756.
வெம்மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதி யார்போற்
கைம்மலை கரடி வேங்கை யரிதிரி கானந் தன்னில்
உம்முடன் றுணையா யுள்ளா ரொருவரு மின்றிக்
                               கெட்டேன்!
இம்மலை தனியே நீரிங் கிருப்பதே!" யென்று
                                நைந்தார்.
107

     756. (இ-ள்.) வெளிப்படை. "கொடிய மறக்குலத்தில் வந்த
வேட்டுவச் சாதியாரைப்போல, யானை, கரடி, புலி, சிங்கம் முதலிய
கொடிய விலங்குகள் திரிதற் கிடமாகிய காட்டிலே, உம்முடன்
துணையாயுள்ளவர்கள் ஒருவருமில்லாமல், ஓ! கெட்டேன்!, நீர்
இம்மலையின் தனியே இருப்பதோ? என்றுகூறி மனம் நைந்தனர். 107

     756. (வி-ரை.) வெம்மறக்குலம் - வேட்டுவச் சாதி.
சாதி பெரும்பிரிவு; குலம் சாதியினுட்பிரிவு. குடிமை என்னும்
அதிகாரத்தில் சாதியாகிய வருணம் நான்கனுள் குலவேறுபாடுண்மை
விளக்கினார். அரசசாதியுள் சேரர்குலம் சோழகுலம் என்பன
காண்க. "சாதிகுலம் பிறப்பு" என்பது திருவாசகம். சிறுபான்மை ஆகு
பெயரான் இவ்விரண்டும் மாறிக்கூறுவதும் உண்டு, (மசாதியும்
வேதியன் றாதை" - (திருவாசகம்), "தம்மானை யறியாத சாதியார்" -
(தேவாரம்) என்பன நற்சாதிப் பிரிவுபற்றியன. "சூத்ரா : சுத்த
குலோத்பவா :" என்ற சிவாகமத்தில் சாதிக்குட்பிரிவு குலமாதல்
காண்க. இந்நூலுட் பெரும்பாலும் சாதிகுலம் இரண்டும் ஒரு
பொருளில் வருகின்றன. "ஓங்கிய நாற்குலத்து ........... உயர்ந்தனவு
மிழிந்தனவு மான சாதி" என்பது காண்க. குலப்பிறப்பாலும் மறம்
பூண்டார்; தொழிலாலும் வேட்டை (மறவினை) செய்வார்; ஆதலின்
கருணையற்றவராவார்; கொல், ஏறி, குத்து என்னும் வாழ்க்கையே
வாழ்பவராகிய கொடுமையுள்ளார்; அவர்களே கொடுவிலங்குகள்
வாழும் இக்கானில் தனியிருத்தற் பாலர். அவ்வாறன்றி மிக
இனியராய்க், கருணையே உருவாகவுடைய தேவரீர் இங்குத்
தனியாய் இருத்தல் தகுமோ என்றதாம். வேடர் காட்டில்
தனியிருப்பர் என்றது இவரது முன்னனுபவ ஞானத்தின்
வாசனையுணர்ச்சி. இங்கு இவர் தம்மை மறந்த நிலையினும் அது
வந்துதாக்கியது.

     கைம்மலை - யானை. கையையுடைய மலைபோன்றது.
உவமையாகுபெயர். அது யானைக்குப் பெயராய் வழங்கலாயிற்று.
கைவரை - (736) என்றது காண்க. கைம்மலை - கரடி -
வேங்கை - அரி
- இவையனைத்தும் கொடிய பெருவிலங்குகள்.
வேங்கை - புலி. திரி என்றதனால் அக்கானத்தில் இவை
எப்போதும் எவ்விடத்திலும் எதிர்ப்பட உள்ளதன்மை
குறிக்கப்பட்டது.

