730.
பின்மறவர்கள் விடுபகழிகள் பிறகுறவயி றிடைபோய்
முன்னடுமுக மிசையுருவிட முடுகியவிசை யுடனக்
கொன்முனையடு சரமினமெதிர் குறுகியமுக முருவத்
தன்னெதிரெதிர் பொருவனநிகர் தலையனபல
                                கலைகள்.
81

     (இ-ள்.) பல கலைகள் - பல கலை மான்கள்; பின்
மறவர்கள்.....பிறகுற - பின் புறத்தினின்று மறவர்கள் எய்த அம்புகள்
தமது உடலின் பின்பாகத்திற்றைக்க; வயிறிடை......உருவிட - (அந்த
அம்புகள்) அவற்றின் வயிற்றினிடை போய் முன்புறம் முகத்தினடுவில்
உருவிட; முடுகிய.....சரம் - மிக வேகத்துடன் விடப்பட்ட வேட்டை
முகத்தில் அடல்வல்ல அந்த அம்புகள்; இனம்........உருவ
அவ்வாறெய்யப்பட்ட கலைமானின் இனமாகிய எதிரே ஓடிய மானின்
நெருங்கிய முகத்திலும் தைத்து அதனையும் ஊடுருவ; தன்......
தலையன - (அவ்விரண்டு மான்களும் ஒன்றை யொன்று) தான் தான்
எதிர்முட்டிப் போர் செய்கின்றன போன்ற தலைகளை யுடைவாயின.

     (வி-ரை.) பின் - பின்புறமிருந்து. மறவர்கள் - மறம்புரியும்
வேடர். பின் புறம் தாக்குமாறு பின்னின்று படைவிடுதல் அறமன்று;
அது மறமாம். பின் காட்டி ஓடுகின்றார்மீது படைதொடுதல்
கூடாதென்பது போர் நீதிகளில் ஒன்று. இங்கு இவ்வேடர்
அவ்வாறன்றிப் பின்காட்டிய மான்களின்மீது பின்னிருந்து அம்பு
எய்தனராதலின் மறமேசெய்தார் என்ற குறிப்புப்பட பின் மறவர்கள்
விடு பகழிகள்
என்றார். இவர்கள் போலல்லாது திண்ணனார் பகை
விலங்குகளின் எதிர் நின்று போர்செய்தார் என்பார் குரிசில்
முன்விடு சரம்
என மேல்வரும் பாட்டிற் பாராட்டிக் கூறியதும்
காண்க.

     பிறகுற - உடலின் பின்புறத்திற் றைத்துப் பொருந்த. முன்
நடுமுக மிசை உருவிட - முன்புறம் முகத்தின் நடுப்பாகத்தின்
மேல்வந்து உருவ. முகத்தின் நடு என்க. முன்பின்னாகத் தொக்க
ஆறாம்வேற்றுமைத் தொகை.

     முடுகிய விசை - மிக்க விசை. அக் கொன்முனை
அடுசரம்
- கொல்லுலையில் வடித்துக் கூர்மையாக்கிய அடுகின்ற
அம்பு என்பாருமுண்டு.

     இனம் - தம் இனமாகிய கலைமான். எதிர்குறுகிய முகம்
உருவ
- எதிராக ஓடி வந்து கூடிமுட்டிய முகத்திலே தைக்க. தான்
என்பது தன்எனக் குறுகிநின்றது. அதனை அடுக்கியுரைத்துக்
கொள்க. 81