வழியால் குடல்கள் வெளியிற் சொறிந்தன. அக்குடல்களோடு
அம்புகளும் வெளியிற் சரிந்து போந்தன என்பதாம்.

     நீள்.......நிமிர்வன - கடமான்கள் சிலவற்றில் நீண்டசரங்கள்
உடலை ஊடுருவிச் சென்றன; அவ்வருத்தத்தால் அவை உடல்
நிமிர்ந்து வீழ்ந்தன. நீள்சரம் என்று கூட்டியுரைத்தலுமாம். உடல்
நிமிர்தல்
- இங்கு இவற்றிற்கு இயல்பினுள்ள கவிழ்ந்த தன்மை
நீங்கி வருத்தமிகுதியால் நீண்டு நிமிர்ந்து வீழ்தல் குறித்தது. கடமா -
மானின் ஒருவகை. யானைகள் என்றுகொண்டு செயலற்றுநின்றன
என்றுரைப்பாருமுண்டு. அஃதீண்டுப் பொருந்தாமையுணர்க. கடமா
- காட்டுப்பசு என்பாருமுண்டு.

     உடல் எழ - எழ - இங்குத்துள்ளி மேலெழுதல் குறித்தது.

     இதுமுதல் 740 வரைஉள்ள 13 திருப்பாட்டுக்களை இங்கு
நாற்சீர்க்கலிவிருத்தமாக அலகிட்டவா றன்றித், "தாளறு வனவிடை
துணிவன தலைதுமி வனகலைமான்" என்றபடி முதற்சீர்
விளச்சீராகவும், பின் மூன்று சீர்கள் கரு விளச்சீர்களாகவும்,
இறுதிச்சீர் கருவிளங்காய்ச் சீராகவும் பிரித்து ஐஞ்சீர்க்கலி
நிலைத்துறையாகக் கொள்ளுதலும் உரிய ஓசைநயம்படும். 79