திருத்தொண்டர் புராணமும் - உரையும்407

யின் வடிவம் நோக்கி நாககிரி - நாகாசலம் எனவும் வழங்குவர்; நாகம் (ஆதிசேடன்) பூசித்த தல வரலாறும் உண்டு. பிரமன் - விட்டுணு - துர்க்கை - கந்தர் பூசித்த வரலாறுகளும் உண்டு. இது முருகனுக்குச் சிறப்பாயுரிய குன்று தோறாடல்களுள் ஒன்று. திருப்புகழ் பெற்றது. இத்தலத்து எழுந்தருளிய செங்கோட்டு வேலரது அழகின் பெருமை பற்றிச், "செங்கோடனைக் கண்டுதொழ, நாலா யிரங்கண் படைத்தில் னேயந்த நான்முகனே" என்று பாராட்டினர் அருணகிரியார்; மாதொருபாகர் என்று விளக்கமாய்ச் சைவத்திறத்தில் வேத சிவாகமங்களாலும், மாபுராணங்களாலும் பேசப்பட்ட "தொன்மைக் கோலமே" இங்கு எழுந்தருளிய திருமூலட்டானனாருடைய திருவுருவமாகும் தனிச் சிறப்புடைய தலம். மலைமேல் உள்ள தலம்; மலையில் பல அரிய தூய நீர்நிலைகள் உள்ளன. அதிசயங்களும் அனேகமுள்ளன. இங்குப் பரிசனங்கள்பாலும் நாட்டினர்பாலும் முடுகிய நளிர்சுரத்தை ஆளுடைய பிள்ளையார் பதிகம் பாடிப் போக்கியருளிய வரலாறு முன்னர்ப் புராணத்துட் காண்க. போதாயன சூத்திரம் காசிய கோத்திரத்தில் காசித் தலபுராணம் பாடிய சங்கர நாராயணவையர் மகன் கவிராச பண்டிதர் இத் தலபுராணம் பாடியுள்ளார். அதற்குச் சிற்றம்பல உபாத்தியாயர் (ஏர் விளம்பி - ஆவணி - 14-ந்தேதி திங்கட் கிழமை - அமர பக்கம் பதின்மூன்றாந் திதி பூசம் கூடிய நன்னாளில் தொடங்கி எழுதிய) உரையுடன் கி.பி. 1876 ஆண்டில் அச்சிடப்பட்டுள்ளது. பருவத காண்டம் (அர்த்த நாரீசர் பெருமை கூறுவது); காந்த காண்டம் (முருகன் பெருமை கூறுவது); தீர்த்தகாண்டம் (சுனைகளின் பெருமைய கூறுவது); என்று மூன்று காண்டங்களை யுடையது. வடமொழி மான்மியத்தின் வழித்தாகலின் இப்புராணத்துள் ஆளுடைய பிள்ளையார் அருள்பற்றிய வரலாறு பேசப்படவில்லை. மகப்போறு முதலிய வரங்கள் தரும் வறடிக்கல் (வந்திய - பாடாணம் என்பர் வடவர்) என்ற சிகரம் ஒன்று இன்றும் விளக்கமாய் வழிபடப் படுகின்றது. சுவாமியும் அம்மையும் - அர்த்தநாரீசர்; மாதிருக்கும் பாதியன்; கந்தர் - செங்கோட்டுவேலர்; தீர்த்தம் - குமார தீர்த்தம்; நாக தீர்த்தம்; சிவதீர்த்தம் முதலிய சுனைகள்; பதிகங்கள், தலப்பதிகம் 1. பொதுப் பதிகம் 1.
     இது சங்ககிரி துருக்கம் என்ற நிலையத்தினின்றும் தென் கிழக்கில் கற்சாலை வழி 5 நாழிகையில் அடையத்தக்கது. எல்லா வசதிகளும் உண்டு.
 
2234.ஆய குறிப்பினி லாணை நிகழ வருளிச்செய்து
தூய பதிகத் திருக்கடைக் காப்புத் தொடுத்தணிய
மேயவப் பொற்பதி வாழ்பவர்க் கேயன்றி மேவுமந்நாள்
தீய பனிப்பிணி யந்நா டடங்கவுந் தீர்ந்ததன்றே.
334
     (இ-ள்.) ஆய...அருளிச்செய்து - அவ்வாறாகிய அருட் குறிப்புடனே திருஆணை நிகழும்படியாக அருளிச்செய்து; தூய....அணிய - தூய திருப்பதிகத்திற்குத் திருக்கடைக்காப்பும் தொடுத்து அணிந்தருளவே; மேய...அன்றி - பொருந்திய அந்தத் திருத்தலத்தில் வாழ்கின்றவர்களுக்கே யல்லாமல்; அந்நாள் - அந்நாளிலே; அந்நாடு அடங்கவும் - அந்நாடு முழுமையும்; அன்றே தீய பனிப்பிணி தீர்ந்தது - அப்பொழுதே தீய பனிச்சுரமானது நீங்கியது.
     (வி-ரை.) ஆய குறிப்பு - முன் (2233) பாட்டிற் கூறியபடி அவ்வாறாகிய திருவுள்ளக்குறிப்பு.