964.



திசைமுழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன்னெருங்கி
மிசைமிடைந்து வரும்பொழுது வேற்றொலிகள்
                                விரவாமே
யசையவெழுங் குழனாதத் தஞ்செழுத்தாற்
                              றமைப்பரவும்
இசைவிரும்புங் கூத்தனா ரெழுந்தருளி
                           யெதிர்நின்றார்.
 39

     (இ-ள்.) வெளிப்படை. எல்லாத் திசைகளினின்றும்
தேவர்களுக்கு முன்னே மேல் நெருங்கிச் சிவகணநாதர்கள்
வரும்பொழுது, குழலிசைக்கு மாறாகிய வேற்றொலிகள் இடைப்
புகுந்து கலக்காமல். அசைய எழுகின்ற குழல்நாத இசையினில்
அமைத்த திருவைந்தெழுத்தினாலே தம்மைப் பரவுகின்ற
இசையினை விரும்புகின்ற அருட்கூத்தனாராகிய சிவபெருமான் (மேற்சொல்லியவாறு) எழுந்தருளி வந்து எதிரில் நின்றார்.

     (வி-ரை.) கணநாதர்முன்......நெருங்கி - இறைவனது
திருமுன்பு, கணநாதர்கள் தேவர்களுக்கு முன்னேநிற்கும்
உரிமையுடையவர்கள். இதற்கு முன் தேவர்கள் வந்து கூடி
இசையின் மயங்கி யணைந்ததனை 957 - 958 பாட்டுக்களிற்
கூறினார். அவர்களுக்கு முன் இடம் பெற்று இருக்க வேண்டியவரும்
சிவபெருமானுடன் வருவோரும் ஆதலின் சிவகணங்கள் நெருங்கித்
தேவர்களை ஒதுக்கி முற்பட்டு வந்தனர் என்க. "தேவர் கணங்க
ளெல்லாம் நம்மிற்பின் பல்ல தெடுக்க வொட்டோம்" (திருப்பொற்
- 5) என்ற திருவாசகமும் காண்க. இவ்வாறு இசையரங்கு
முதலியவற்றில் தகுதியில்லாதார் முன்வந்து கூடிக்கொள்ளுதலும்
தக்கவர் பின் வந்து அவர்களை ஒதுக்கி யொதுக்கி முன்னிருத்தலும்
இயல்பாக இந்நாளிலும் காணும் காட்சியாம்.

     வேற்றொலிகள் விரவாமே இரை விரும்பும் - என்று
கூட்டுக. இறைவர் தம்முடன் வரும் பூதகணங்கள் முதலாயினார்
முழக்கும் முழவு சங்கம் முதலிய பல வகை இயக்கங்களின் ஓசை
விரலின், குழலின் ஓசை கெடுமாதலின் அவை விரவாமே (வேறொரு
ஒலியும் உட்கலக்காமல்) தனிக்குழலிசையைக் கேட்க விரும்பினார்
என்பதாம். பூதகணங்கள் சத்தமின்றிப்புடைசூழ என்றபடியாம்.
"தொண்டரை யாளும் தொழில் கண்டே, வீதியி லாடிப் பாடி
மகிழ்ந்தே மிடைகின்றார், பூதியி னீடும் பல்கண நாதர் புகழ்வீரர்"
(ஏயர்கோன் - புரா - 368) என மற்றையிடங்களிற் கூறுமாறும்
காண்க.

     அசைய எழும் குழல் நாதம் - இசை ஒலியலைகளாகப்
புடை பெயர்ந்து பரம்பரையிற் பரவி மேற்செல்லும் இயல்புடைய
குழல்நாதம் என்பார் அசைய எழும் என்றார். மேல் 952-ல்
உரைத்தவை பார்க்க.

     நாதத்தாற் பரவும் என்னாது, நாதத்து அஞ்செழுத்தாற்
பரவும்
என்றது, குழலின் இசைநாதத்துக்கன்றி, அவ்விசையின்
உள்ளுறையாகக் கொண்ட ஐந்தெழுத்தாற் பரவியதனாலே
சிவபெருமான் வெளிப்பட்டு வந்தனர் என்றறிவித்தற்கு.
அதுகாரணமாகவே இசை விரும்பும் கூத்தனார் என்றும் கூறினார்.

     எதிர் நின்றார் - "சிவனெனு மோசை யல்ல தறையோ
வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே", "பவனெனு நாமம் பிடித்துத்
திரிந்து பன்னா ளழைத்தால், இவனெனைப் பன்னா ளழைப்பொழி
யானென் றெதிர்ப்படுமே" என்று அப்பர் சுவாமிகளருளியபடி
நாதத் திசையினால் ஐந்தெழுத்தாகிய சிவநாமத்தினைப் பிடித்துப்
பன்னாளழைத்துப் பரவிய ஆனாயர் முன்பு, சிவபெருமான்
எதிர்ப்பட்டு நின்றனர். அவரது நாமமே திருவைந் தெழுத்தாம்
என்பது "ஆலைப் படுகரும்பின் சாறு போல வண்ணிக்கு
மைந்தெழுத்தி னாமத் தான்காண்", "நின்னாமத் திருவெழுத் தஞ்சும்
தோன்ற", "படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென்னாவிற்
கொண்டேன்" என்பனவாதி திருவாக்குக்களால் அறியப்படும்.

     கூத்தனார் - அருட்கூத் துடையார் - நடராசர். அருள்புரிய
வருகின்றாராதலின் இப்பெயராற் கூறினார். முன்னர்ப்
"பொற் பொதுவினடம் புரியும் ஐயன்" (962) என்றும், பின்னர்ப்
"பொற்பொதுவி னிடைப்புக்கார்" (966) என்றும் கூறிய கருத்துமிது.
401, 437, 488, 648, 897, 923 முதலிய வற்றானும் இக்கருத்துப்
பெறப்படுதல் காண்க. 39