993. |
முழுதும்பழு
தேபுரி மூர்க்க னுலந்த போதின் எழுதுங்கொடி போல்பவ ருட்பட வேங்கு சுற்றம் முழுதும்புலர்
வுற்றது; மற்றவ னன்ன மாலைப் பொழுதும்புலர் வுற்றது; செங்கதிர் மீது போத. 26 |
(இ-ள்.)
வெளிப்படை. முழுவதும் தீமைகளையே செய்த
மூர்க்கன் இறந்துபட்டபோது எழுதும்கொடி போல்பவராகிய
அவனது பெண்டிர் உட்பட ஏங்குகின்ற சுற்றம் முற்றவும் புலம்பி
வாட்டமுறுவாராயினர்; மற்றவனைப் போன்ற மாலைக்குப்
பின்வரும் யாமப்பொழுதும் செங்கதிரவனாகிய ஞாயிறுமேல் வர
விடியலுற்றது.
(வி-ரை.)
முழுதும் பழுதேபுரி மூர்க்கன் - இப்பழுதுகள்
978 முதல் 984 வரை கூறப்பட்டன. அவை ஒவ்வொன்றும் பழுதே
என்று முன்காட்டப்பட்டமையின் இங்கு இவ்வாறு தொகுத்துக்
கூறினார். மூர்க்கன் - "முதலையு மூர்க்கனுங்
கொண்டது விடா"
என்றபடி தீமைகளைத் தீமை என்றறிந்தபின்னும் மேன்மேல் விடாது
செய்வோனாதலின் இவ்வாறு கூறினார்.
உலத்தல்
- இறத்தல். "உலந்தார் தலையிற் பலிகொண்
டுழல்வாய்" (கொல்லி - அதிகை - 7) என்ற அப்பர் சுவாமிகள்
தேவாரம் காண்க.
எழுதும்
கொடிபோல்பவர் - (அவனது) மனைவியர்.
அவன் மிக விரைவில் இறந்தொழிந்தமையால் சடுதியில் நேர்ந்த
அதன் காரணமறியமாட்டாமையாலும், சிறிதும் எதிர்பாராதநிலையில்
இடி வீழ்ந்ததுபோல அது தாக்கியபடியாலும் தம்பித்து
அசைவற்றவராயினர் என்று குறிப்பார் கொடிபோல்பவர்
என்னாது
எழுதும்கொடிபோல்பவர் என்று கூறினார். எழுதுங்கொடி
-
சுவரில் கொடி போல எழுதும் ஓவியம் இவ்வாறன்றி, படம் எழுதி
உயர்த்திய கொடி நிற்கலாற்றாது பெருங்காற்றா லலைப்புண்பதுபோல
நிலைகுலைந்தனர் என்றுரைத்தலுமாம். கொடி போல்பவர்
-
குலமகளிர் எனவும், ஏங்கு சுற்றம் - காமமொழிந்த
நுகர்ச்சி
கொடுத்தற்குரிய மகளிர் (சிந்தா - 296) எனவும், புலர்வுற்றது
-
அழிந்தது எனவும் உரைப்பாருமுண்டு.
உட்பட
- சுற்றத்தார் என்ற பொதுப்பகுப்பினுள் மனைவியரும்
அடங்கியவர்களாதலின் இவ்வாறு கூறினார். தலையன்பினராகி
அவனுடன் கழியாது "இல்லும் பொருளும் இருந்த மனையளவே"
(ஐயடிகள் - க்ஷேத் . வெண் - 14) என்றபடி உயிர்
வைத்திருந்தார்களாதலின் மனைவியரை வேறு பிரித்தும் சுற்றத்துடன்
ஒன்று சேர்த்து உட்பட ஏங்கு சுற்றம் முழுதும் புலர்வுற்றது
என
முடித்தார்.
முழுதும்
புலர்வுற்றது - முழுமையும் புலர்ச்சியை அடைந்தது.
எல்லாவகையானும் என்க. புலர்தல் - வாட்டமுறுதல்.
