940.



வாசமலர்ப் பிணைபொங்க மயிர்நுழுதி, மருங்குயர்ந்த
தேசுடைய சிகழிசையிற் செறிகண்ணித்
                             தொடைசெருகிப்,
பாசிலைமென் கொடியின்வடம் பயிலநறு
                              விலிபுனைந்து,
காசுடைநா ணதற்கயலே கருஞ்சுருளின் புறங்கட்டி, 
15

     940. (இ-ள்.) வாசமலர்ப்பிணை பொங்க - மணமுடைய
மலர் மாலை விளங்கிக்காட்ட; மயிர்நுழுதி....சிகழிகையில் -
மயிரைக்கோதிப் பக்கத்தில் மேலுயரும்படி விளக்கமாக எடுத்து
முடித்த சிகழிகையில்; செறி......செருகி - நெருங்கக் கட்டிய
கண்ணிமாலையைச் செருகி; பாசிலை......புனைந்து - பசிய
இலையுடைய மெல்லிய கொடிகளாலாகிய வடத்தில் நறுவிலியைப்
புனைந்து; காசறு...கட்டி - பொன் காசுகள் கட்டிய கயிற்றினால்
கரிய மயிர் முடியின் புறத்தினைக்கட்டி, 15

     940. (வி-ரை.) மயிர் நுழுதி. மயிரைக் கோதி.

     உயர்ந்த - சிகழி உயர எடுத்து முடித்துக் கட்டிய குடுமி.

     செறிகண்ணித் தொடை - பூக்களை நெருக்கமாகக்கட்டிய
கொண்டைமாலை.

     பாசிலை...புனைந்து - பசிய இலையுடைய கொடியினை
வடமாக முறுக்கி அதில் மிக விரவும்படி நறுவிலிப் பூக்களைப்
புனைந்து. நறுவிலி இலை என்று கூறுவாருமுண்டு. நறுவிலி -
முல்லைக் கருப்பொருளாகிய மரம்.

     கருஞ்சுருள் - கரிய மயிர்ச்சுருள் முடிச்சு. இதன் புறத்தைக்
கொடியின் வடத்தின் அருகே அமையும்படி வைத்துக் காசுடை
நாணினால் கட்டி என்க.

     கருஞ்சுருளின் புறம் என்றதற்குக் கரிய சுருண்ட
பச்சிலையின் விளிம்பு - ஓரம் என்பாரு முண்டு. 15