     உம்முடன் துணையாயுள்ளார் ஒருவரும் இன்றி -
விலங்குகள்வரின் உம்மைக் காத்தற்குற்ற துணையாக உள்ளவர்கள்
எவரும் உடன் இல்லாமல். விலங்குகள் இத்தேவர்க்கு ஊறுசெய்தல்
கூடும் என்பது திண்ணனார் கொண்ட அச்சம். பின்னர் "இரவு
சேரும் வெவ்விலங் குளவென் றஞ்சு" வதும் (776), தேவரது
கண்ணில் உதிரங்கண்டபோது இந்த நினைவுபற்றியே,
அப்புண்ணினை "விலங்கின் சாதி ஆளிமுன் னாகியுள்ள
விளைத்தவோ" என்றஞ்சுவதும் காண்க. இதுவும் இவர்க்கு
இப்பிறவியின் அனுபவஞானத்தின் எஞ்சியவாசனை, தம்மை முற்றும்
மறந்து பசி, பயம், இன்பம், துன்பம் முதலிய உலகநினைவு யாதும்
இல்லாத சீவன்முத்த நிலையை யடைந்தாராயினும் திண்ணனார்,
எந்தத் தேவரிடத்து அன்புருவமாயினாரோ அவர் பொருட்டுப் பசி,
சுவை, பயம், இன்பம், துன்பம் முதலிய உலக நினைவு
கொண்டுள்ளவராயினார். அந்நினைவினிடமாகத் தமது உலக
அனுபவவாசனைபற்றி இவ்வாறு மறக்குலமும், விலங்குகளும், அவை
மக்களுக்கு ஊறுசெய்யும் தன்மையும், கடுங்கானம் மக்கள்வாழத்
தகுதியற்ற தன்மையும் பிறவும் நினைவுகொள்கின்றார். இவர்தமக்
கமுதுசெய்ய இறைச்சியு மிடுவாரில்லை (760), நீர்பசித் திருக்க விங்கு
நிற்கவுங் கில்லேன் (762), வாலிய சுவைமுன் காண்பான்
வாயினிலதுக்கி (767), இனியஎம் பிரானார் சாலப் பசிப்பர் (771),
வேறுவேறினங்கள் வேட்டை வினைத்தொழில் விரகினாலே,
ஊறுசெய் காலஞ் சிந்தித்து (782), (791) முதல் (797) வரை
உள்ளவை, சுவைகண்டேன், தேனுமுடன் கலந்ததிது தித்திக்கும்
(799) என்றவை முதலிய நினைவுகள்யாவும் இப்பிறவியின் உலக
அனுபவம்பற்றிய ஞானத்தின் எழுந்த வாசனை பற்றியனவேயாம்.
"எனக்குமாறா மீளிவெம் மறவர் செய்தா ருளர்கொலோ" (816) என்று
தம்முடைய இப்பிறப்பின் முன்நினைவும் தேவரின்பொருட்டாய்த்
தமது விருப்பு வெறுப்பு முதலிய நினைவுகளும் நேர்ந்தது காண்க.
தம்பொருட்டுத் தம் நினைவு முற்றும் இலராகியும், ஆனால்,
தேவர்பொருட்டுத் தம் நினைவு முற்றும் உளராகியும் நிகழ்ந்தது
இந்த ஆறுநாள்களிற் சீவன்முத்தியின் நிலை இவரது உலகவாழ்க்கை
என்று தெளிக.

     உம்முடன் றுணையா யுள்ளார் ஒருவரும் இன்றி என்பது
முற்றும் உண்மையே!. துணை - ஒப்புமை. இத்தேவர் தமக்குவமை
யில்லாதவர். இவர் ஒருவரே பதி. இவ்வுண்மையை வேதாகமமாதி
எல்லா நூல்களும் எடுத்து முழக்குகின்றன. நீர்யாவர்க்கும்
துணையாவதன்றி உமக்குத் துணையாவார் பிறரெவரும் இல்லை
என்ற கருத்தும் காண்க.

     கெட்டேன்! - அவலக் குறிப்புச்சொல். இவ்வாறு
கண்டதனால் நான் கேடடைந்தவனானேன். பின்னர்ப், பாவியேன்
கண்ட வண்ணம் (818) என்றதும்காண்க.

     இம்மலை.........நைந்தார் - ஆளுடைய நம்பிகள்
திருக்கோடிக் குழகரைக் கடற்கரையிற் றனியேயிருக்கக் கண்டபோது
"கொடியேன் கண்கள் கண்டன" என்று தம்மை நொந்துகொண்ட
மனநிகழ்ச்சியை இங்கு வைத்துக் காண்க.

     இருப்பதே? இருப்பது தக்கதா? ஏகாரவினா எதிர்மறை
குறித்தது. நைந்தார் - மனமிக வருந்தினார். "வீரர்" (781) மனநைந்து
தேவர்க்குவரும் ஏதத்துக்கு வருந்தினார்.

     நின்று - பொங்க - பாய - அச்சோ! என்று - பரிவுதோன்ற -
இருப்பதே! என்று நைந்தார் - என இவ்விரண்டு பாட்டுக்களையும்
தொடர்ந்து முடிக்க. 107