780. செந்தழ லொளியிற் றோன்றுந் தீபமா மரங்க
                               ளாலு,
மந்திகண் முழையில் வைத்த மணிவிளக்
                          கொளிக ளாலு,
மைந்துமா றடக்கி யுள்ளா ரரும்பெருஞ் சோதி
                              யாலு,
மெந்தையார் திருக்கா ளத்தி மலையினி
                        லிரவொன் றில்லை.
131

     (இ-ள்.) வெளிப்படை. சிவந்த தீச்சுடரின் ஒளிபோல மிக்க
ஒளிவீசும் பெரிய சோதி மரங்களின் விளக்கத்தாலும், மந்திகள்
கற்பொந்துகளில் (தமக்கு விளக்காக) வைத்த முத்துமணிகளின்
ஒளிகளாலும், மாறுசெய்யும் ஐம்புலன்களையும் அடக்கிய
அருமுனிவர்களின் அரியபெரிய சோதியாலும் எந்தையாராகிய
சிவபெருமானது திருக்காளத்தி மலையில் இரவு ஒன்றுதல்
இல்லையாம்.

     (வி-ரை.) மா தீபமரம் - சோதிவிருட்சம் என்பர். இது
பகலில் ஏனை மரங்கள் போல இருந்தும், இரவில் பெரிய ஒளியாய்
நெடுந்தூரத்தினும் காணப்பட்டுப் பக்கங்களெங்கும் விளங்கச்செய்யும்
இயல்புடையத்தோர் சிறந்த தெய்வீகமுடைய மரம். அற்புதமுடைய
சிறந்த காடு மலைகளில் இதனைக் காணலாம். இதனைக் காயசித்தி
மூலிகைகளில் ஒன்றாய்க் கருதுவர். தீபமரம் என்றமையால்
இனம்பற்றிச் சோதிப்புல்லும் சோதிவல்லியுங் உடன்கொள்ளப்படும்.
தீபமரத்தைப்பற்றி, "ஒதுறும் பாற்கிணற்றுக் கீழ்த்திசையில்
யோசனைமூன் றளவிற்காணும், சோதிமரமுளது"
(விம்மிதப்படலம் - 7) என்று பேரூர்ப் புராணத்துட்கூறுதல் காண்க.

     செந்தழல் ஒளி - செந்தீ மூண்டெரியும் பெரிய ஒளி,
ஒளியில் தோன்றும்
- ஒளிபோன்ற விளக்கத்துடன் இரவிலே
தோன்றுகின்ற. மரங்களாலும் - மரங்களின் ஒளியாலும்.

     முழையில் மந்திகள் வைத்த - குரங்குகள் தாம்
வாழிடமாகிய குகைகளில் தமக்கு விளக்காகப் பயன்படுமாறு
கொண்டுவந்து வைத்த.

     விளக்குமணி ஒளிகளாலும் எனமாற்றுக. தூக்கணம் முதலிய
பறவைகள் தம் கூடுகளில் விளக்கம்செய்ய மின்மினி முதலியவற்றை
வைக்கும் இயல்பை இங்கு உன்னுக. மனிதனேயன்றி, ஏனைய உயிர்
வகைகளில் அறிவுபடைத்த சில உயிர்கள் இவ்வாறு தம்
இருக்கைகளை இன்பவீடாகப் பலவகைகளிலும் ஆக்கிக் கொள்ளு
மியல்புடையனவாம். இவ்வியல்புகளைப் பலவகைப் பிராணிகளின்
அமைப்புக்களையும் வாழ்க்கைத் திறங்களையும் கூறும் உயிர்வருக்க
நூல்களிற் கண்டுகொள்க. குரங்குகள் (வால் - நரம்) வானரம்
எனப்பட்டு, மனித வருக்கத்திற்கு அடுத்த கீழ்ப்படியில் அறிவமைந்த
பிராணிகள் என ஒருசார் உயிர்வருக்க நூலார் வகுத்துள்ளதும்
காண்க.

