901. மனந்தளரு மிடர்நீங்கி, வானவர்நா யகரருளாற்
புனைந்தமலர்க் குழல்பெற்ற பூங்கொடியை
                           மணம்புணர்ந்து,
தனம்பொழிந்து, பெருவதுவை யுலகெலாந் தலைசிறப்ப
வினம்பெருகத் தம்முடைய வெயின்மூதூர்
                          சென்றணைந்தார்.
36

       901. (இ-ள்.) மனம்...நீங்கி - மனந்தளர்ந்ததனால்
உண்டாகிய துன்பம் நீங்கியவராய்; வானவர்...மணம்புணர்ந்து -
தேவதேவருடைய திருவருளினால் முன்புனைந்திருந்த வண்ணமே
மலர்களணிந்த கூந்தலினை வளரப்பெற்ற பூங்கொடி போன்ற
மணமகளாரை மணஞ்செய்து; தனம்...தலைசிறப்ப -
நிதிகளையாவர்க்கும் மிகக் கொடுத்துப் பெருங்கல்யாண மகிழ்ச்சி
உலகெங்கும் ஒங்கிச் சிறக்கச் செய்து; இனம்....சென்றணைந்தார் -
சுற்றத்தார்கூடிப் பெருக நிறையத் தமது மதில் சூழ்ந்த பழவூரினைச்
சென்று சேர்ந்தனர். 36


     901. (வி-ரை.) மனத்தளரும் இடர் நீங்கியதன் காரணம்
மேலுரைக்கப்பட்டது.

     வானவர்....பூங்கொடி - தேவ தேவராதலின் ஆக்குதல்,
அழித்தல் முதலிய எல்லாம் வல்லவர்; அவரது அருள்
களையப்பட்ட கூந்தலை முன் இருந்தவாறே மீள வளரச் செய்தது
என்க. புனைந்தமலர்க்குழல் - மணக்கோலம் புனைந்திருந்த
தேனக்க மலர்க்கூந்தல்
(893), என முன் அரிந்தெடுக்கப்
பட்டவாறே மீளவுளதாயினமை குறித்தார். சிறுத்தொண்டநாயனார்
சரிதத்தில் சமைத்து இலையிற் படைத்த கறி,மீளப் பாலகனாக வரத்
திருவருள் செய்ததென்றால், வளருந் தன்மைத்தாய குழல் விரைவில்
வளர்ந்த இது ஓர் அற்புதமன்றே! பூங்கொடி - கொடிபோல்வார்.
மலர்க்குழல் பெற்ற என்ற இக்குறிப்பினைக் கொண்டு,
கலிக்காமனார் குழல் களையப்பட்ட பெண்ணை எவ்வாறு
மணப்பதென்று மனந்தளர்ந்தனர் என்பார் சிலர். அருணிகழ்ச்சி
காணும்பேறு பெறவில்லை எனச் சிந்தை தளர்ந்தனராதலின்
கலிக்காமனார் காணும்படி புனைந்த மலர்க்குழல் பெறத் தரும்
இவ்வருள் வெளிப்பாட்டினை இறைவர் செய்தருளினர் என்க.
புனைந்தமலர்க்குழல் - அரியும்முன், தேனக்க மலர்க்கூந்தல்
(893), மலர்க்கூந்தல் (894) என்றும், மீளக்குழல் வளர்ந்தபின்,
இங்குப் புனைந்தமலர்க்குழல் என்றும் கூறிய ஆசிரியர் இடையில்,
அடியில் அரிந்தெடுக்கப்பட்ட நிலையில், வண்டுவார்குழல் என்று
வாளா கூறிய நயம் சிந்திக்க.

     தனம் பொழிந்து - கல்யாணத்தில் மணமகன் வீட்டார்
தமது இயல்புக்கேற்றபடி இரவலர் முதலியோர்க்கு ஈகையிற்
சிறத்தல் இயல்பு. அரசர் சேனாபதி குடியில் வந்த ஏயர்கோனார்
தம் நிலைமைக்கேற்றவாறும், அவ்வாறே அரசர் சேனாபதிக்குடியில்
வந்தவராய்த் திருவருள் பெற்றுப் போந்த மானக்கஞ்சாறனாரது
பெருமைக்கும் புனைந்த மலர்க்குழல் மீளப்பெற்ற மகளாரது
பெருமைக்கும் ஏற்றவாறும், இருவர்க்கும் இடையாடிச் செய்த
சிவபெருமானது திருவருட் சிறப்பினுக்கேற்றவாறும் தனம்
பொழிந்தனர்
என்க. இதனால் அது பெருவதுவையாகி
உலகெலாம் தலைசிறக்க
ஓங்கி விளங்கிற்று என்பதாம்.

     தலைசிறத்தலாவது - புகழ் மேம்படப் பாராட்டப்பெறுதல்.

     இனம்பெருக - மணத்தின் பின்னர் இருபாலின்
இனத்தவர்களும் ஒருங்கு கூடிச் செய்தலாலும், கலிக்காமனாருடன்
தம் சால்புநிறை சுற்றம் தலைநிறையக் (885) கூடி வர, அவர்களோடு
மானக்கஞ்சாறனாரது நீள்சுற்றமெலாம் (884) ஒப்பரிய
இப்பெருவதுவையினாற் பிணைக்கப்பட்டு ஒன்று கூடுதலாலும், முன்
வந்ததனைவிட மிகப் பெருங்கூட்டமாதலின் இனம்பெருக என்று
தேற்றம் பெற எடுத்துக் கூறினார்.

     தம்முடைய எயில்மூதூர் - இது திருப்பெருமங்கலம்
என்பதாம். ஏயர்கோன் - புரா (1) பார்க்க. இதன் சிறப்பு
அப்புராணம் 2,3,4 பாட்டுகளிற் பேசப்படுதல்
காண்க. இது
திருப்புன்கூருக்கு வடக்கில் ஒரு நாழிகையளவில் மட்சாலையில்
உள்ளது. திருக்கோயிலும் அதில் ஏயர்கோனாரது திருவுருவமும்
உண்டு. சைவர் பூசை. நாயனாரது உற்சவம் கொண்டாடுகின்றனர்.
பன்னிருவேலி என்ற கிராமமும் உண்டு. தலச்சிறப்பும் பிறவும்
விரிவாய் ஏயர்கோனார் புராணத்திற் கண்டு கொள்க.

     பொழித்த - என்பதும் பாடம். 36