ஏங்கும்
சுற்றம். ஏங்கும் என்றதன் மேலும் புலர்வுற்றது
என்றது,
அவனுக்குக் குலமைந்தரு மின்மையாலும் (994), அவன் புதிதாய்
வந்து வலிந்து நிலங்கொண்டமையாலும், இங்குத் தமக்கு வேறு
பற்றுக்கோடின்மையாலும், ஒருவாற்றாலும் தேறுதல் அடையாத
வருத்தமிகுதி குறித்தது. முழுதும் - சுற்றம் முழுமையும்
என்றலுமாம்.
உம்மை முற்றும்மை.
மற்றவன் அன்ன மாலைப் பொழுதும் புலாவுற்றது -
கொடுங்கோன்மையும் (988), அடியாரை அலைத்த தீமையும் (992),
கருதி அவனை மற்றவன் என்றார். "மற்றவன்
முன் சொல்லி
வரக்குறித்த" (640) என்றது பார்க்க. மற்று -
வினை மாற்றின் வந்த
தென்பாரும், அசை என்பாரும் உண்டு. மற்றவன் அன்ன மாலைப்
பொழுது - கொடியோன் (981), வஞ்சகண் (982), கொடுங்கோன்மை
செய்வான் (984), பாதகன் (985), கண்டகன் (986), வன்புன்கண்
விளைத்தவன் (989), தீயோன் (992) என முன்னர்க்கூறியவாற்றால்
தாமதகுணத்தால் அலைக்கப்பட்டவனாதலும், தாமதத்துக்கு நிறம்
கருமையாதலும் குறித்து இருள் உடைய மாலைப்பொழுதினுக்கு
அவனை உவமித்தார். மாலைப்பொழுது அவனது
இதயத்தை
ஒத்ததென்பாரும் உண்டு. மாலைப்பொழுது -
இங்கு இருண்ட
இரவு குறித்தது. வினையும் உருவும்பற்றி வந்த உவமம்.
தமக்குரிய சார்பு
பிரிந்து வருந்துவோர்க்கு மாலைப்பொழுதும்
இரவும் பகையாய் நிற்றல் அகப்பொருளியல். இரவுறு துரயத்திற்
கிரங்கி யுரைத்தல் முதலிய அகத்துறைகள் காண்க. "வந்தது,
பையுண் மாலை தமியோர் பனிப்புற" (304), "புலரும் படியன்
றிரவென் னளவும் பொறையுந் நிறையும் மிறையுந் தரியா" (322),
"தனிமை கூரத் தளர்வார்க்குக், கங்குல் பகலாய்ப் பகல்கங்கு லாகிக்
கழியா நாளெல்லாம்" (ஏயர்கோ. புரா. 313) முதலியவையும் ஈண்டுச்
சிந்திக்க. தமது நற்சார்பாகிய சிவச்சார்பு என்னும் நாயகனைப்
பிரிந்த பாண்டிநாட்டுக்கு, அவனது நாள்கள் இரவாகவும்,
அவனிறந்தமை அவ்விரவு புலர்ந்தமையாகவும் விளங்கிற் றென்பது
குறிப்பார் அவனன்ன மாலைப் பொழுது என்றார்.
பொழுதும்
புலர்வுற்றது - சுற்ற முழுதும் புலர்வுற்றது
மன்றிப் பொழுதும் என உம்மை இறந்தது தழுவியது. இழிவு
சிறப்பும்மை என்றலுமமைமயும். புலர்வுற்றது -
சொற்பின் வருநிலை
என்ற சொல்லணி. (சொற்சிலேடை என்பர்).
செங்கதிர்
மீது போத - பொழுதும் புலர்வுற்றது -
என்று பொழுதுபுலர்தலுக்குக் காரணங்கூறினார். செங்கதிர்மீது
என்றதனால் கருமையொளி தாழ்ந்துபோத, அவன் மேற் செங்கதிர்
போந்ததென்ற குறிப்பும், அவனன்ன மாலைப் பொழுது
என்றமையால் மூர்த்தியாரன்ன செங்கதிர் என்பதும் பெறப்படும்.
கொடியோன் கீழே வீழப் பெரியோர் அவ்விடத்து மேலெழுந்தனர்
என்பதும் கொள்க.
சுற்றம்
அழுதும் புலர்வுற்றது - என்பதும் பாடம. 26
|