     மந்தி - பெண்குரங் கென்றுகொண்டு பொருள்
கூறுவாருமுண்டு. (கடுவன் - ஆண்குரங்கு.) வீட்டிற்கு
விளக்கேற்றுதல் பெண்களின் கடமைகளில் முதன்மையாக வைத்துப்
பேசப்படும் வழக்கையும், "தையலார் கொண்டாடும் விளக்கீடு" என்ற
தேவாரத்தினையும் காட்டிக், "கைம்மக வேந்திக் கடுவனொ டூடிக்
கழைபாய்வான், செம்முக மந்தி சுருவரை யேறும் சிராப்பள்ளி"
"மந்தி கடுவனோடூடி மலைப்புறம்" என்ற தேவார ஆட்சிகளும்
அன்னார் காட்டுவர். ஏனைச்சீவ வகுப்பின் இவ்வாழ்க்கைத் திறத்தை
"மனையுறை குருவி வளைவாய்ச் சேவல், சினைமுதிர் பேடைச்
செவ்வி நோக்கி, ஈனி லிழைக்கவேண்டி யானா, அன்பு பொறை கூர
மேன்மேன் முயங்கிக், கண்ணுடைக் கரும்பி னுண்டோடு கவரும்,
பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை" என்று திருவாரூர் மும்மணிக்
கோவை (19)யில் கழறிற்றறிவார் நாயனார் அருளியதானு மறிக.

     முழை - பொந்து. குரங்குகள் மலைப்பிளவு முதலிய
பொந்துகளில் வாழும் இயற்கை யுடையன.

     மாறுஐந்து அடக்கிஉள்ளார் என மாற்றுக. ஐந்து -
ஐம்புலன்கள். எண்ணலளவை யாகுபெயர். மாறிமாறி வஞ்சித்து
உயிர்களைப் பிறவிக்குழியிற் கீழே வீழ்த்தும் ஐம்புலன்களையும்
அடக்கிய பெருமுனிவர்கள். ஐம்புலன்களையும் அடக்குதலாவது
தம்மை அவை வசப்படுத்தி அதிகாரஞ்செய்து செல்லும்படிவிட்டு
அவற்றின்கீழ் அடிமையாய்த் தாம் அமைந்துநின் றொழியாது, தம்
ஏவலின்வழி அவைநின்று பணிசெய்யுமாறு அவற்றை அடக்கி
ஆளுதல். அவற்றின் மயக்கத்திற்குட்படாது தம் வயமுடையராகுதல்.
ஐம்புலச் சேட்டையை யில்லையாக்கிக்கொள்ளுதல்.
"ஞானிகளாயுள்ளார்க ணான்மறையை முழுதுணர்ந்தைம் புலன்கள்
செற்று,
மோனிகளாய் முனிச் செல்வர் தனித்திருந்து
தவம்புரியுமுதுகுன்றமே" (ஆளுடையபிள்ளையார் தேவாரம்),
"தம்மை யைந்து புலனும் பின் செல்லுந் தகையார்" (சண்டீசர்
புரா - 2) என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.

     அடக்குதல் - செயல் இல்லையாக ஒழித்தல் அன்று.
"தலையே நீவணங்காய்," "கண்காள் காண்மின்களோ," என்பன
முதலாகிய ஆணைவழி ஒழுகி இறைவன் பணிசெய்து நிற்றற்கு
இவை வேண்டப்படுதலின் அவ்வாறு இவற்றை ஒழித்துவிட்டால்
அவ்வுயிர்க்குப் பிறவிப் பயனில்லையாய் ஒழியும்.
இக்கருத்துப்பற்றியே "அஞ்சு மடக்கடக் கென்ப ரறிவிலார், அஞ்சு
மடக்கு மமரரு மங்கில்லை, அஞ்சு மடக்கி லசேதன மாமென்றிட்,
டஞ்சு மடக்கா வறிவறிந் தேனே" (7-ம் தந் - 330 - ஐந்திந்திரிய
மடக்கு முறைமை) என்றருளினார் திருமூலர்.

     மாறுஐந்து - மாறு செய்யும் ஐந்தாகலின் சொல்வைப்பு
முறையும் மாற்றியருளினார். "மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைந்து" என்பது திருவாசகம். மாறுசெய்தல் -
நிலைதிரித்தல் - வஞ்சித்து வசப்படுத்துதல். ஒருபுலன் செய்ததனை
மற்றொருபுலன் செய்யாது வேறொரு வழியில் ஈர்த்துத் தள்ளுதலும்,
நிற்கவேண்டிய நிலையில் நில்லாது நெறிபிறழச் செய்தலும் ஆம்.
இது "ஒரு புலனுகரும் போதங் கொன்றிலை; ஒன்றன் பாலும்,
வருபயன் மாறி மாறி வந்திடு மெல்லா மாறும்" (2 - 94) என்ற
சிவஞானசித்தியாரில் விளக்கப்படுதல் காண்க. ஆறுஐந்தும் என
மாற்றி ஆறு - வழி எனக்கொண்டு ஐம்புலன்களின் வழிகளை
அடைத்து என்று கூறுதலுமாம். வழியாவன புலன்கள்.
"ஆற்றுமைப்புலத் தாறுசென் மேலையோர்" (அவையடக்கம் - 7)
என்ற கந்தபுராணமுங்காண்க.

     இவ்வாறன்றி ஐந்தும் (புலனும்) ஆறும் என எண்ணும்மை
தொக்கதாகக் கொண்டு ஆறு என்பது காமக் குரோத, லோப,
மோக, மத மாச்சரியமென்னும் ஆறு குற்றங்களையுங் குறித்ததாகக்
கூறுவதுமாம். "துன்றும் புலனைந்துடனாறு தொகுத்த குற்றம்,
வென்று" - (சோமாசி - புரா - 5) என்றது காண்க. உட்கரண
புறக்கரணங்களின் றொடர்பைப்பற்றி 252-ல் உரைத்தவை காண்க.

     அரும்பெருஞ்சோதி - மோனிகளாகிய
முனிச்செல்வர்களிடமிருந்து காணப்படும் தியானவிளக்கமாகிய
ஞானஒளியின் வெளித்தோற்றம். அருமை - அவ்வாறு
அடக்காதாராற் பெறுதற்கருமையும், பெருமை -
அளவிடலாகாமையுங் குறித்தன. சோதி - தவமகிமையால்
நெடுந்தூரத்துக் காண்பார்க்கு அவருடம்பு ஒளிப்பிழம்பாய்த்
தோன்றுவது என்பர் ஆறுமுகத் தம்பிரானார். அவரணிந்த
திருநீற்றின் ஒளி என்றலுமாம். சோதிமயமான நீற்றைச்
சோதியென்றார். "பராவண மாவது நீறு" என்றது வேதம்.
திருநீற்றினால் புறஇருளும் நீங்குதல் முருகர் புராணம் - 2, திருஞானசம்பந்தர் புராணம் - 6 இவற்றானறிக.

     எந்தையார் - எமது தந்தையார். "எந்தை யீசனெம்
பெருமான்" (ஆளுடையபிள்ளையார் - திருநெல்வாயிலரத்துறை),
"எந்தையுமெந்தை தந்தை தந்தையுமாய வீசர் - (திருநேரிசை -
திருவீழிமிழலை - 7), "யாவர்க்குந் தந்தைதா யெனுமவரிப்
படியளித்தார்" (திருஞான - புரா - 69) முதலிய திருவாக்குக்கள்
காண்க.

     இரவு ஒன்று இல்லை - ஒன்று - ஒன்றுதல் -
பொருந்துதல், ஒன்றும் என்றதில் உம்மை தொக்கதாகக் கொண்டு
ஒரு சிறிதும் என்றலுமாம். பிற இடங்களிற்போல இரவு என்ற ஒரு
காலமில்லை எனலுமாம். இரவு - சூரியன் ஒளிபெறாத நாட்பகுதி.
நிலவுலகம் சூரியனையும் தன்னையும் சுற்றும் சுழற்சியிலே அதன்
ஒரு பகுதி இரவுக் காலம் கொண்டதாகும். சூரியன் ஒளி வீசும்
பகுதி பகல் எனப்படும். நில அண்டத்தின் கீழ் மேல் என்ற
இருபகுதியினும் ஆளுகை செல்லுதலால் "ஆங்கிலர் அரசுக்குட்பட்ட
நிலப்பரப்பிற் சூரியன் அத்தமிக்கின்றதில்லை" (The sun never
sets on the British Empire) என்று இக்கருத்துப் பற்றியே
வழங்குவதும் காண்க. ஞாயிறு ஒளிவீசப் பெறாத காலம் இரவு
எனப்படும். அவ்விரவு தன்னியல்பாகிய இருட் செறிவு, உயிர்களைத்
துயில் முதலியவற்றிற் செலுத்துதல் முதலிய குணங்களுடையது.
ஆயின் இங்குத் திருக்காளத்தி மலையில் ஞாயிற்றின்
ஒளியில்லையாயினும், அதனின் மிக்க சோதிமாமர ஒளி, மணியொளி,
ஐந்தடக்கியோர் அரும்பெருஞ்சோதி என்ற மூவகைச்சோதிகளு
மிருத்தலால் வேறிடங்களிற் சேரும் அந்த இரவு இல்லை என்றார்.
சோதி மரம் செந்தழல் ஒளியும், முத்துக்கள் சந்திரன் ஒளியும்,
ஐந்தடக்கியோர் சூரியனது மிக்க ஒளியும் காட்டலால், ஏனை
இடங்களிற் பகலில் சூரியன் ஒளி ஒன்றுமே காட்ட, இங்கு இரவில்
அதனின்மிக்க மூவொளியும் தோன்ற நிற்பதனால் ஏனை இடங்களிற்
பொருந்தும் இரவு இங்கு இல்லை என்ற குறிப்பும் காண்க. இரவு
இல்லை
என்னாது இரவு ஒன்றில்லை என்றதும் இக்கருத்துப்
பற்றியேயாம்.

     அருட்பெரியோர் வாழ்கின்றதும் காலங்கடந்ததுமாகிய
கயிலைமலையிலும், கயிலையேயாகிய காளத்தி மலையிலும் சூரியன்
மற்றைத் தேவர்களுடன்வந்து வழிபடுதற் குரியவனேயன்றி
ஏனையிடங்களிற் செய்தல்போல இங்குப் பகல் இரவுகளைச்
செய்தற்கு வலியிலன் என்றதும் குறிப்பாம். இதுபற்றியே "பரிதியோடு
சந்திரன் ..... கும்பிடச் சென்றா லொக்கும்" என்றதும் காண்க.

     இரவுசேரும் விலங்கு உள என்று அஞ்சினார் (776)
திண்ணனார் ஆதலின் நீள் இருள் நீங்கச் (777) சிலையுடன்
நின்றனர். அதன் பொருட்டு இரவு இல்லாதவகை பரிதியோடு
சந்திரன் கூடி வந்தாலென்ன முத்துக்களும் செம்மணிகளும்
ஒளிபொங்க உமிழ்ந்தன (778); பன்மணிகளும் மரகதமும் நீலமும்
இமைத்தன (779); தீபமரங்களும் மணிவிளக்குக்களும் ஐந்தடக்கினார்
அருஞ்சோதியும் இரவையில்லையாக்கின (780) என்றிவ்வாறு
இவ்வைந்து பாட்டுக்களும் தொடர்ச்சியாய்ப் பொருள்பட, அவ்விரவு
கழியுந்தனையும், காணும் பொருள்களையும், காட்சிகளையும்
ஆசிரியர் கண்டு காட்டுகின்ற திறம் காண்க. திண்ணனார் இரவு
கழித்ததுபோலவே நாமும் உடன் கழித்துச் சரிதப்போக்கை
உணருமாறு செய்த திறமுங் காண்க.

     மணியொளி விளக்கத்தாலும் - என்பதும் பாடம். 131